Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

என்ன சத்தம் இந்த நேரம்

என்ன சத்தம் இந்த நேரம்,Enna Satham Indha Neram
 • என்ன சத்தம் இந்த நேரம்
 • நடிகர்: ஜெயம் ராஜா
 • பிற நடிகர்கள்: நிதின் சத்யா
 • நடிகை:மானு
 • பிற நடிகைகள்: மாளவிகா வேல்ஸ்
 • இயக்குனர்: குரு ரமேஷ்
28 ஜூன், 2014 - 10:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » என்ன சத்தம் இந்த நேரம்

தினமலர் விமர்சனம்


தமிழில் இவ்வளவு குறைவான நீளத்தில் ஒரு படம் வந்துள்ளதே ஆச்சரியமான விஷயம்தான். படம் மொத்தமே 1 மணி நேரம் 42 நிமிடம் மட்டுமே. ஒரு ஆங்கிலப் படத்துக்குரிய கால அளவுடன் சற்றே ஆங்கிலப் படம் போல எடுக்கப்பட்டுள்ள படம். அதே சமயம் குழந்தைகளை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து குழந்தைகள் ரசிக்கும்படியான படமாகவும் கொடுத்திருக்கிறார்கள். வழக்கமான காதல், ஆக்ஷன், குடும்பப் படமாக இல்லாமல் அவற்றிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பதெல்லாம் சரி. ஆனால், அந்த வித்தியாசத்தை படத்தில் இன்னும் அழுத்தமாகப் பதிய வைத்திருக்கலாம்.


தேவையற்ற சில கதாபாத்திரங்கள் படத்தில் தொய்வைத் தருகின்றன. குறிப்பாக நகைச்சுவை என்ற பெயரில் சிவசங்கர் உள்ளிட்டோரின் கதாபாத்திரம் படத்திற்குத் தேவையே இல்லை. மொத்த படமும் ஒரு உயிரியல் பூங்காவிலேயே நடப்பதால் படத்தின் கதைக்குத் தேவையான பரபரப்பு, திருப்பங்கள் திரைக்கதையில் இல்லாமல் போனது தொய்வாக உள்ளது. அறிமுக இயக்குனர் குரு ரமேஷ், வழக்கமான கதையைத்தேர்வு செய்யாமல் புது மாதிரியான கதையைத் தேர்வு செய்ததற்குப் பாராட்டலாம், ஆனால் இன்னும் அழுத்தமான காட்சிகளை சேர்த்திருந்தால் ஒரு வித்தியாசமான படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும்.


'ஜெயம்' ராஜா, மானு தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த நான்கு பெண் குழந்தைகளுமே வாய் பேச முடியாத, காது கேளாதவர்கள். ஆனால், கணவன், மனைவிக்கிடையேயான பிரச்னையில் ராஜாவும், மானுவும் விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். ஐந்து அல்லது ஆறு வயதுள்ள நான்கு குழந்தைகளும் பள்ளியில் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். டீச்சரான மாளவிகா வேல்ஸ் பள்ளிக் குழந்தைகளை உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, திடீரென ஒரு மலைப் பாம்பு காணாமல் போய்விடுகிறது. அப்போது நடக்கும் பரபரப்பில் நான்கு குழந்தைகளும் உயிரியல் பூங்காவிற்குள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். அந்த குழந்தைகளைக் காப்பாற்ற டீச்சரான மாளவிகாவும், உயிரியல் பூங்கா ஊழியரான நிதின் சத்யாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட்டார்களா, பிரிந்து வாழும் ராஜா, மானு தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் மீதி கதை.


படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இவர்தான் நாயகன், நாயகி என யாரும் கிடையாது. அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரான 'ஜெயம்' ராஜா இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு புதிய குணச்சித்திர நடிகர் கிடைத்திருக்கிறார். சில வருடங்கள் முன் அறிமுகமாகியிருந்தால் 'ஜெயம்' ரவிக்கே போட்டியாக வந்திருப்பார். மொத்தமாக ஆறேழு காட்சிகளில்தான் நடித்திருக்கிறார் என்றாலும் நிறைவான நடிப்பு. குழந்தைகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கண்ணீரை வரவைக்கிறார். இயக்குனராக வலம் வரும் ராஜா இனி நடிகராகவும் வலம் வரலாம்.


'காதல் மன்னன்' படத்தில் நாயகியாக நடித்த மானு பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். நான்கு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரம் என்பதால் ஓகே. ஆனால், முகத்தில் வசீகரம் எல்லாம் மிஸ்ஸிங். எதையோ பறிகொடுத்தவர் போலவே காட்சியளிக்கிறார். அந்த மானுவை ரசித்தவர்களுக்கு இந்த மானு ஏமாற்றத்தையே தருகிறார்.


மாளவிகா வேல்ஸ், அழகான அறிமுகம்... இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது ஆச்சரியமாக உள்ளது. பொதுவாக தமிழில் அறிமுகமாக நினைப்பவர்கள் நாயகனுடன் இரண்டு டூயட், காதல் காட்சிகள் இப்படி எல்லாம் உள்ள படங்களில்தான் அறிமுகமாக வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் இவருக்கு இப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை. ஏன், ஒரு கனவுப் பாடல் கூட இல்லை. அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்தால் முன்னணி நடிகையாக வலம் வரலாம்.


நிதின் சத்யா நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிளைமாக்சைப் பொறுத்தவரை இவர்தான் ஹீரோ. வளவளவென்று பேசினாலும் அவருடைய கதாபாத்திரத்திற்கேற்றபடியான நடிப்பு. ஆனால், குழந்தைகள் மலைப்பாம்பிடம் சிக்கிக் கொள்வார்களோ என நாமே பதட்டப்படும் போது, இவர் மாளவிகாவிடம் காமெடி பண்ணுவதெல்லாம் தேவையற்றது.


ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை, பின்னணி இசை ஓகே. உயிரியல் பூங்காவின் பச்சைப் பசேல் தோற்றம் பதட்டத்தை மீறி ரசிக்க வைக்கிறது. இன்னும் சில காட்சிகளைச் சேர்த்து ஒரு இரண்டு மணி நேரப் படமாக நிறைவாகக் கொடுத்திருக்கலாம்.


என்ன சத்தம் இந்த நேரம் - குறைவான நேரம்...குறைவான சத்தம்...!!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in