தினமலர் விமர்சனம்
''ரெட்டை சுழி''', ''நெடுஞ்சாலை'' உள்ளிட்ட படங்களை தொடர்ந்து வளரும் நடிகர் ஆரி கதாநாயகராக நடித்திருக்கும் திரைப்படம். ஆரியுடன் 'நாடோடிகள்' அஜெய் கிருஷ்ணா, இயக்குநர் ராதா மோகனின் ஆஸ்தான நடிகர் குமரவேல் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வித்தியாசமான திரைப்படம் தான் ''தரணி''
சேகர் - ஆரி, கதிரேசன் - அஜெய், மகேஷ் - குமரவேல் மூவரும் நண்பர்கள். நேர்மையாக நியாயமாக தங்களுக்கு பிடித்தமான தொழில் செய்தும், மூவருக்கும் செட் ஆகாமல் போக, மூவரும் பிரிந்து வெவ்வேறு வழியில் போகின்றனர். அதில் 'வினை' விதைத்தவன் வினையையும், 'தினை' விதைத்தவன் தினையையும் அறுப்பது தான் ''தரணி'' படத்தின் மெஸேஜூம், மெர்சலுமான கரு, கதை, களம் எல்லாம்!
சேகராக வரும் ஆரி, வட்டிக்கு கொடுத்தவன் வாய்க்கு வந்தபடி பேசி தன் அப்பா மீதும் கை வைத்ததால் கத்தியை எடுத்து அதையே தொழிலாக்கி பெரிய ஆளாகி பின் என்னவாகிறான்.? என்பது ஒருபக்கம். படித்த படிப்புக்கேற்ற வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டிலும் வௌியிலும் ஏளனப்பேச்சுக்கு ஆளாகும் கதிர் எனும் அஜெய், ரியல் எஸ்டேட்டில் குதித்து கொள்ளை லாபம் சம்பாதித்து கொடி கட்டி பறக்கிறார். அதன்பின் அவர் என்ன ஆகிறார்.? மற்றொருபக்கம், ஹீரோ ஆகும் லட்சியம் தகர்ந்து சொந்த ஊர் திரும்பும் மகேஷ் - குமரவேல், தனக்கு தன் தந்தை கற்று தந்த 'தெரு கூத்து' மூலம் வாழ்க்கையையும், வசதியும் பெற்று வாழ்வது இன்னுமொருபக்கம்... என முக்கோணக் கதையாக, காதல், கத்திரிக்காய் என மூவருக்கும் திணிக்காமல் (விதிவிலக்கு குமரவேல் பாத்திரம்) வாழ்க்கையை போதிக்கும் விதத்தில் தரணியை பெரிதாக சலிப்பூட்டாமல் எழுதி-இயக்கி இருப்பதற்காகவே இயக்குநர் குகன் சம்பந்ததை பாராட்டலாம்.
ஆரி, அஜெய், குமரவேல் மூவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் முன்னவரும், பின்னவரும் பிரமாதப்படுத்தியிருக்கின்றனர். ரவுடி, தாதா என்றால் இனி ஆரியை தமிழ்த்திரையுலகம் தைரியமாக கூப்பிடும் என நம்பலம்.
சிநேகா மாதிரி ஒரு நடிகையை பிடித்து குமரவேலின் மாமன் மகளாக்கி, மகேஷ் - குமரவேலுக்கு மட்டும் காதல் எபிசோட் வைத்து உருக வைத்திருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது! திலகாவாக வரும் இளம் நடிகை சான்ட்ரா எமி பக்காவாக கிராமத்து மனம் கமழ வசியம் செய்திருக்கிறார்.
''அனுஷ்கா முதல் அமலாபால் வரை... அரிதாரம் பூசிய அழகு நீ தான் நிஜ அழகு...'' உள்ளிட்ட பன்ச் வசனங்களிலும் வாழ்க்கையை போதிக்கும் 'பன்ச்'களிலும் இயக்குநர் குகன் சம்பந்தம் மிஞ்சி, விஞ்சி நிற்கிறார்.
பி.என்சோனின் இசையும், ஆர்.பிரகாஷின் ஔிப்பதிவும், குகன் சம்பந்தத்தின் இயக்கத்திற்கு மேலும் வலுவூட்டி, ஒருசில குறைகள் இருந்தாலும் அது பெரிதாக தெரியாமல் பார்த்துக்கொண்டு தரணியை, தரணி புகழ வைத்திருக்கின்றன!
மொத்தத்தில், ''தரணி'' - ''நற்காரணி!''