விமர்சனம்
படத்தின் மையக் கரு ஆள் மாறாட்டம். கதைப்படி சந்திரசேகரின் (நரேன்) இரண்டு மகள்களில் ஒருவரான ஸ்ருதி நல்லவர், சஞ்சனா கெட்டவர். ஆனால் இறந்து போன ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் சரபம் டாட்டூவை வைத்து இறந்தது ஸ்ருதியா, சஞ்சனாவா என்று அப்பாவுக்கும், காவல் துறைக்கும் எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனது ?.
சரபம் - சர..சர..சறுக்கல்...!!
-------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
வாய்ப்புக் கிடைத்தால் கொள்ளையடிக்கலாம். மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம். இதுதான் சரபம் படத்தின் கதை சாரம். இளைஞர்களை சபலப்படுத்த இதைவிட ஒரு த்ரில்லர் கதையை உருவாக்க முடியாது.
ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புராஜெக்ட் ஹெட் ஹீரோ நவீன். அவர் தயாரிக்கும் புராஜெக்ட்டை எம்.டி., நிராகரிக்க, அவரைப் பழிவாங்க, அவரது ஊதாரி மகளோடு சேர்ந்து, 30 கோடி கேட்டு கடத்தல் கேம் ஆடுகிறார். அதற்குப் பின் வரும் ட்விஸ்ட்டை சொன்னால் சஸ்பென்ஸ் பேய்விடும்.
ஹீரோ நவீன் சந்திரா இன்றைய இளைஞர்களின் இன்னொரு முகம். போதையில் உளறிக்கொட்டுவது வசனத்தை மீறிய ரசிப்பு. முகத்தில் இன்னும் கொஞ்சம் திகில், பயத்தைக் காட்டியிருக்கலாம்.
ஹீரோயின் சலோனி லூத்ரா. அரோபியக் குதிரையேதான். இரண்டு கொலை செய்தும் தெனாவட்டான போதை நடிப்பு! எம்டியாக ஆடுகளம் நரேன் கச்சிதம்.
த்ரில்லர் படத்திற்கு ஏற்ற எடிட்டிங் மற்றும் வசனம் படத்தின் ப்ளஸ். பெரிய இடம்னா, பிரச்னையும் பெரிசா இருக்கும் போன்ற வசனங்கள் கூடுதல் பலம்.
திரைக்கதையில் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர். டூயட் இல்லாமல், அபாசமில்லாமல், யூகிக்க முடியாத இரண்டு திருப்பங்கள் எனறு பல ப்ளஸ்கள் இருந்தாலும் பழைய பாணி கடத்தல் கதை, அவ்வளவு பணக்கார அப்பா மாட்டிக் கொள்வது, கொள்ளை, கொலையை க்ளைமாக்ஸில் நியாயப்படுத்தியது போன்ற காட்சிகள் பெரிய சறுக்கல்!
சரபம்: சிறகற்ற பறவை
குமுதம் ரேட்டிங்: ஓகே
------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
சரபம் என்றால் சிங்கப்பறவை என்று பொருள். சிங்கம் பறவையாக மாறினால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனையை ஓடவிட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அருண் மோகன்.
பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டு வாழும் கட்டடக்கலை நிபுணர் நவீன் சந்திரா. தொழிலதிபர் நரேனிடம் சாப்ட்வேர் தொழில்நுட்பம் குறித்த ஒரு புராஜக்டை நாயகன் நவீன் சந்திரா விளக்குகிறார். கஷ்டப்பட்டு தயார் செய்த புராஜக்டை நரேன் ஒரு சில காரணங்களைச் சொல்லி நிராகரித்து விடுகிறார். இதனால் நவீன் சந்திரா, நரேன் மீது கோபம் அடைந்து பழிதீர்க்க முடிவு செய்கிறார்.
நரேன் மகளான சஞ்சனா போதைக்கு அடிமையானவள். அப்பா சம்பாதியத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இப்படி இருவரது வாழ்க்கையிலும் பணம் தான் முக்கிய குறிக்கோள். அதனால் இருவரும் ஒன்று சேர்ந்து கடத்தல் நாடகமாடி சஞ்சனா அப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
கடத்தல் பணத்தை இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். சஞ்சனா வெளிநாட்டில் செட்டிலாக முடிவு செய்கிறார். சஞ்சனாவை அவர்கள் வீட்டில் ஒப்படைப்பதற்காக இரவில் நடுரோட்டில் இறக்கிவிட்டு செல்கிறார் நவீன் சந்திரா. மறுநாள் சஞ்சனா கொலை செய்யப்பட்டதாகச் செய்தி வெளியாகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் நவீன் சந்திரா. ஆனால் திடீர் திருப்பமாக இறந்து போனதாகச் சொல்லப்பட்ட சஞ்சனா, அப்பாவுடன் நவீன் சந்திரா வீட்டுக்கு வருகிறார். அப்போதுதான் தெரிகிறது சஞ்சனா, ஸ்ருதி என இரட்டைபிறவிகள் இருப்பது, நவீன் சந்திராவுக்கு தெரிய வருகிறது. அப்படியானால் இறந்துபோனது யார், அவரைக் கொலை செய்தது யார்? என பல திகில் திருப்பங்களுடன் மீதிக்கதை நீள்கிறது.
நவீன் சந்திரா தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாகச் செய்திருக்கிறார். அடுக்குமாடியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு பேசும் வசனங்கள் யதார்த்தம்.
தமிழில் அறிமுகமாகும் சலோனி லுத்ராவுக்கு முதல் படத்திலே இரட்டை வேடம். கவர்ச்சியிலிருந்து கஞ்சா வரை வெளுத்துக் கட்டுகிறார். நடிப்பிலும் குறையில்லை.
பாசமான அப்பா நரேன். பல இடங்களில் வில்லத்தனத்துடன் பளிச்சிடுகிறார்.
பிரிட்டோ மைக்கெல்லின் இசையில் பாடல்கள் சுமார். ஆனால் பின்னணி இசை படத்துக்குப் பலம். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு அழகு.
திகில் திருப்பங்களுடன் நிறைந்த கதை. ஆனால் அங்கங்கே சறுக்கல் தெரிகிறது.
சரபம் - உறுமல்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!