Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காஞ்சிவரம்

காஞ்சிவரம்,
25 மார், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காஞ்சிவரம்


தினமலர் விமர்சனம்


சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கை பிரச்னைதான் காஞ்சிவரம் படத்தின் கதை! அதை இன்றைய நெசவாளர் பிரச்னைகளுக்கும் பொருத்தமாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்!

கதைப்படி பட்டு நெசவாளியான பிரகாஷ்ராஜ் தன் கல்யாணத்தின்போது தன் மனைவியை பட்டுப்புடவையில் அமர வைத்து தாலி கட்டுவேன் என தனக்குள் சபதம் ஏற்கிறார். அது வறுமையின் காரணமாக இயலாமல் போக, தன் மகளை மணவறையில் பட்டுப்புடவையில்தான் அமர வைப்பேன் என்று அவருக்கு மகள் பிறந்ததும் ஊர் அறிய சபதம் செய்கிறார். வறுமையும், கம்யூனிசத்தை வளர்த்தமைக்காக பிரகாஷ்ராஜ் மீது போடப்படும் வழக்குகளும் அதற்கு வழி விட்டனவா? இல்லை... அதுவும் ஏழை நெசவாளியின் நிறைவேறாத கனவாகி போனதா? என்பது காஞ்சிவரம் படத்தின் மீதிக்கதை!

ஊரே போற்றும் திறமையான பட்டு நெசவாளியாகவும், மகளுக்காக பட்டு நூலை வாயில் வைத்து திருடி வரும் தகப்பனாகவும், கம்யூனிசத்தை வளர்க்கும் போராளியாகவும், நம்பிக்கை துரோகியாகவும் பிரகாஷ் ராஜ் பிரேம் - டூ - பிரேம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதுவும் சிறையில் இருந்து இரண்டு நாள் போலீஸ் காவலில் வந்து உடம்பு முடியாத மகளை மரணமடைய செய்யும் காட்சிகளில் பிரகாஷ்ராஜ் தானும் உருகி, நம்மையும் உருக்கி விடுகிறார். விருதுகள் நிச்சயம்!

பிரகாஷ்ராஜின் மனைவியாக ஸ்ரேயா ரெட்டியும் (விக்ரம் கிருஷ்ணாவுடனான திருமணத்திற்கு முன் திமிரு ஸ்ரேயா ரெட்டி நடித்த படமாம்!), மகளாக புதுமுகம் ஷம்முவும், பிரகாஷ் மாதிரியே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல பீரியட் பிலிம் என்பதாலோ என்னவோ, எல்லோரும் நமக்கு பீலிங் ஏற்படுத்தும் அளவிற்கு நடிக்காமல் நிஜமாகவே வாழ்ந்திருப்பது நிஜமோ நிஜம்!

திருவின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் கலையும் நம்மை சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய நாட்களுக்கு எந்த லாஜிக் மிஸ்டேக்கும், மேஜிக் டேக்குகளும் இல்லாமல் அழகாக அழைத்து போய் திரும்புகின்றன. சபாஷ்!

ஒரு பாசப்போராட்டம் மிகுந்த குடும்ப கதையின் மூலம் நெசவாளர்களின் பிரச்னையையும் சொல்லி, கம்யூனிசம் தமிழகத்தில் புகுந்த கதையையும், தமிழ் படங்களில் இவ்வளவு அழகாக பிரியதர்ஷன் மாதிரி ஒரு மலையாள இயக்குனரால்தான் சொல்ல முடியும்.

காஞ்சிவரம் - தமிழ் சினிமாவின் வரம்.

-----------------------------------

விகடன் விமர்சனம்


நெய்தலும் நெய்தல் நிமித்தமுமாக "தறி' கெட்டுப் போகும் நெசவாளியின் கதை. "நெய்பவனுக்குத் துணி சொந்தமில்லை' என்னும் கசப்பான யதார்த்தத்தின் மீது நெய்யப்பட்ட காஞ்சிப் பட்டு!

பிரிட்டிஷ் ஆட்சிக் காலம். நெசவாளி பிரகாஷ் ராஜுக்கு "பட்டுச் சேலை கட்டி ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்ட வேண்டும்' என்பது லட்சியம். அது நிராசையாகிப்போக, "என் பெண்ணை பட்டுச் சேலை கட்டித்தான் கட்டிக் கொடுப்பேன்!'' என்று ஊருக்கு உறுதி கொடுக்கிறார். இடையில் கம்யூனிஸ்ட் எழுத்தாளரின் பழக்கம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவரை உறுமவைக்கிறது. மனைவியின் இழப்பு, பட்டினிப் போராட்டம், பருவத்தில் இருக்கும் மகள் என்று பிரகாஷ் ராஜைப் பிரச்சனைகள் சுழற்றி அடிக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் அவரது "பட்டுப் புடவை' கனவு என்னவானது என்பது கலங்கவைக்கும் க(வி)தை.

ஒரு வரலாற்றுக் கதையை உணர்ச்சியும் உயிரோட்டமுமான திரைக்கதையுடன் இணைத்திருக்கும் இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கு "காஞசிவரம்', கம்பீர அடையாளம். காந்தி இறந்தவுடன் துயர இசை வாசிக்கும் ஆகாஷ்வாணியின் ஒலிபரப்பில் இருந்து புதின ருசியுடன், கவிதை அழகுடன் பின்னோக்கிய பயணத்தில் துவங்குகிறது காஞ்சிவரம். முதன்முதலாக கிராமத்தில் அறிமுகமாகும்  "மோட்டார் காரை' ஊரே கூடி ஒரு விசித்திரப் பிராணியைப் போல வேடிக்கை பார்ப்பது, உதிர்ந்து விழுந்த அரசு முத்திரையை எதற்கென்றே தெரியாமல் தொகுப்பியில் ஒட்டவைக்கப் பாடுபடும் போலீஸ்காரர், மனைவிக்கும் மகளுக்கும் இறுது நிமிடங்களுக்கு முன் தான் நெய்த பட்டுச் சேலையைக் காண்பிப்பது என காட்சி அமைப்புகள் கச்சிதம்

இன்ன காட்சி என்று சொல்ல முடியாதவாறு படம் முழுக்க வியாபித்து விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். பாசமுள்ள கணவனாக அன்புமிக்க தந்தையாக, ஏக்கம் நிறைந்த நெசவாளியாக, போர்க்குண மிக்க தொழிலாளர் தலைவராக என பல பரிமாணங்களிலும், இதற்கு முந்தைய நடிப்புகளின் சாயலே இல்லாமல் மிளிர்ந்து மின்னுகிறார். ஓர் ஏழை மனைவியின் பாத்திரத்தை அசலாகப் பிரதிபலித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் இயல்பான ஈரம். மகள் தாமரையாக வரும் ஷம்மு, பிரகாஷ்ராஜின் நண்பராக வரும் ஜெயக்குமார், போலீஸ் கான்ஸ்டபிள் ஜார்ஜ், நெசவுத்தறி முதலாளி என பாத்திரத் தேர்விலும், அவர்களது நடிப்பிலும் முதிர்ச்சி.

மழலைத் தாலாட்டாக மலரும் "பொன்னூஞ்சல் கட்டிலிலே..' பாடல் மயிலிறகு வருடல். இசையமைப்பாளர் எம்.ஜி.ஸ்ரீகுமார் பல இடங்களில் மௌனமும் இசையே என்பதை பின்னணி இசையில் உணர்த்துகிறார். ஒரு பீரியட் பிலிமுக்கான மனநிலையை திருவின் கேமரா கோணங்களும் லைட்டிங்கும் பிரமாதமாகப் பிரதிபலிக்கின்றன. அப்போதைய கிராமம், தறிக்கூடம், பஸ், கடைகள் என பழங்காலத்துக்கே கைப் பிடித்து அழைத்துச் செல்கிறது சாபு சிரிலின் கலை இயக்கம்.

அழகியல் நிறைந்திருந்தாலும், வறுமையில் வாடும் நெசவுத் தொழிலாளர்கள் எப்போதும் அதிகப் படி வெண்மை ஆடையுடன் வலம் வருவது உறுத்துகிறது. வீட்டின் பின்னால் இருக்கும் நெசவுத்தறி, மனைவிககும் மகளுக்குமே தெரியாது என்பதை நம்ப முடியவில்லை கதாபாத்திரங்கள் அனைத்தும் பிசிறில்லாத குரலில் நேட்டிவிட்டி இல்லாமல் பேசுவதும் ஒரு குறையே!

அத்தனை வருடங்களாக தான் நெய்த பட்டுப் புடவையால் மகளின் உடலைப் போர்த்தக்கூட முடியாமல் பிரகாஷ்ராஜ் தடுமாறும் அந்தக் கிளைமாக்ஸ் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான சினிமா. எந்த சமரசமும் செய்துக் கொள்ளாமல், ஒரு வரலாற்றை அழகான இயல்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் நிமிர்ந்து நிற்கிறார் ப்ரியதர்ஷன்!

விகடன் மார்க் (43/100).வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in