Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

யாகாவாராயினும் நாகாக்க

யாகாவாராயினும் நாகாக்க,Yagavarayinum Naa Kaakka
ஆதியின் அண்ணன், சத்யபிரபாஸ் இயக்கியுள்ள படம் இது.
13 ஜூலை, 2015 - 15:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யாகாவாராயினும் நாகாக்க

தினமலர் விமர்சனம்


மிருகம் ஆதி பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைந்து நடித்து மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் யாகவராயினும் நா காக்க!. மனிதர்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது அவர்களை அதோகதியில் விட்டுவிடும்... எனும் உண்மையையும், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு! எனும் உண்மையையும் ஒருசேர உரக்கச்சொல்லி நட்பின் புனிதத்தையும் வலியுறுத்தி இருக்கும் படம்தான் "யாகவராயினும் நா காக்க."


கதைப்படி, சகா எனும் ஆதி., ஷ்யாம், ஸ்ரீகார்த்திக், சித்தார்த் நால்வரும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள். பைனல் செமஸ்டர் எழுதி வெற்றி பெற்றுவிட்டால் அப்பாவின் பிஸினஸ், கல்யாணம் காட்சி, வேலை, வெட்டி....என தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு நட்பும் கெட்டுப்போகும் என நம்பும் நால்வரும் ஹால் டிக்கெட்டை கிழித்துப்போட்டு அடுத்த செமஸ்டர் தேர்வு வரை ஒரு ஆறுமாத காலம் ஜாலியான மாணவர் வாழ்க்கையை வாழ முடிவு செய்கின்றனர்.


அந்த ஆறு மாத காலத்தில் ஹீரோ ஆதி - ஹீரோயின் நிக்கி கல்ராணியின் காதலும், நண்பர்கள் நால்வரது நட்பும் வெகுஜோராக வளருகிறது. கூடவே, ஒரு சுபயோக சுபதினத்தில் டிசம்பர் 31ம் தேதி இரவு., நியூ இயர் பார்ட்டியில் போதையில் இந்த நான்கு நண்பர்களில் ஒருவர்., பிரியா எனும் இளம்பெண்ணுடனும், அவரது காதலருடனும் எக்குத்தப்பாய் மோத., பிரச்னை பூதாகரமாகிறது. அந்த மோதலுக்கு பின், பிரியாவும் அவரது காதலரும் காணாமல் போக., பிரியாவின் மும்பை பெரும்புள்ளி அப்பா., நான்கு நண்பர்களுக்கும் தன் மகன் மற்றும் அடியாட்கள் மூலம் வலைவீசுகிறார்.


நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சகா - ஆதியின் மற்ற மூன்று பெரிய இடத்து நண்பர்களும் தங்களது அப்பாக்களின் அட்வைஸ்படி எஸ் ஆக., வலியப்போய் மும்பை பெரும்புள்ளியின் முன் நிற்கும் ஆதி., அவரது மகள் பிரியா காணாமல்போனதற்கும், தன் நண்பர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை...என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதும், , நல்நட்பையும், நண்பர்களையும் எப்படி காபந்து செய்கிறார்...? என்பதையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் எக்கச்சக்க எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம் தான் யாகவராயினும் நா காக்க படம் மொத்தமும்!.


சகாவாக ஆதி கட்டுடல் இளைஞராக பட்டையை கிளப்பியிருக்கிறார். நடுத்தர குடும்பத்து நரேனின் பிள்ளையாக, அப்பா அம்மாவின் அட்வைஸையும் ஏற்க முடியாமல், பெரிய இடத்துப்பிள்ளைகளின் நட்பையும் விட்டுத்தர முடியாமல் அவர் படும் பாடிலும் சரி., போல்டான நிக்கி கல்ராணியின் காதலராக வுடும் ஜூட்டிலும் சரி, ஒருவித உண்மைத்தன்மை ஒளிந்திருப்பது முன்பாதி படத்தை தூக்கிப்பிடிக்கிறது. பின்பாதியில், நட்புக்காக ஆக்ஷனில் குதித்து, அடிஉதைபட்டு பின் அடித்து உதைக்கும் பாத்திரத்திலும் பலே சொல்ல வைத்திருக்கும் ஆதிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!.


கதாநாயகியாக கயல் பாத்திரத்தில் வரும் நிக்கி கல்ராணியை போல்டான பெண்ணாக காட்ட வேண்டி பைக் ஓட்டவிடுவது சரி. டாஸ்மாக்கில் பீர், மருந்துகடையில் ஆணுறை எல்லாம் வாங்கவிடுவது...எல்லாம் என்னதான் விரோதிகளை விரட்டி அடிக்கும் பர்பஸ்சுக்காக என்றாலும் ரொம்பவே ஓவராக தெரிகிறது. ஆனாலும், அம்மணி ஹோம்லி குல்கந்து ஆக தன் நடை, உடை, பாவனைகளில் ரசிகனை மகிழ்விப்பது ஆறுதல்!


பிரியாவாக வரும் ரிச்சா பலோட் சில சீன்களே வந்தாலும், நிக்கி மாதிரியே நிறைவாக தெரிகிறார். மும்பை பெரும்புள்ளி முதலியாராக வரும் ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி செம அப்ளாஸ், படத்திற்கு பெரும்ப்ளஸ். நாசர், நரேன், பசுபதி, ஹரிஷ், கிட்டி, மகாதேவன், பிரகதி, நிலா, ஆதியின் நண்பர்களாக வரும் ஷயாம், ஸ்ரீகார்த்திக், சித்தார்த் உள்ளிட்டவர்களும் உயிரைக்கொடுத்து நடித்திருக்கின்றனர். அதில், பிரகதி கொஞ்சம் ஓவராகவே நடித்து போரடிக்கிறார்


பிரசாந்த் பிரவீன் ஷ்யாமின் இசையில் கிளப் டான்ஸ் பாடல் உள்ளிட்ட ஒவ்வொரு பாடலும் ஒருவித சுபராகம். என்.சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு ஆரம்பம் தொட்டு இறுதிவரை இதுவரை நம் கண்கள் பார்த்திராத புதிய கோணத்தில் அழகழகாக ஒளிர்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்!. பின்பாதி படத்தில் படத்தொகுப்பாளர் வி.ஜெ.சாபு ஜோசப் இன்னும் கொஞ்சம் பணிபுரிந்திருக்கலாம்!.


எஸ்.குமரேசன், இயக்குநர் சத்யபிரபாஸ் இருவரது வசன வரிகளில் 22 வருஷமா உன் அப்பாவுக்கு உன்மேல வராத நம்பிக்கை, இந்த 2 மாசத்துல வந்திருக்குன்னு... அவருகிட்டே சொல்றேன்...என நாயகி நிக்கி., ஆதியிடம் சொல்வது, நான் கிருஷ்ணன்கிட்டயே பேசிக்கிறேன்..என போகிறபோக்கில் போட்டுடைப்பது உள்ளிட்ட வசன காட்சிகள் நச்-டச்!.


இயக்குநர் சத்யபிரபாஸ் "யாகவராயினும் நா காக்க" என இப்படத்திற்கு டைட்டிலும் வைத்து நா காக்காததால் எழும் பிரச்னைகளை சுவாரஸ்யமாகவும் சொல்லி நட்பை விட உயர்ந்தது எதுவுமில்லை...எனும் கருத்தையும் பதிவு செய்து இறுதியில்


யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு


எனும் திருக்குறளையும் காண்பித்து படத்தை முடிக்கிறார். அவர் காட்டும் திருக்குறளில் சொல்லிழுக்கப் பட்டு என முடிய வேண்டிய வார்த்தை இழக்கப்பட்டு என தவறாக வருகிறது!. அங்கு இழுக்கப்பட்டதாக இடம்பெற வேண்டிய வார்த்தை இழக்கப்பட்டு ஆனதும் தவறு, பின்பாதி படம் தேவையில்லாமல் இழுவையாக இழுக்கப்பட்டிருப்பதும் தவறு!.
மற்றபடி யாகவராயினும் நா காக்க எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்க, ரசிக்க வேண்டிய தரமான படமாகும்!.


அப்பா தயாரிக்க, அண்ணன் (சத்திய பிரபாஸ்) இயக்க, தம்பி (ஆதி) நடித்த "குடும்ப படம்!


தெரிந்தோ தெரியாமலோ சொல்லும் சில வார்த்தைகள், எதிராளியைக் காயப்படுத்தி எப்படி சிலரது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது என்பதுதான் கதை!

ஒரு போதை தினத்தில் ஒரு பெண்ணை விளையாட்டுத்தனமாய் போட்டோ எடுக்கிறான் ஆதியின் நண்பன். மும்பை முதலியாரின் மகளான அவள் திடீரென கொல்லப்பட, கொலையாளி யார்? என்ன காரணம்? என்பதுதான் யா.நா.கா!

ஆறரை அடி உயர ஆதி கம்பீரம். ஆட்டம், ஆக்ஷன் என்று அதகளம் பண்ணுகிறார்.

நிக்கி கலகல ராணி! மிரட்டி மிரட்டி ஆதியைக் காதலிப்பது ரசனை.

"ஆளைப் பாக்கறது, காதலிக்கிறது மட்டும்தான் ஆம்பளைங்க வேலை, அவனை வச்சுக்கலாமா கழட்டி விடலாமான்னு யோசிக்கிறது பொம்பளைங்க வேலை! - வசனத்தின் போது ஆண்கள் வலிக்க வலிக்க கைதட்டுகிறார்கள். மிதுன் சக்கரவர்த்தி "நாயகன் வாசனையுடன் வருகிறார்.

ரிச்சா (இருக்கிறார்) பலோட்! அவரைக் கொன்றது யார் என்பது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்.

அம்மாவாக வரும் பிரகதி ரொம்ப பாந்தம்.

திரைக்கதையும் எடிட்டிங்கும் கதையின் வேகத்தை இன்னமும் அதிகரிக்க வைக்கிறது. சண்முக சுந்தரத்தின் கேமரா - கூல்.

ஆதியின் பெற்றோர் விடுவிக்கப்பட்டதுமே படம் முடிந்துவிடுகிறது. அதற்குப்பிறகு ஏன் கதையை நகர்த்துகிறார்களோ யாமறியோம் பராபரமே!


யாகாவாராயினும் நாகாக்க - ஆக்ஷன் - ரியாக்ஷன்!
குமுதம் ரேட்டிங் - ஓகே


கல்கி திரை விமர்சனம்
யாகாவராயினும் நா காக்க


பாசத்தை மறைத்து வைத்திருக்கும் கண்டிப்புக்கார அப்பா, வௌ்ளந்தியான அம்மா, வெகுளியான சகோதரி.. இவர்களோடு, நண்பர்களுடன் சேர்ந்து பொறுக்கித்தனம் செய்யும் ஹீரோ, அவருக்கு ஒரு அடாவடிக் காதலி என்று தமிழ்த் திரைப்படங்களின் வழக்கமான கதாபாத்திரங்களைக் கொண்டதுதான் யா.நா. திரைப்படம். கதாபாத்திரங்களின் படைப்பு தான் அரதப்பழசு என்றால் கதையின் சம்பவங்கள் பலவும் ஏற்கெனவே பார்த்து தேய்ந்தவைதான்.

ஒரே தினத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பல பாத்திரங்களின் வாயிலாக வெவ்வேறாகக் காண்பித்திருக்கிறார்கள். காரில் நண்பர்களுடன் குதூகலமாகப் பாடிச் செல்லும் காட்சி, 'ஆண்டவன் படைச்சான்; என்கிட்ட கொடுத்தான்' பாடலை நினைவூட்டுகிறது என்று சொல்லவருகிறீர்களா? பிளீஸ் நா காக்க.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மும்பையையே ஆட்டிப்படைக்கும் நல்லவர்/கெட்டவர் வேடத்தில் வருவதும், தாதாவுடைய வாரிசுகளுக்குச் சிக்கல் ஏற்படுவதும் 'அட நாயகன் கதைதானே' என்று சொல்லக் கூடாது. நா காக்க!

பாடல்களும் பின்னணி இசையும் வெரைட்டியாக இருக்கின்றன. பாராட்ட வேண்டிய விஷயங்கள் என்று பார்த்தால், பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவு விளம்பரப் படங்களைப் போல் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. சில பாடங்களின் அர்த்தம் புரிகிறது. மும்பை தாதா மிதுன் சக்கரவர்த்தியின் ஆர்ப்பாட்டமில்லாத கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவசரப்பட்டுப் பேசிவிடும் வார்த்தைகள் எப்படியெல்லாம் விபரீதங்களை வரவழைத்துவிடுகின்றன என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் இது.


நா காக்க - நல்ல மெஸேஜ்...
வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in