Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கரிமேடு

கரிமேடு,Karimedu
  • கரிமேடு
  • ..
  • பூஜா காந்தி
  • இயக்குனர்: ஸ்ரீனிவாச ராஜூ
07 ஜூன், 2013 - 15:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கரிமேடு

  

தினமலர் விமர்சனம்



"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் "கரிமேடு" ஆகியிருக்கிறது. "கொக்கி" பூஜா காந்தி, பொம்பளை கொலை கொள்ளைகாரியாக ஒரு கும்பலுடன் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள தண்டுபாளையா எனும் பகுதியை சார்ந்த கொடூர கொலை கொள்ளைக்காரர்கள் பற்றிய உண்மை கதைதான் "கரிமேடு" படம் மொத்தமும். 1990 - 95ம் ஆண்டு வாக்கில் கர்நாடகா போலீஸ்க்கு பெரும் சவாலாக விளங்கிய தண்டுபாளையா பகுதி கொள்ளையர்கள் இன்று சிறைக்குள் களி தின்று வந்தாலும்,  அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும் குறி வைத்து கர்நாடக முழுவதும் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளன! படம் பார்க்கும் நமக்கு இப்படத்தை பார்த்து கும்பலாக புதிய குற்றவாளிகள் யாரும் உருவாகாமல் இருக்க வேண்டுமே எனும் பயமும் லேசாக எழுகிறது!

கதைப்படி ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் ஊர் ஊராய் கொத்தனார், சித்தாள் வேலைக்கு போகும் தண்டுபாளையா வாசிகள், அங்கு வசதியான வீட்டை நோட்டமிட்டு, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்பது மாதிரி ஒரு பெண்ணை அனுப்பி வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்ததும் கும்பலாக உள்ளே நுழைந்து, வீட்டு பெண்களின் கழுத்தை அறுத்து, கற்பழித்த படி கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்காக வெளியில் உளவு பார்ப்பவர்கள், யாராவது பொதுமக்கள், அப்பகுதி வாசிகள் அந்தப்பக்கம் வந்தால் விசிலடித்து சிக்னல் கொடுத்ததும் இவர்கள் எஸ்கேப் ஆவதும் நமது இதய துடிப்பை எகிற வைக்கும் விதங்களில் படமாக்கப்பட்டுள்ளது. "கரிமேடு" படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது என்றாலும் பலவீன இதயம் உடையவர்களை படுத்தப்படுக்கையாக்கி விடும்படியான காட்சியமைப்புகள் கொடூரம்!!

பூஜா காந்தி, ரவிகாளே, த‌லைமையிலான கொள்ளை கும்பலிடம் புதுமணப் பெண் பிரியங்கா கோத்தாரியும், அவரது அண்ணியும் சிக்கி கற்பழிக்கப்பட்டு சாகுமிடங்கள், இதயமில்லாதவர்களின் இதயத்தையும் உறைய வைத்துவிடுகின்ற காட்சிகள் என்றால் மிகையல்ல! பூஜா காந்தி, ரவிகாளே, ரகு முகர்ஜி, பிரியங்கா கோத்தாரி, மகர்ந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட எல்லோரும் கொள்ளையர்களாகவும், கொள்ளையர்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் தங்கள் பாத்திரமறிந்து பயமுறுத்தியிருக்கின்றனர். அதிலும் போலீஸ் அதிகாரியாக வரும் சாய் ரவிசங்கர், ரசிகர்களை மிரட்டும் கொள்ளையர்களையே மிரளடித்திருப்பது சூப்பர்ப்! "வேட்டைக்காரன்" வில்லன் பாத்திரத்திற்கு பின் நடிகர் சாய்குமாரின் ‌சகோதரர் சாய்ரவிசங்கரை தமிழில் பேச வைத்திருக்கும் படம் "கரிமேடு" எனலாம்!

அர்ஜூன் ஜன்யாவின் இசை, ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரமாண்டங்களுடன் மதுரை கரிமேடாக தெரியும் படத்தின் வசனக்காட்சிகள், திடீர் திடீர் என கன்னட தண்டுபாளையாவாக மாறுவது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஸ்ரீனிவாச ராஜூ இயக்கத்தில், நரி மனிதர்கள் நிறைந்த "கரிமேடு" - "திகில்மேடு!!"


---------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்


வீட்டில் நீங்கள் தனியாக இருக்கும்போது கதவைத் தட்டி யாராவது தண்ணீர் கேட்டால் இனிமேல் தரமாட்டீர்கள்! இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி!

பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடாகத் தேடி கதவைத் தட்டி தண்ணீர் கேட்பாள் ஒரு பெண். அவளுக்குப் பின்னால் ஏழெட்டு ஆண்கள் இருப்பார்கள். இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றால், அவ்வளவுதான். அத்தனை பேரும் உள்ளே நுழைந்து வீட்டில் உள்ளவர்களை காலி செய்து நகைகளைக் கொள்ளையடித்து, பின்னர் கற்பழிப்பையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடையைக் கட்டுவார்கள்.

எங்கெங்கோ நடந்த உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து, குறும்பட பாணியில் டெரராய் ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கன்னடத்தில் காசை அள்ளிய படம் தமிழ் பேசுகிறது!

கதாநாயகியாக அல்லது வில்லியாக கலக்கியிருக்கிறார் பூஜா காந்தி. அலட்சியமான நடையும், வாயில் வைத்த பீடியும், கலைந்த தலையும், குலைந்த புடவையும், எதற்கும் கவலைப்படாமல் குத்துக்காலிட்டு உட்காரும் பாவமும் பயங்கரம். ரொம்ப நாளைக்கு அவரை மறக்க முடயாது!

அவருடன் கூட வரும் வில்லன்கள் எல்லாம் நிஜமான பொறுக்கிகள்தானோ என்கிற சந்தேகம் வருகிறது!

அந்த போலீஸ் அதிகாரி சின்னச் சின்ன க்ளூக்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது ராஜேஷ்குமார் நாவல் டச்!

கொலை பண்ண எவ்வளவோ வழிகள் இருக்கே. எதுக்குடா எல்லோரையும் கழுத்தைக் கத்தியால அறுத்தே கொன்னீங்க? “கழுத்தை அறுத்து முடிச்சவுடனே அந்த இடத்திலேர்ந்து ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம் வரும் பாருங்க. அது எனக்குப் பிடிக்கும் சார்’ வசனம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

கழுத்தை அறுக்கும் காட்சிகளும், கற்பழிப்புக் காட்சிகளும் படம் பூராவும் வருவது ரொம்ப ஓவர்.

ஜே ஜே படத்தில் நடித்த நிஷா கோத்தாரி குட்டி நாயகியாக வருகிறார். பரிதாபத்துடன் சாகிறார்.

தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையைச் சொல்லும் படத்துக்கு கரிமேடு என்று பெயர் வைத்திருக்கத்தான் வேண்டுமா?

கரிமேடு - உஷார் ரிப்போர்ட்!

குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து (1)

karthi - banglore,இந்தியா
07 ஜூன், 2013 - 20:02 Report Abuse
karthi இத படிக்கும் போதே அவ்ளோ பயமா இருக்கு. படம் பாத்தா எவ்ளோ பயம் வரும். உண்மையா நடந்தா எவ்ளோ பயம் வரும். படம் வந்தா சமுதாயத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லணும். இப்டி நாசமா போறதுக்கு ஐடியா குடுக்க கூடாது. இத allow பண்ணுன censor board ..... புடிங்கிட்டு இருக்கு. ஏதோ ஒரு safety report nu மனச தேத்திகிறோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in