தினமலர் விமர்சனம் » அமர காவியம்
தினமலர் விமர்சனம்
புத்தகம், தத்துவம் என கலை தாகம் எடுத்துப்போய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தமிழ் சினிமாவில் தலைகாட்டி வந்த தன் தம்பி சத்யாவை நிலைநாட்ட செய்யும் விதமாக முன்னணி இளம் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் அமரகாவியம்!.
1988ம் ஆண்டு தான் அமரகாவியம் கதை நடைபெறும் காலகட்டம்! ஊட்டி கான்வெண்டில் பள்ளி இறுதியாண்டு படிக்கும் நாயகர் சத்யாவுக்கும், அறிமுக நாயகி மியாவிற்குமிடையே காதல் மலர்கிறது. பூத்து, காய்த்து, கனியாக வேண்டிய அந்த காதல், சுற்றம், நட்பு, சொந்தம், பந்தத்தின் ஈகோ, பிகு...இத்யாதி, இத்யாதிகளால் காய்ந்து, கருகி..காணாமல் போகிறதா? அல்லது கருகிப் போனாலும், உருகிப் போகாமல் அமரத்துவம் பெறுகிறதா? என்பது தான் அமரகாவியம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!.
நாயகர் சத்யா, முந்தைய படங்களைக் காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். கல்லூரி காளையாக திரிய வேண்டிய ஹயிட்டும், வெயிட்டுமுடைய அவரை, பள்ளிக்கூட பையனாக மீசை, தாடியை மழித்து படம் முழுக்க பவனி வர செய்திருக்கும் மைனஸை தவிர, சத்யாவின் நடிப்பிலும் துடிப்பிலும் பெரிதாக குறை ஏதும் சொல்ல முடியாது. காதல் காட்சிகளில் அண்ணன் ஆர்யாவிடம் தம்பி இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும் மற்றபடி, சத்யா டபுள் ஓ.கே!
புதுமுகம் மியா, பொம்மை பூனை மாதிரி பெயருக்கேற்றபடியே இருந்து கொண்டு, காதல் காட்சிகளில் சத்யாவை ஐ லவ் யூ சொல்லச் சொல்லி உருட்டுவதும், மிரட்டுவதுமான ரசனையான காட்சிகள் அமரகாவியம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
தம்பி ராமையா படத்தில் கெஸ்ட்ரோலில் வந்து போகிறாரா? அல்லது கால்ஷீட் சரிவர இல்லாததால் படம் முழுக்க இல்லாமல் போகிறாரா? என்பதற்கு சாலமன் பாப்பையா தலைமையில் தனியாக ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்! அனந்த்நாக், அருள்ஜோதி, எலிசபெத், வைத்தியநாதன், ரிந்து ரவி உள்ளிட்டவர்களின் பாத்திரங்கள் பளிச்!
ஜிப்ரானின் இசையில் ரீ-மிக்ஸாக இல்லாமல் லைவ்வாக பின்னணியில் ஒலிக்கும் 1988 இளையராஜா பாடல்கள் இதம்! இப்படியும், கண்ணியமான காதல்கள் 1988-களில் இருந்தது என்பதை இந்த தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும் என அமரகாவியம் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், இப்படியெல்லாமா? சுத்தசைவமாக காதலிப்பார்கள்?! என இக்கால இளைஞர்கள் கேட்கும் வாய்ப்புமிருப்பதால், ஜீவா சங்கரின் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‛அமரகாவியம் இன்றைய பாஸ்ட்புட்(எல்லா விதத்திலும் தான்) ரசிகர்களின் நெஞ்சில் அமரத்துவம் பெறுமா? என்பது சந்தேகமே!
ஆக மொத்தத்தில்,
‛‛இன்றைய இளைஞர்களின் நெஞ்சில், அமர வேண்டிய காவியம் - அமரகாவியம். ஆனாலும், அவர்களிடத்தில் அமர(ரா) காவியம்?!
-------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
தன் படங்களின் புரமோஷனுக்கே வராத நயன்தாரா, இந்தப் படத்தின் புரமோஷனுக்கு வந்ததோடு, க்ளைமாக்ஸைப் பார்த்து கதறியழுது பாராட்டிய படம். இதற்காகவே பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படம்.
கூடவே ஆர்யாவின் தம்பி என்ற தகுதி வேறு. ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றிய படம்.
சத்யாவும் மியாவும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். நண்பனின் காதலுக்காக மியாவிடம் தூது போகிறான் சத்யா. ஆனால் மியா சத்யாவைக் காதலிப்பதாக அதிர்ச்சி தருகிறார். அதற்குப் பிறகு வரும் குழப்பங்களும் பெற்றோர் எதிர்ப்பும், சத்யா ஜெயிலுக்குப் போவதுமாக கதை ஃப்ளாஷ்பேக்கில் நகர்கிறது. பார்த்துப் பார்த்து இத்துப்போன காதல் காட்சிகள்! அதுவும் படம் முழுக்க என்பதால் ஒரே சலிப்பு. ஊட்டி குளிர்ச்சி வேஸ்ட்டாகிப் போனது.
சத்யா இன்னொரு ஆர்யாவாக உருவெடுக்க வாய்ப்புண்டு. காதல் எதிர்ப்பின்போதும், காதலியைக் கொல்லும்போதும், மிகையில்லாத நடிப்பு. ஆனாலும் இளம் ஹீரோவுக்கான துள்ளல் மிஸ்ஸிங்.
காதலியாக வரும் மியா ஜார்ஜ் அழகாக இருக்கிறார். காதலை வெளிப்படுத்தும் போதும், காதல் கை கூடாத போதும் நடிப்பு டாப் ரகம்.
ஒளிப்பதிவு ரம்மியம். பின்னணியில் மனதிற்குள் வரும் இசை, பாடல்களில் மனதில் பதியாமல் போகிறது.
க்ளைமாக்ஸில் மட்டுமே படத்தில் விறுவிறுப்பு. 1987களில் நடக்கும் காதல், பெற்றோர் எதிர்ப்பை இந்த கால இளசுகள் பார்க்கும்படியாக திரைக்கதை அமைக்காமல் போனது இயக்குநரின் குறையே. கவர்ச்சி, குத்தாட்டம் என்று இல்லாமல் நாகரிகமாக காதலைச் சொன்னதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
அமர காவியம்: காயம்
குமுதம் ரேட்டிங் - ஓகே