தினமலர் விமர்சனம்..
நடிகர்கள் : பிருத்விராஜ், ஜாவேத் ஜப்ரி, ரெஞ்சி பணிக்கர், அங்கனா ராய் மற்றும் பலர்
இசை : ரதீஷ் வேகா - ரெக்ஸ் விஜயன்
ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான்
இயக்கம் : மேஜர் ரவி
கதை : எல்லையில் காவல் காக்கும் இந்திய வீரனுக்கும், பாகிஸ்தான் வீரனுக்கும் இடையே பூக்கும் நட்பு..
இந்திய பாகிஸ்தான் எல்லையில், தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்தும் மிகவும் அபாயகரமான பகுதி தான் பிக்கெட்-43.. அந்தப்பகுதியின் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்ததால், அவருக்கு பதிலாக ராணுவ வீரரான பிருத்விராஜ் அனுப்பப்படுகிறார். இதனால் அவருக்கு கிடைத்த விடுமுறையும் கேன்சலாவதோடு, அவர் ஊருக்கு செல்லாததால் அவர் காதலிக்கும் முறைப்பெண்ணுக்கும் வேறு நபருடன் திருமணம் நடந்துவிடுகிறது.
பிக்கெட்-43 பகுதியில் கம்பி வேலிக்கு இந்தப்பக்க எல்லையில் உள்ள பதுங்கு குழியில் பிருத்விராஜும் அவருக்கு துணையாக பகாடி என்கிற நாயும் இருக்க, அந்தப்பக்க பாகிஸ்தான் எல்லையில் ஏற்கனவே இருந்த வீரன் ஆறுமாத ஷிப்ட் முடிந்து கிளம்ப, அவருக்கு பதிலாக வருகிறார் ஜாவேத் ஜப்ரி. முதலில் இருந்த வீரனின் சிலநாள் அடாவடியால் ஜாவேத்தையும் ஆரம்பத்தில் உஷாரான மனோபாவத்துடனேயே பார்க்கிறார் பிருத்விராஜ்..
ஆனால் போகப்போக ஜாவேத்தின் நல்ல குணம் கண்டு ஆச்சர்யப்படும் பிருத்விராஜ், அவருடன் நட்புக்கரம் நீட்டுகிறார். தனிமையில் இருக்கும் இருவரும் தங்களது நாடு, குடும்பம், ரசனை உட்பட எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர்.. இந்த நிலையில் திடீரென தீவிரவாதிகள் பிக்கெட்-43 பகுதி வழியாக ஊடுருவ முயற்சிக்கின்றனர்.. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடுடைய ஜாவேத்தும் பிருத்வியுடன் சேர்ந்து எதிரிகளுடன் சண்டையிடுகிறார். இறுதியில் வென்றது தீவிரவாதமா..? மனிதமா என்பது தடக் தடக் க்ளைமாக்ஸ்..
பனி படர்ந்த எல்லைப்பகுதியில் குண்டடிபட்ட நிலையில் இருக்கின்ற பிருத்விராஜின் ஞாபகங்களாக விட்டுவிட்டு விரிகிறது படம்.. தாயைப்பார்க்க சொந்த ஊருக்கு செல்வதற்காக லீவுக்கு ஏங்குகின்ற, விடுமுறை மறுக்கப்பட்டு,, அதேசமயம் மாற்றுப்பணிக்காக ஆபத்தான பகுதிக்கும் அனுப்பப்படும்போது, ஒரு சராசரி இந்திய ராணுவ வீரன் தான் பிருத்விராஜின் முகத்தில் தெரிகிறான்.
எல்லையில் தனிமை தெரியாதிருக்க நாயுடன் காட்டும் பிரியம், எதிரி நாட்டு வீரன் நல்லவன் என அறிந்து அவனுடன் காட்டும் நட்பு, இறுதியில் தன்னை காப்பதற்காக தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கிய அந்த பாகிஸ்தான் வீரனை, காப்பாற்ற படும்பாடு என படம் முழுவதும் ஹவில்தார் ஹரியாக வாழ்ந்திருக்கிறார் பிருத்விராஜ்..
பாகிஸ்தான் ராணுவ வீரராக ஜாவேத் ஜப்ரி சரியான தேர்வு.. ஒரு நேர்மையான பாகிஸ்தானிய வீரன் எப்படி இருப்பான் என்பதை தனது நடிப்பால் கண்முன் நிறுத்துகிறார் ஜாவேத். நாட்டைப்பற்றி தவறாக சொல்லும்போது படீரென பொங்குவதும், தீவிரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்போதும் நெகிழ வைக்கிறார்.
பிருத்விராஜுடன் கூடவே ஒரு கதாபாத்திரமாக பயணிக்கும் 'பகாடி' என்கிற நாய் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. பட்டி என அடுத்தவரை திட்டும்போது ரோஷத்துடன் குலைத்து தனது எதிர்ப்பை தெரிவிப்பது, தண்ணீரில் இறங்க பயந்துகொண்டு ஒவ்வொரு முறையும் பிருத்விராஜை தூக்க சொல்வது, கடைசியில் குண்டடிபட்ட பிருத்விராஜை வீரர்கள் தூக்கி செல்லும்போது, இடையே ஓடும் அந்த வாய்க்காலை கடக்கமுடியாமல் பிருத்வியின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தபடியே நின்றுவிடுவது என காட்சிக்கு காட்சி தனது நடிப்பை அதுவும் வெளிப்படுத்த தவறவில்லை.
ராணுவ கதைக்களங்களை வைத்து இயக்குனர் மேஜர் ரவியே இதற்குமுன் பல படங்களை இயக்கியுள்ளார்.. ஆனால் இந்தமுறை இருநாட்டு வீரர்களுக்கான நட்பை சொன்னதில்தான் இந்தப்படம் தனித்துவம் பெறுகிறது. உண்மையில் எல்லைப்பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இப்படி ஒரு நட்பும் நேசமும் இருந்தால் தீவிரவாதத்திற்கு வழியேது என பொட்டில் அறைகிற மாதிரி காட்சிகளை அடுக்கியிருக்கிறார் மேஜர் ரவி.. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் நம்மை பதைபதைக்க வைத்து கடைசியில் அனைவரையும் ஆர்ப்பரிப்புடன் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார் மேஜர் ரவி..
பிக்கெட்-43 - மேஜர் ரவிக்கும் பிருத்விராஜுக்கும் கொடுக்கலாம் ஒரு ராயல் சல்யூட்..!