தினமலர் விமர்சனம்
அ.செ.இப்ராகிம் இராவுத்தர் தயாரிப்பில், ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த் நடித்து, பல வருடங்களுக்கு முன் வௌிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புலன் விசாரணை. இன்றளவும் பேசப்படும் அந்த வெற்றிக்கு மகுடம் சூட்டும் விதமாக அதே தயாரிப்பாளர், அதே இயக்குநர், அதே வசனகர்த்தா உள்ளிட்டோர், கேப்டன் விஜயகாந்த்திற்கு பதில் அஜானுபாகுவான பிரஷாந்த் நடிக்க உருவாக்கி வௌிக்கொண்டு வந்திருக்கும் திரைப்படம் தான் புலன் விசாரணை-2.
கதைப்படி, இந்திய பெருங்கடலில் அரசாங்கத்தின் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப அதிகாரிகள் 15 பேர் குடும்பத்துடன் காஷ்மீர், குலுமணாலிக்கு சுற்றுலா போகின்றனர். போன இடத்தில் அவர்கள் சென்ற பேருந்து 1000 அடி பள்ளத்தாக்கில் உருண்டு தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் அனைவரும் இறந்து விடுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பேருந்தை தவறவிட்ட ஒரு பெண் இன்ஜினியர், டில்லி ரயில்வே நிலையத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சுடப்படுகிறார்.
அந்த பெண் இன்ஜினியரை டில்லி காவல்துறையில் பணிபுரியும் ஐபிஎஸ்., அதிகாரி சபாரத்தினம், குற்றுயிரும் குலை உயிருமாக காப்பாற்றி, டில்லி மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சையில் தேறிவரும் அப்பெண்ணின் பெற்றோர் என சொல்லிக் கொண்டு வரும் ஒரு நடுத்தர வயது தம்பதியர், ஐ.பி.எஸ்., சபாரத்தினம் ஹாஸ்பிட்டலில் இல்லாத சமயம் பார்த்து அந்த பெண்ணை ஐ.சி.யு.வில் வைத்தே தீர்த்து கட்டிவிட்டு எஸ்கேப் ஆகின்றனர்.
இதனால் வெகுண்டெழும் அசிஸ்டண்ட் கமிஷனர் சபாரத்தினம் அந்த கேசை கையில் எடுத்து புலன் விசாரணையில் இறங்குகிறார். அதில் குலுமணாலியில், பெட்ரோலிய தொழில்நுட்ப அதிகாரிகள் சென்ற பேருந்து விபத்தில் தீக்கிரையாகவில்லை, திட்டமிட்ட சதியால் தீக்கிரையானது என்பதில் தொடங்கி இன்னும் பல உண்மைகளும் வௌிவருகிறது. இதன் பின்னணியில் பெட்ரோலிய துறையில் தொடர் ஊழல் புரிந்து கோடி கோடியாக சம்பாதிக்கும் திட்டத்துடன் பல அரசியல் புள்ளிகளும், பெரும்புள்ளிகளும் இருப்பது வௌிச்சத்திற்கு வருகிறது. அவர்கள் அனைவரது முகத்திரையையும் கிழித்து, அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி சபாரத்தினம் தண்டனை வாங்கித்தர போராடுகிறார். அவரது போராட்டத்தில் எதையெல்லாம் இழக்கிறார்? எதையெல்லாம் பெறுகிறார்.? என்பதுதான் புலன் விசாரணை-2 படத்தின் பரபரப்பான மீதிக்கதை!
பிரஷாந்த், ஐ.பி.எஸ்., அதிகாரி சபாரத்தினமாக நீண்ட நாட்களுக்கு அப்புறம் பிச்சி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் அதிரடிகளில் சில இடங்களில் புலன் விசாரணை விஜயகாந்த்தையே மிஞ்சி, விஞ்சி நிற்கிறார் பிரஷாந்த். அதற்காக குடும்பத்தை இழந்து, ஏழெட்டு குண்டுகளை உடம்பில் வாங்கிய பின்பும் பிரஷாந்த் உயிர் பிழைத்து எழுவது சினிமாட்டிக்காக இருக்கிறது. மற்றபடி கார்த்திகா, பாருல் யாதவ் உள்ளிட்டோருடன் அவர் ஆடிப்பாடும் டூயட் ரிலாக்ஸ் போனஸ்!
கார்த்திகா, பாருல் யாதவ் என இரண்டு நாயகியர். இருவரில் கார்த்திகா ஹோம்லி குல்கந்து என்றால் பாருல் கிளாமர் பாசந்தி... வாவ்! அஸ்வினி, குயிலி, நிருபராக ஆர்.கே.செல்வமணியின் ரோஜா உள்ளிட்டோரும் நடிகையர் நடிப்பில் கச்சிதம்!
பிரஷாந்த் மாதிரியே, நல்லவர்களாக வரும் மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோருடன், கெட்டவர்களாக வரும் ஆர்.கே., ராதாரவி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் புலன் விசாரணை-2-க்கு புதுமை சேர்த்திருக்கின்றனர். மன்சூரின் வாய்ஸூம், வசனமும் ஆங்காங்கே சென்சாரில் சிக்கி சின்னாபின்னமாவது சற்றே எரிச்சல்.
இராஜராஜனின் ஔிப்பதிவு, ஜோஸ்வா ஸ்ரீதர்-எஸ்.பி.வெங்கடேஷ் இருவரது இசை, லியாகத் அலிகானின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், அடிக்கடி எகிறும் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமான ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்திருப்பதற்காகவே இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில், புலன் விசாரணை-2 - போரடிக்காது ரசனை!