தினமலர் விமர்சனம்
ரசம் - விமர்சனம் (மலையாளம்)
நடிகர்கள் : மோகன்லால், இந்திரஜித், நெடுமுடி வேணு, தேவன், வருணா ஷெட்டி
இசை : ஜாப் குரியன் - விஸ்வஜித்
ஒளிப்பதிவு : கிரீஸ் கமல்
இயக்கம் : ராஜீவ்நாத்
மோகன்லாலின் நண்பர் தேவன்.. அவரது மகள் வருணாவுக்கு அரபு நாடான தோகாவில் திருமணம் நடக்க இருப்பதால், அதற்கான சமையல் காண்ட்ராக்டை கேரளாவில் இருக்கும் பாரம்பரிய சமையல்காரரான நெடுமுடி வேணுவிடம் ஒப்படைக்கிறார். தனது மகன் இந்திரஜித் உட்பட 15 பேருடன் தோகா வருகிறார் நெடுமுடி வேணு. வந்த இடத்தில் மணமகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் இந்திரஜித். இதை யாரிடாமாவது சொல்லலாமா என தவிக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முதல் நாள் இரவு நெடுமுடி வேணுவிற்கு மைல்டான ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
டாக்டர் அவரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டதால், ஒருபக்கம் சமையல் ஏற்பாடுகளை கவனிக்கவேண்டிய நிர்ப்பந்தம், இன்னொரு பக்கம் மணமகன் பற்றிய உண்மை தெரிந்ததால் ஏற்பட்ட குழப்பம் இரண்டும் இந்திரஜித்தை அலைக்கழிக்கின்றன.. அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வரும் மோகன்லாலின் உதவியால் இரண்டு பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் வாசம் வீசும் 'ரசம்' படத்தின் கதை.
படத்தில் நடிகர் மோகன்லாலாகவே வருகிறார் நம்ம லாலேட்டன். கெஸ்ட் ரோல் போல தோன்றினாலும் படம் முழுவதும் வரும்படியாக காட்சிகளை அமைத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜீவ்நாத். குறிப்பாக நண்பனுக்காக மோகன்லால் தானே சமையல்காரரை நேரில் சந்தித்து சம்மதிக்க வைப்பது, திருமண நிகழ்ச்சியில் முதல் நாள் இரவே கலந்துகொண்டு ஒவ்வொன்றையும் கவனிப்பது என மோகன்லாலின் நண்பர் வீட்டு கல்யாணத்தில் நாமும் கலந்துகொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது 'ரசம்'.
இந்திரஜித்தின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு, நெடுமுடி வேணு சமையற்கலை நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் விதம், கோடீஸ்வரன் என்றாலும் தேவனின் பண்பட்ட நடிப்பு, மணப்பெண்ணான வருணா ஷெட்டியின் வசீகரம் என படத்தை தாங்கும் தூண்கள் பல இருக்கின்றன. தோகாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுவந்த உணர்வை கொடுக்கிறது கிரிஷ் கமலின் ஒளிப்பதிவு.. சில இடங்களில் படம் மெதுவாக நகர்வது போல தோன்றினாலும் மோகன்லாலை வைத்து அதை ஈடுகட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜீவ்நாத்.
இந்த 'ரச'த்தில் சுவைக்குறைவு ஏதுமில்லை...!