விமர்சனம்
-------------------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
தங்களது உணர்வோடு ஒன்றியக் கலந்துவிட்ட மைதானம் ஒன்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் புகழ் என்ற இளைஞனின் செயல்பாடுகள்தான் புகழ் என்ற திரைப்படத்தின் கதை.
இந்தச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக, டஜனுக்கும் மேற்பட்டவர்களை (வழக்கம் போல) ஒற்றை ஆளாக வெட்டிச் சாய்க்கும் பொறுப்பான இளைஞனாக ஜெய் நடித்திருக்கிறார். வாயில் புகையிலையை அதக்கிக் கொண்டு பேசவதைப்போன்ற இவரது வசன உச்சரிப்புதான் என்னமோ போல இருக்கிறது.
கதாநாயகன் கொன்று வீழ்த்தும் நபர்களில் மந்திரி ஒருவரின் மருமகனும் இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது கெதக் என்றாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த டஜன் கொலைக் கேஸை ஆறே மாதத்தில் விசாரித்து, கதாநாயகனை நிரபராதி என நீதிமன்றம் விடுவிக்கும்போது, சட்டத்தின் விரைவான செயல்பாடு ஆச்சர்யம் அளிக்கிறது. பொதுச் சொத்தை ஆக்கிரமிக்கும் அரசியல்வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம். துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.
கருணாஸ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். கச்சிதம்!
சற்றே உள்வாங்கிய பல்வரிசையுடன் கதாநாயகி சுரபி, பனி நிறத்தில் மினுங்குகிறார். பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; நடிப்புகூட வேண்டாம் எனும்படியான ஜில் தோற்றம். அதனால்தானோ என்னவோ அதிகமாக நடித்து அவரும் சிரமப்படவில்லை; நம்மையும் சிரமப்படுத்தவில்லை.
கதாநாயகன் அந்த இடத்துல நம்மை ஒண்ணும் செய்ய முடியாது. நம்ம ஆளுங்க அங்க அதிகம் என்பது, இவள்ளவு காசு கிடைக்கும்னா நானே கவுன்சிலராகி இருப்பேனே என்பதும் அவரது பொதுத் தொண்டு இமேஜூக்கு கரும்புள்ளிகள் இல்லீங்களா இயக்குநரே?
வழக்கமான குத்துப்பாட்டுகள், மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றுக்கும் அடையாளமாக மதுவருந்தும் காட்சிகளுடன் கூடுதலாக வாந்தி எடுப்பதையும் சேர்த்து, தான் மாத்தி யோசித்திருப்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். உவ்வே!
அரசியலில் முன்னுக்கு வரத் துடிக்கும் தாஸ் பாத்திரம் வெகு யதார்த்தம். நடித்திருப்பவர் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார். இவரு பெரிய எம்ஜிஆரு! ஊர்ல இருக்கிற கிழவிக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுராரு என்பது போல ஆங்காங்கே குண்டூசி வசனங்கள் புன்முறுவலை வரவழைக்கின்றன. பெண்களை மட்டமாகக் கிண்டல் செய்யும் காட்சிகள் அதிகம். அப்போதெல்லாம் தியேட்டரில் விடலைகளின் ஊளைச் சத்தம் எழுந்து அடங்குகிறது. கூடவே பெண்களும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். மஹா ஜனங்களின் ரசனை மிரட்சியளிக்கிறது.
திரைப்படம் பார்த்து வெளிவந்த ரசிகர் விழுப்பும் ஆர். ஏழுமலையின் கருத்து: பொதுப் பிரச்னைக்காகப் பசங்க போராடுறது ரொம்ப அவசியம். அதை நல்லாச் சொல்லியிருக்காங்க. ஃபிரண்ட்ஸுங்க பண்றதெல்லாம் ஜாலியா இருக்கு. கதாநாயகி ரொம்ப அழகு. நிறையப் படம் இது மாதிரி வந்திருக்கு. படம் சுமார்.
புகழ்: படத்தின் பெயரில் மட்டும்தான்!























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!