Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

பாக் மில்கா பாக்(இந்தி)

பாக் மில்கா பாக்(இந்தி),Bhaag Milkha Bhaag
  • பாக் மில்கா பாக்(இந்தி)
  • பர்கான் அக்தர்
  • சோனம் கபூர்
  • இயக்குனர்: ராகேஷ் ஓம்பிரகாஷ் மெகரா
16 ஜூலை, 2013 - 17:09 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாக் மில்கா பாக்(இந்தி)

 தினமலர் விமர்சனம்


விளையாட்டு வீரர் ‘மில்கா சிங்’ வாழ்க்கையை சித்தரித்துள்ள படம் தான் “பாக் மில்கா பாக்”.  விளையாட்டைப் பற்றிய படமென்றால் கதாநாயகன் போட்டியில் வென்று இறுதியில் சாதனை புரிவது சினிமாவில் நிதர்சன முடிவு.  ஆனால் இப்படம் வெறும் வெற்றி கண்ட வீரனைப் பற்றிய கதை மட்டுமல்ல வலி, வலிமை, காத்திருப்பு, தவம், போராட்டம் அனைத்தையும் ஆழமாய்ப் பிரதிபலித்துள்ள உன்னதப் படைப்பு.

“ரங்கு தே பசந்தி” திரைப்படம் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பேசப்பட்ட போது இயக்குனர் ‘ராயேஷ் ஓம் பிரகாஷ் மேஹரா’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தார்மீகக் கடமை இவரிடம் பிரசித்தம். இளைஞர்கள் அரசியலால் பாதிக்கப்படுவதை “ரங்கு தே பசந்தி” விவரித்தது.  மூட நம்பிக்கையின் கோரத்தை “டெல்லி 6” சித்தரித்தது. “பாக் மில்கா பாக்” உலகளவில் நமது தேசத்திற்குப் பெருமை தேடித்தந்த வீரன் ‘மில்கா சிங்’ வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

கதாநாயகனுக்கு மாஸ் இன்ட்ரோக்களைக் கொடுத்து, பின்னணியை அலரவிடும் படங்களை அதிகம் கண்டிருப்போம். இப்படம் தொடங்குவதென்னவோ கதாநாயகனின் தோல்வியில். ஒலிம்பிக்கில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மில்கா சிங் முதல் காட்சியில் தோல்வியைக் காண்கிறார். கதாநாயகனை தொடர்ந்து துரத்தும் கடந்த கால கசப்பான அனுபவங்கள்.

லாகூரில் உள்ள கோவிந்தபூர் கிராமத்தில் பிறக்கும் மில்கா சிங், நாடு விடுதலைப்பட்டு இந்தியா பாகிஸ்தான் பிரிகையில் லாகூரிலிருந்து விரட்டப்படும் இவர் குடும்பம். பாகிஸ்தானில் கொல்லப்படுகின்ற இவரது உற்றார் உறவினர், தன் அக்காவுடன் மில்கா சிங் இந்தியாவிற்கு வருகிறார். தன் கண்முன்னே தனது உறவினர் கொல்லப்பட்ட கோர அனுபவம், ரத்த ஆற்றில் பிணங்களாய் தன் குடும்பத்தாரைக் கண்ட நினைவுகள் சிறு வயதிலிருந்து மில்கா சிங்கைத் துறத்துகிறது.

தன் அக்காவுடன் இந்தியாவில் வளரும் மில்கா சிங் (பரான் அக்தர்) கிராமத்தில் முரடனாக, திருடனாக வாழ்கிறார். குடத்தை இடுப்பில் வைத்து நீர் சுமந்து செல்லும் அழகில் சோனம் கபூர், பரான் அக்தரின் மனதையும் எடுத்துச் செல்கிறார். சோனம் கபூருக்காக திருட்டை விட்டு, காந்தி ஜெயந்தி விடுமுறை போல தனக்காகவும் இந்தியா முழுவதும் ஒரு நாள் விடுமுறை விடுவார்கள் என சவால் விட்டு பட்டாளத்தில் சேரும் பரான் அக்தர்.  ஓட்டப்பந்தயத்தில் முன்னணியில் வரும் முதல் பத்து பேருக்கு முட்டையும் பாலும் அளிக்கப்படும் என்கிற ஒரே காரணத்திற்காக ஓட்டப்பந்தயத்தில் ஓடி முன்னணிப் பட்டியலில் பரான் அக்தர் நுழைகிறார். பெரிய காரணம் ஏதுமின்றி தொடங்கிய அந்த ஓட்டம் இவர் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது, சர்வதேச அளவில் மில்கா சிங் செய்த சாதனை, மில்கா சிங் மேற்கொண்ட அக்னிப் பரிட்சை இவை அனைத்தையும் ஓவியமாய் தீட்டியுள்ள மீதிக்கதை.

புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர் ‘ஜாவெத் அக்தரின்’ மகனாகிய பரான் அக்தர் நல்ல நடிகர், திறமையான இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர் இப்படி பலதடங்களில் தான் பதித்த முத்திரையை “பாக் மில்கா பாக்” மூலம் முறியடித்து புதிய சிகரத்தை எட்டியுள்ளார். காட்டாற்று வெள்ளம் போல் இவர் பாய்ந்தோடும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது.  மில்கா சிங் கதாபாத்திரமாக இவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்.  ஓவ்வொரு காட்சியிலும் இவரது மெனக்கெடல் நிதர்சனம்.

விளையாட்டுப் படமென்றால் வெறியேற்ற வைக்கும் உற்சாக இசை தான் வழக்கம், ஆனால் சங்கர் எசான் லாயின் பாடல்களும், பின்னணியும் கதையை யதார்த்தப் பாதையிலிருந்து விலக்காமல் அமைந்துள்ளது.

முந்தைய “ரங்கு தே பசந்தியில்” கையாளப்பட்ட ‘நான் லீனியர் ஸ்க்ரீன் ப்ளேவை’ “பாக் மில்கா பாகிலும்” ‘ராயேஷ் மேஹரா’ கையாண்டுள்ளார்.  இக்கதை உருவாக்க இரண்டரை வருடங்களானது என இவர் கூறினால் அத்தனை ரிஸர்ச்சுகளும் திரையில் பிரதிபலிக்கிறது. 

தன் பேரன் பட்டாளத்தில் சேருவேன் எனக் கூறக்கேட்டு பெருமிதம் கொள்ளும் தாத்தா, தன்னை ஒரு பெண் தீண்ட வரும் போதும் மில்கா சிங் அவளிடம் நாகரீகமாக ‘என் கவனம் விளையாட்டில் மட்டும் தான்’ என்பன போன்ற காட்சியில் இயக்குனர் சபாஷ் போட வைக்கிறார். ஓட்டப் பந்தயம் வரும் ஒவ்வொரு காட்சியும் ஓஹோ. சினிமாவில் எப்பொழுதாவது அதிசயமாகத் தோன்றி மிளிரும் ஒரு மாணிக்கம் – “பாக் மில்கா பாக்”. வசனம், பாடல் வரிகள், எடிட்டிங், ஒளிப்பதிவு, நடிப்பு அத்தனையும் நேர்த்தியுடன், கலையம்சத்துடன் அமைந்துள்ள ஒரு படைப்பு.

மொத்தத்தில், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ள மொழி ஒரு அணை கிடையாது. இது நம் தேசத்தைப் பெருமிதப்படுத்தும் அப்பழுக்கற்ற படைப்பு. கண்டிப்பாக தேசிய அளவில் சர்வதேச அளவில் பேசப்படும். படம் முடிந்து, மனநிறைவு பெற்று எழுந்து நின்று ரசிகர்கள் கொடுக்கும் கரகோஷம் படைப்பாளிக்கு சூட்டப்படும் மகுடம்! 



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in