தினமலர் விமர்சனம்
"பட்ற" எனும் டைட்டிலை பார்த்ததும் இது ஏதோ லேத்து பட்ற, நகை பட்ற...கதையாகவோ அதையும் தாண்டி கூத்து பட்ற கதையாகவோ இருக்கும் என பட்ற படத்துக்கு போனால், ஏமாந்துதான் திரும்ப வேண்டியிருக்கும். இது அரசியல்வாதிகளின் பாசறைக்கு ஆள் சப்ளை பண்றும் அடியாள் பட்ற பற்றிய கதையாக்கும்!
பதவி கிடைத்த ஒரு ஆளுங்கட்சி அரசியல் தாதாவுக்கும், பதவி கிடைக்காத அதே கட்சி தாதாவுக்குமிடையில் நடக்கும் ஈகோ மோதல் முட்டலில் குத்துப்பட்டும் வெட்டுப்பட்டும் சாகவும், சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கும் இளைஞர்களில், ஒரு அப்பாவி கல்லூரி இளைஞனும் சம்பந்தமில்லாமல் சிக்குகிறான். இறுதியில், தலைவரின் சமாதானத்தால் இணைந்து கோலோச்சும் அந்த அரசியல் தாதாக்களால் தன் குடும்பம் சிதறுண்டு போவது கண்டு சினங்கொண்டு கிளம்பும் அந்த இளைஞனால் அந்த அரசியல் அநாகரீகர்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படுகின்றனர்? என்பது தான் பட்ற படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! இதனுடன் நாயகன், நாயகியின் காதலையும் கலந்துகட்டி எதிர்படும் எல்லோரையும் வெட்ற பட்ற படத்தை போற்றுர படமாக்க முயன்றிருக்கின்றனர். பாவம்!
கண்ணனாக, கதாநாயகனாக மிதுன்தேவ், யோகேஸ்வரி எனும் நாயகியாக வைதேகி, தனா எனும் மென்மையான அதேநேரம் கொடூர வில்லனாக சாம் பால், கரிகாலன் எனும் 2 வது வில்லனாக புலிபாண்டி, நடராஜன் எனும் சப்-இன்ஸாக ஆதேஷ், தலைவராக ரேணிகுண்டா கணேஷ் உள்ளிட்டோரில் நாயகன் மிதுன்தேவையும் தாண்டி கவர்கின்றனர். தனா எனும் சாம் பாலும், சப்-இன்ஸாக வரும் ஆதேஷூம்! இருவரது மிரட்டலான நடிப்பும் பட்ற படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
ஸ்ரீகிருஷ்ணாவின் இசை, சுனோஜ் வோலயுதனின் ஒளிப்பதிவு., மணியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ஜெயந்தனின் எழுத்து இயக்கத்தில்
பழைய கதையையே புதிய பாணியில் சொல்லப்பட்டிருப்பதால் பட்ற - போற்றுகிற அளவில் இல்லாதது வருத்தம்!.