Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தெகிடி

தெகிடி,Thegidi
12 மார், 2014 - 14:45 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தெகிடி

தினமலர் விமர்சனம்


"அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் உள்ளிட்ட வெற்றிபடங்களையும், வித்தியாச படங்களையும் தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாச வெற்றித்தயாரிப்பு தான் ""தெகிடி

கதைப்படி, கதையின் நாயகர் வெற்றி எனும் அசோக் செல்வன், கிரிமினாலஜி படித்துவிட்டு உயிருக்கும், உடைமைக்கும், திறமைக்கும் சவால் விடும்படியான துப்பறியும் வேலை பார்க்க துடிப்புடன் சொந்த ஊரான தஞ்சாவூரில் காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே சென்னையில் உள்ள ஒரு தனியார் டிடக்டீவ் ஏஜென்சியில் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அப்பாவிடம் சொல்லிவிட்டு சென்னை கிளம்புகிறார்.

சென்னை சென்றடைந்ததும், தன்னை படிக்கும்போதே புத்திசாலியாக ஒப்புக்கொண்ட பேராசிரியரின் ஆசியை பெற்றுக்கொண்டு அந்த தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். வேலைக்கு சேர்ந்த உடனேயே சிலரது புகைப்படங்களும், அவர்களது முகவரியும் வெற்றியிடம் தரப்படுகிறது. அவர்களைப்பற்றிய ஏ "டூ இசட் டீடெயில்களை விசாரித்து துப்பறிந்து அந்த நிறுவனத்தில் நல்ல பெயர் எடுக்கிறார் வெற்றி. ஒரு சில அசைமென்ட்டுகளுக்கு அப்புறம் மது எனும் ஜனனி ஐயரின் புகைப்படத்தையும் அவரிடம் வழங்கும் அந்நிறுவனம், அவர் பற்றி தகவல்களையும் துப்பறிய சொல்கின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை வெற்றி, தன் துப்பறியும் பணிக்காக கமலக்கண்ணன் என்பவரது வீட்டை கள்ளத்தனமாக திறக்க முற்படும்போது வெற்றியை பார்த்துவிட்டு அவரை திருடனாக கருதுகிறார் மது அலைஸ் ஜனனி ஐயர். தன்னை பின் தொடரும் வெற்றி எனும் அசோக் செல்வனை பார்த்துவிட்டு சப்தம் போடுகிறார். வெற்றி அவரது வீட்டிற்கே போய் மது "அலைஸ் ஜனனியை சமாதானம் செய்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. ஒரு பக்கம் ஜனனி ஐயரைப்பற்றி தகவல்களை திரட்டிக்கொண்டே மற்றொரு பக்கம் அவருடன் லவ் டூயட் என்று காதலிலும் உலா வருகிறார் "வெற்றி அசோக் செல்வன்.

இந்நிலையில் வெற்றி தன் துப்பறியும் நிறுவனத்திற்காக தகவல் திரட்டி தந்தவர்கள் வரிசையாக விபத்தில் மரணமடையும் செய்திகளை பார்க்கும் இவர், அதிர்ச்சி அடைகிறார். அது பற்றி துப்பறிய கிளம்பும் வெற்றி,கண் முன்னே இன்னும் சில கொலைகளை விபத்தாக பார்க்கிறார். எல்லாமே தான் துப்பறிந்து தந்த மனிதர்கள் என்பதால் மேலும் திகிலடைகிறார் வெற்றி எனும் அசோக் செல்வன்!

தான் வேலை பார்த்த டிடெக்டீவ் ஏஜென்சி மீது சந்தேகம் கொண்டு அவர்களைத்தேடி ஆக்ரோஷத்துடன் புறப்படுகிறார். அவர்கள் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு "எஸ் ஆகி விடுகின்றனர். தன்னையும், தன்னால் துப்பறியப்பட்ட தன் காதலியையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஹீரோ, இச்சமயத்தில் கமலக்கண்ணன் இறப்பதற்கு முன் அவருடன் இறுதியாக செல்போனில் பேசிய காரணத்திற்காக அறை நண்பருடன் கைது செய்யப்படுகிறார். காதலி ஜனனிக்கு மொத்த உண்மையும் தெரிய வருகிறது. முதலில் கோபம் கொள்ளும் அம்மணி, ஒருவழியாக சமாதானமாகி வெற்றியின் பேராசிரியர் உதவியுடன் அசோக்கையும், அவரது நண்பனையும் ஜாமினில் எடுக்கின்றனர்.

லாக்கப்பில் இருந்து வெளியில் வரும் வெற்றி-அசோக், தனது இந்த நிலைக்கு காரணமானவர்களை, தன்னை கைது செய்த போலீஸ் ஜெ.பி. உதவியுடனும், அவரது உதவி இல்லாமலும் சட்டத்தின் முன் நிறுத்தவும், விபத்து என ஜோடிக்கப்பட்டு இத்தனை கொலைகளுக்கான நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முற்படுகிறார். அவர்களது நோக்கம் படம் பார்க்கும் நமக்கும் பகீர் என்றிருப்பது "தெகிடி படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி!

ஒருவழியாக ஹீரோ மோசமானவர்களில் முக்கியமானவர்களான அத்தனை பேரையும் திட்டமிட்டபடி சட்டத்தின்முன் நிறுத்தினரா.? தண்டனை தந்தாரா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், எதிர்பார்க்காத திருப்பங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டிருக்கிறது. வாவ்! சூப்பர்!!

ஹீரோவாக வெற்றியாக அசோக் செல்வன், தமிழ்வாணன் நாவல்களில் படித்த துப்பறியும் சங்கர்லாலை நம் கண்முன் காட்சிக்கு காட்சிக்கு நிறுத்துகிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், இவர் அறிமுகமான "வில்லா படத்தை காட்டிலு<ம் "நல்லா நடித்திருக்கிறார். "கீப்-இட்டு அசோக்!

மதுவாக ஜனனி ஐயர், சபாஷ் ஐயர் எனும்படி கண்களாலேயே அத்தனை பாவங்களையும் வெளிப்படுத்தி ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார். போலீஸ் ஆபிஸர் ஜெயப்பிரகாஷ், சைலேஷ் - ஜெயக்குமார்,நண்பர் நம்பியாக வரும் கலை, சாய் - கமலக்கண்ணன், பேராசிரியர் சடகோபன், மாதவன், சக்கரபாணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்து பலே சொல்ல வைத்திருக்கின்றனர்.

தினேஷ் கிருஷ்ணனின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, நிவாஸ் கே.பிரசன்னாவின் மிரட்டும் இசை, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு, புதியவர் பி.ரமேஷின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் வரிசையில் தெகிடியையும் தயாரிப்பாளர்களுக்கு வெற்றி படமாக்கியுள்ளதென்றால் மிகையல்ல!

ஆகமொத்தத்தில், ""தெகிடி - ""திகட்டலைடி! மிரட்டுதடி!!--------------------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


தெகிடி என்றால் சூதாட்டம். மனிதர்கள்மீது கேம் வைத்து சிலர் ஆடும் ஆட்டம்தான் சூதாட்டமான தெகிடி.

தஞ்சையில் இருந்து சென்னைக்குப் படிக்க வரும் வெற்றி (அசோக் செல்வன்) எம்.ஏ. கிரிமினாலஜி துறையைத் தேர்வு செய்து படிக்கிறார். படித்து முடித்தபின் அவருக்கு சென்னையில் தனியார் டிடெக்டிவ் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு வருகிறது. வெற்றி சென்னைக்கு வருவதுபோல் படம் தொடங்குகிறது. ஆரம்பமே நல்ல எதிர்பார்ப்பு. அடுத்தது என்ன? என விழிகளை விரியவைக்கிறது. டிடெக்டிவ் கம்பெனிக்காக நான்கு நபர்களின் ஒர மாத நடவடிக்கைகளைக் கண்காணித்து அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறான். அந்த நால்வரின் ஒருவர்தான் நாயகி மது என்கிற ஜனனி ஐய்யர். அவரைக் கண்டவுடன் காதல்கொண்ட வெற்றி நட்புடன் பழக ஆரம்பிக்கிறான். இந்தக் கதையில் திடீர் திருப்பமாக வெற்றி கண்காணித்த நால்வரில் மூவர் அடுத்தடுத்து ஆக்ஸிடன்ட்டாகி மரணிக்க... வெற்றியின் மூளை யோசிக்க ஆரம்பிக்கிறது. இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று டிடெக்டிவ் அலுவலகம் போய் கேட்க நினைக்க அங்கு அந்த அலுவலகமே இல்லை. அது பொய் என்று தெரிய வருகிறது.

அடுத்தது ஜனனி அய்யர் உயிருக்கு ஆபத்து வரும் என்று வெற்றிக்குத் தோன்றுகிறது. அவரைக் காப்பாற்ற வெற்றியே இதன் பின்னணி என்ன? ஏன் இப்படி இவர்கள் கொல்லப்படுகிறார்கள் என இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உடன் இணைந்து துப்பறியும் வேலையில் இறங்க.. அதன்பின் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. பாதுகாப்பு இல்லாமல் நாம் எவ்வளவு பெரிய ஆபத்தான வாழ்க்கை வாழ்கிறோம் என நமக்குப் புரியவரும்போது ஆச்சர்யப்பட வைக்கிறது. இதன் கதைகளம், அசோக் செல்வனின் துப்பறியும் நடிப்பு, ஜனனி அய்யருடன் காதல், மனிதர்கள் இறக்கும் போது காட்டும் அனுதாபம் என நல்ல வித்தியாசம்.

ஜனனி அய்யர் விழியாலே மொழி பேசுகிறார். நம்பியாக வரும் காளை நடிப்பு சூப்பர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் படத்துக்குப் பலம். எழுதி இயக்கியுள்ள இயக்குநர் பி. ரமேஷின் நேர்த்தியான இயக்கம் படம் முழுதும் தெரிகிறது. முடிவு முடித்திருக்கும் விதம் பாராட்ட தோன்றுகிறது.

தெகிடி - வெற்றி ஆட்டம்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தெகிடி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in