Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

வடகறி

வடகறி,Vadacurry
10 ஜூலை, 2014 - 18:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வடகறி

தினமலர் விமர்சனம்


படத்தோட தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம வந்திருக்கிற படம். படத்தோட ஆரம்பத்துலயே அது என்ன வடகறின்னு யோசிக்காதீங்கன்னு ஒரு கேரக்டர் மூலமா சொல்லிடறாங்க. அதனால நாம அதைப் பத்தி யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு பெண்ணைக் காதலிக்கிறதுக்கு என்னென்னமோ தகுதிகள் தேவைன்னு நாம நினைக்கிறோம். ஆனால், இந்தக் காலத்துல ஒரு காஸ்ட்லியான போன் இருந்தால் போதும்கற நிலைமைக்கு காதல் வந்துடுச்சின்னு இந்த படத்துல சீரியசா சொல்றாங்களா இல்லை காமெடியா சொல்றாங்களான்னு தெரியலை. ஏன்னா, ஹீரோயின் கிட்ட ஹீரோ அப்பா நீ என்னை ஃபோனைப் பார்த்து காதலிக்கிலையான்னு கேக்கறாரு...என்ன கொடுமை சரவணன் இது...(படத்தோட டைரக்டர் பேரு சரவணன்தான்...)

வெங்கட் பிரபுவோட உதவியாளராம், அதான் அதே குசும்பு, தெனாவட்டு படம் ஃபுல்லா நிறைஞ்சிருக்கு. சென்னையை மையப்படுத்தின கதை, அதே யதார்த்தத்தோட கொடுத்ததற்காக தாராளமா பாராட்டலாம். ஆனால், இவ்வளவு கனமில்லாத கதையை வச்சிக்கிட்டு இரண்டரை மணிநேரம் ரசிகர்களை உட்கார வைக்க முடியுமான்னு யோசிச்சிருக்கலாம். சின்னச் சின்ன சுவாரசியமான சம்பவங்கள் மட்டுமே படமில்லைங்கறத இப்ப வர்ற இயக்குனர்கள் உணரணும்.
ஜெய், ஒரு மருத்துவ விற்பனைப் பிரதிநிதி...சுத்தமான தமிழ்ல சொன்னா புரியாது...சரி..அவர் ஒரு மெடிக்கல் ரெப். அண்ணன் அருள்தாஸ் ஆட்டோ ஓட்டறவரு...ரொம்ப நேர்மையானவரு. எந்த அளவுக்கு நேர்மைன்னா, ஆட்டோவுல யாரோ தவறவிட்ட 20 பவுன் நகையைக் கூட போலீஸ்ல ஒப்படைக்கிற அளவுக்கு நேர்மையானவரு. இப்படிப்பட்ட அண்ணனோட தம்பியான ஜெய்க்கு காஸ்ட்லியான செல்போன் மேல ஒரு ஈர்ப்பு. அப்படி ஒரு போன் இருந்தால்தான் மதிப்புன்னு நினைக்கிறவரு. ஒரு சந்தர்ப்பத்துல ஒரு கடையில யாரோ வச்சிட்டுப் போற ஒரு போனை திருடிடறாரு. அப்புறம் மனசு கேக்காம அந்த போனை திருப்பிக் கொடுக்கப் போகும் போது, சிலர்கிட்ட மாட்டிக்கிறாரு. அவங்க இவர் கிட்ட சரக்கு எங்கன்னு கேட்டு தொல்லை பண்றாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி, அது என்ன சரக்கு, அவரை ஏன் பிடிக்கிறாங்கன்றதுக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கிறாரு, இதுதான் படத்தோட கதை.

சில வருடங்களுக்கு முன்னாடி சென்னையில ஒரு பெரிய பிரச்சனையா உருவான போலி மருந்துகள் விவகாரம்தான் படத்தோட கதை. எப்பேர்ப்பட்ட ஒரு கொடுமையான விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லிட்டுப் போறாரு டைரக்டர். அந்த விவகாரத்துக்கு டிராபிக் போலீஸ் முதல் கொண்டு உடந்தையா இருக்கான்றதுலாம் ரொம்பவே ஓவர். அதுவும் குழந்தைகள் மருந்துககளை வேற போலியா தயார் பண்றாங்க. ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் படத்துக்குரிய களத்தை கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம நகர்த்தியிருக்காங்க.

வழக்கம் போலவே வந்தமா, நாலு டயலாக் பேசினோமோ, காதலியைப் பார்த்து லேசா பயந்தோமாங்கற ரேஞ்சுல நடிச்சிருக்காரு ஜெய். இதுக்கு மேல நடிச்சி என்ன ஆகப் போகுதுன்னு ஒரு எண்ணம் அவர் மனசுக்குள்ளயே இருக்கிற மாதிரி தெரியுது. ஒரு மெடிக்கல் ரெப்-ஆ இருந்துக்கிட்டு போலி மருந்துகளைப் பார்த்து பதற வேணாமா, இவர் என்னடான்னா சே..குழந்தைங்க மருந்துகளைக் கூட தயார் பண்றாங்கன்னு சாதாரணமா பேசிட்டுப் போறாரு. கொஞ்சம் நடிங்க பாஸ்னு கூவணும் போல இருக்கு.

சுப்பிரமணியபுரம் படத்துக்கு அப்புறம் ஜெய் - சுவாதி மீண்டும் ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கிற படம். அந்த படத்துல இருந்த காதல்ல, கால் வாசி கூட இந்தப் படத்துல இல்லை. மொத்தமா ஒரு ஆறேழு சீன்லதான் இரண்டு பேரும் சந்திச்சிக்குவாங்க போல. அதுல கூட காதல், கீதல் அப்படிலாம் எதுவுமில்லை. படத்தோட மையக் கருவை நோக்கி திரைக்கதை இல்லாததே இதற்குக் காரணம்.

படத்துல அங்கங்க சிரிக்க வைக்கிறவரு ஆர்ஜே பாலாஜிதான். சில இடங்கள்ல மொக்கையா பேசினால் கூட சிரிக்க வைக்கிறாரு. அவரைக் கடத்திக்கிட்டு போய் வச்சிருக்கிறவங்க கிட்டயே, காமெடியா பேசி, அப்படியே கேரம் போர்டு ஆடற வரைக்கும் பழகறதுலாம் சிம்ப்ளி சூப்பர்ப். விட்டால், கலாய்க்கறதுல சந்தானத்தையே காலி பண்ணிடுவாரு போல. நல்ல படங்களா பார்த்து செலக்ட் பண்ணா சந்தானத்துக்கும் சேர்த்து டஃப் கொடுக்கலாம்.

நேர்மையான ஆட்டோ டிரைவரா, எம்ஜிஆர் ரசிகரா அருள்தாஸ், படத்துக்கு பெருசா தேவைப்படாத கேரக்டர், இருந்தாலும் எம்ஜிஆர் புகழ் பாடறதுக்கு இவர் கேரக்டரை பயன்படுத்தியிருக்காங்க. இவரோட மனைவியா கஸ்தூரி...ஐயோ பாவம்னுதான் சொல்ல வைக்குது. சன்னி லியோன்-ஐ ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வச்சிலாம் வீணாக்கியிருக்காங்க. எத்தனை பேருக்குத் தெரியும் அவங்கள் பத்தி....ம்ம்ம்..

அறிமுக இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையில் நெஞ்சுக்குள்ள நீ... பாடல் மட்டும் ஒன்ஸ்மோர் ரகம்...மற்றவை சுமார் ரகம்...ஒரு பாடலில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் அவ்வளவு மோசம்...தாராளமா செலவு பண்ணியிருக்கலாமே...

வட கறி - கையேந்தி பவன்...

-------------------------------------------------------------------------


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...


வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ ஒரு மெடிக்கல் ரெப். சாதாரண பேசிக் மாடல் மொபைல் வெச்சிருக்கார். கூட இருக்கும் பிரண்ட்ஸ் எல்லாம் ஐ போன் வச்சிருந்தாத்தான் பிகர் உஷார்ப்படுத்த முடியும்னு உசுப்பேத்தி விடுறாங்க. ஆனா அவரால வாங்க முடியலை. அப்போ அநாமத்தா ஒரு ஐ போன் இவர் கைல மாட்டுது. அந்த போனை கமுக்கமா, கணக்கா அமுக்கிடறாரு. அதனால அவருக்கு என்னென்ன பிரச்னைகள் வருது என்பது தான் திரைக்கதை. நாட்ல இப்போ பெருகி வரும் போலி மருந்து தயாரிக்கும் கும்பல் பற்றிய விழிப்புணர்வு கதையை த்ரில்லர் மூவியா கொடுத்திருக்காங்க.


ஹீரோவாக ஜெய். அவருக்கு அப்பாவியான மிடில் கிளாஸ் இளைஞன் வேடம், அட்டகாசமாப்பொருந்துது. அவரது டயலாக் டெலிவரி, ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம் டபுள் ஓக்கே. அடுத்த கட்டத்துக்கு தயார் ஆகிட்டார். சபாஷ் பாஸ்.


ஹீரோயின் பலாச்சுளைக்கு ரோஸ் பவுடர் போட்டுவிட்ட கோவைபழ உதட்டு அழகி ஸ்வாதி. தெத்துப்பல் தெரிய அவர் சிரிக்கும்போது உங்க டூத் பேஸ்டுல சுண்ணாம்பு அதிகமா இருக்கானு கேக்கத்தோணுது. வழக்கம் போல் ஆடை வடிவமைப்பு கண்ணியம். பாடல் காட்சிகளில் பாந்தம்.


ஹீரோயினுக்கு தோழியாக யாரோ ஒரு புதுமுகம். அடடே சொல்ல வைக்கிறார். நாம எந்தக்காலத்தில் பொண்ணுங்களை அடச்சே என சொல்லி இருக்கோம்?


ஹீரோவின் நண்பராக ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜி நல்ல எண்ட்ரி. லோ பட்ஜெட் சந்தானம் ஆக வாய்ப்பு உண்டு. அவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகளைப்புரிந்து கொள்ளவே ஒரு பயிற்சி தேவை. ஆனாலும் ரசிகர்கள் ஒரு குத்து மதிப்பா சிரிச்சு வைக்கறாங்க.


ஹீரோ, ஹீரோயின் தோழியை லவ்வுவது, பின் தோழியை ஃபாலோ பண்ணுவது, பின் பல்டி அடிச்சு ஹீரோயினுக்கு ரூட் விடுவது, இதனால் தோழிகளுக்கிடையே ஈகோ வருவது என கலகலப்பான காதல் காமெடி டிராக் படத்தின் முற்பாதியை மிகச்சுலபமாக நகர்த்தி விடுகிறது. பின்பாதியில் கதை த்ரில்லர் மூவி, சேசிங்க் காட்சிகள் என பரபரப்புக்கு தாவும் போது விறு விறுப்பு. பின் பாதியில் பாடல் காட்சிகள் தேவையே இல்லை. கட் பண்ணி ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
---------------------------------------------------------குமுதம் சினி விமர்சனம்சைனா செல்போனை வைத்துக் கொண்டு சீரழியும் ஜெய்யின் கையில் ஒரு காஸ்ட்லி போன் மாட்டுகிறது. அது ஒரு ஃப்ராடு பார்ட்டியுடையது என்று தெரியாமல் சிக்கிச் சின்னாபின்னமாகி கொத்துக்கறி ஆவதுதான் வடகறி!


அப்பாவி மிடில் கிளாஸ் பாத்திரத்துக்கு ஜெய்யை விட்டால் ஆளில்லை! "என் வாயை அடிச்சு உடைச்சுட்டாங்க தெரியுமா? என்று ஸ்வாதியிடம் புலம்பும்போதும், அவரை கரெக்ட் பண்ணுவதற்காக க்ளினிக்கில் செய்யும் சேட்டைகளும், மனிதர் பட்டையைக் கிளப்புகிறார்.


"எம்.ஜி.ஆர். ஃபேன்னா நேர்மையா இருப்பீங்களா? நான்கூடத்தான் சிம்பு ஃபேன். அவர் பண்றதையெல்லாம் பண்றேனா? வசனம், படம் முழுக்க புன்னகை மழை தூவுகிறது இயக்கம் சரவணராஜன்.


கொஞ்சம் லைலா தனத்தோடு ஸ்வாதி. மறக்காமல் க்ளோசப்பில் தன் தெத்துப் பல்லைக் காட்டுகிறார். அடக்க ஒடுக்கமாய் ஆடை உடுத்துகிறார். அதற்கு நேர் மாறாய் நீலப் புடவையில் சன்னி லியோன் ஒரு கெட்ட ஆட்டம் போடுகிறார். யோவ் மச்சம்யா!


ஆர்.ஜே. பாலாஜி படபடவெனப் பேசி ரகளை செய்கிறார். வில்லன் கூட்டத்தில் புகுந்து, அவர்களுடன் நண்பனாகி, பிரியாணி சாப்பிட்டு அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது வரை ஆஸம்!!


செல்போனுக்கே வழியல்லாத ஹீரோ நல்ல பைக் வைத்திருக்கிறாரே?


காலாவதி மருந்துக்கு புது லேபிள் போட்டு விற்கும் சமூக பிரச்னையை சப்ஜெக்ட் தொட்டாலும் பூச்சாண்டி மாதிரியான ரௌடிகள் கையில் சிக்கிச் சரக்கு என்கிறார்களே அது என்ன? என்று மண்டை குழம்புகிறது.


வடகறி: ருசி ஓகே. காரம் கம்மி!
குமுதம் ரேட்டிங்: ஓகே

--------------------------------------------------------------கல்கி சினி விமர்சனம்
காஸ்ட்லியான செல்போன் இருந்தால்தான் இளம்பெண்கள் நம்மை காதலிப்பார்கள் என்ற இன்றைய இளைஞர்களிடம் உள்ள தவறான எண்ணத்தை உடைத்தெறியும் படம் "வடகறி.

படம் முழுக்க எதார்த்தமான பாணியில் சொல்லப்பட்டுள்ளது. ஜெய் அசட்டுத்தனமான நடிப்பில் அசத்துகிறார். இப்படிப்பட்ட வேடத்துக்கு ஜெய் ஸ்பெஷல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.


ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றும் அருள்தாஸ், அவரது மனைவி கஸ்தூரி, அருள்தாஸின் தம்பி ஜெய். இவர்கள் மூவரும் வரும் காட்சிகள் படு எதார்த்தம். அருள்தாஸ் ஆட்டோவில் வந்த நபரின் இருபது பவுன் நகையை நேர்மையாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு வருகிறார். மனைவி கஸ்தூரி விடும் டோஸைக் கேட்டு அருள்தாஸ் "நல்லது தாண்டா செஞ்சேன் என்று ஜெய்யிடம் கெஞ்சும்போது ஜெய்யும் அவரை வசைபாடும் காட்சி ரசிக்க வைக்கிறது.


ஜெய்யின் காதல் காட்சிகள் குளு... குளு... ஸ்வாதியும், மிசாவும் ஜெய்யை மாறி மாறிக் காதலிப்பதும் ஜெய் கிடைக்காமல் மிசா தற்கொலைக்குப் போவதும் சோகமான திருப்பம்.

"காஸ்ட்லி போன் வச்சிருப்பதால்தானே என்னைக் காதலிக்கிறீங்க என ஸ்வாதியிடமே ஜெய் கேட்டு, வாங்கிக் கட்டிக் கொள்வதாகட்டும், அண்ணன் குழந்தையை வில்லன் கூட்டம் கடத்திவிட்டனர் என்பதை பதைப்போடு தேடும் போதும், நண்பன் பாலாஜியைக் காப்பாற்ற எதிரி கூட்டத்துக்குள்ளே நுழைவது என ஜெய் கதைக்கு பொருந்துகிறார். ஹீரோயிசம் காட்ட வேண்டிய இடத்தில் அடி வாங்கும் ஜெய், போலி மருந்துகளால் நம் வீட்லே ஒரு குழந்தை இநறதுவிட்டால் என்னாவது ன போலி மருந்துகளை ஒழிக்கத் துணிச்சலோடு போராடும் இடத்தில் இயக்குநர் சரவணராஜனின் சமூக அக்கறை பளிச்சிடுகிறது.


"எம்.ஜி.ஆர். ஒரு கிரேட். அவர் வழியை ரசிகர்கள் பின்பற்றலாம். நான் சிம்பு ரசிகன். அதுக்காக அவர் செய்றதை எல்லாம் நான் செய்ய முடியுமா? என ஜெய் பேசும் போது தியேட்டரில் கைதட்டல் அடங்கி வெகு நேரமாகிறது.


ஜெய்யுடன் வரும் பாலாஜி காமெடி என்ற பெயரில் ஓவராக கலாய்ப்பது நெருடல். கடத்திச் சென்ற கும்பலிடமே கேரம் போர்டு ஆடுவது, வெஜ் பிரியாணி கேட்பது என்று வில்லன் தயாளன், தமாஷ் வில்லன் ஆகிவிடுகிறார். அப்புறம் எங்கே கதையில் விறுவிறுப்பு இருக்கும்?


பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஜெய் செல்போன் கையாளத் தெரியாமல், ஒலிபெருக்கியை அலறவிட்டு எல்லோருக்கும் கேட்கும் படிபோன் பேசுவதும் அபத்தம்!


விவேக் சிவா, மெர்ஷின் சாலமோன் இரட்டையர் இசை சுமார் ரகம். என். வெங்கடேஷ் கேமரா ரசிக்க வைக்கிறது. பிரவின் எடிட்டிங் சூப்பர். சன்னிலியோன் ஒரு பாடலுக்கு ஆடியும் பரபரப்பு இல்லை.


வடகறி - முதல்பாதி வழவழ... பின் பாதி விறுவிறு.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in