''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2023ம் ஆண்டில் வெற்றியும், பரபரப்பும் எந்த அளவிற்கு இருந்ததோ அதைவிடப் பல மடங்கு தோல்வியும் ஏமாற்றமும் இருந்தது. சில படங்கள் மீதும், சில ஹீரோக்கள் மீதும், சில ஹீரோயின்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு சிறிய சதவீதம் கூட சம்பந்தம் இல்லாத அளவிற்கு அதிகபட்ச ஏமாற்றத்தை சில படங்களும், சில நட்சத்திரங்களும் தந்தார்கள். ஏன் இப்படி நடந்தது, எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் ஒரு முறை தங்களை மீண்டும் பகுப்பாய்வு செய்து பார்க்கட்டும் என்பதற்காகவே இந்த பட்டியல்…
த கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில், நிமிஷா சஜயன், சூரஜ் வெஞ்சாரமூடு நடித்து 2021ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம். தமிழ் ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள். அந்தப் படத்தை தமிழில் அதே பெயரில் கண்ணன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் நடிக்க உருவாக்கினார்கள். மலையாளத்தில் இருந்த அந்த ரசனை, படமாக்கம், தமிழில் இல்லாமல் போனது. நட்சத்திரத் தேர்வும் பொருத்தமில்லாமல் இருந்தது. தமிழில் இந்தப் படம் ரீமேக்காகி வந்ததே பலருக்கும் தெரியாது என்று சொல்லுமளவிற்கு இந்தப் படத்தின் வெளியீடு அமைந்தது.
பாகீரா
இந்த ஆண்டில் வெளிவந்து 100 கோடி வசூலைப் பெற்ற 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்ச் மாதம் வெளிவந்த படம்தான் 'பாகீரா'. பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்த படம். 'அவுட்டேட்டட்' கதையுடன் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்த படம். ஒரே ஆண்டில் படுதோல்வியையும், பெரும் வெற்றியையும் பார்த்த இயக்குனரானார் ஆதிக்.
ருத்ரன்
தயாரிப்பாளர் கதிரேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்ததால் இந்தப் படம் மீது வெளியீட்டிற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்த பின் ரசிகர்கள் ஏமாந்து போனதோடு, நொந்து போனார்கள். இப்படி ஒரு பழி வாங்கும் கதையா என சில ரசிகர்கள் கதறியதையும், யு டியூப் வீடியோக்களில் பார்க்க முடிந்தது. தமிழ் சினிமாவை 80களின் கால கட்டத்திற்குக் கொண்டு சென்ற படம் என பலர் கருத்து தெரிவித்தனர்.
பொன்னியின் செல்வன் 2
முதல் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகங்களுக்குக் கிடைக்காது என்ற 'சென்டிமென்ட்டை' மீண்டும் நிரூபித்த படம். இந்தப் படத்தின் வசூல் 300 கோடி என்று தகவல் வெளியானது. அவ்வளவு வசூலித்தாலும் ரசிகர்களின் ஏமாற்றத்தை முழுமையாக வெளிப்படுத்திய ஒரு படம். நாவலில் இருந்தது போன்ற முடிவு இல்லாதது இந்தப் படத்தைப் பற்றிய கடும் விமர்சனங்களை முன் வைத்தது. இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விடவும் அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்யாகிப் போனது.
காசேதான் கடவுளடா
ஒரு கிளாசிக்கல் படத்தை ரீமேக் என்ற பெயரில் எப்படி கெடுக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். சித்ராலய கோபு இயக்கத்தில், முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடிப்பில் 1972ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற படம். அந்தக் கால காமெடி படங்களில் இப்படத்திற்கு முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட ஒரு படத்தை ரீமேக் என்ற பெயரில் இரண்டாவது 'படுகொலை' செய்திருந்தார் இயக்குனர் கண்ணன். 'த கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக் முதல் கொலை, இது இரண்டாவது கொலை. இனிமேல் யாருமே பழைய படங்களின் ரீமேக்கை கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று பல ரசிகர்கள் செய்த கமெண்ட்கள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழுந்திருக்கும்.
எல்ஜிஎம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனிக்கு தமிழகத்தின் மீதும், தமிழ் ரசிகர்கள் மீதும் எப்போதுமே தனிப்பற்று உண்டு. அதற்காக அவர் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முன் வந்தார். 'Lets Get Married” , சுருக்கமாக 'எல்ஜிஎம்' என்ற தலைப்பில் புதுமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி என்பவரை நம்பி தன் படத்தை ஒப்படைத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்து, அதிகமான ஏமாற்றத்தை இந்தப் படம் கொடுத்தது. சினிமா தயாரிப்பு என்பது சாதாரணமானதல்ல என்பதை உணர்த்திய ஒரு படம். மீண்டும் ஒரு சிறந்த படத்துடன் தோனி தமிழுக்கு வருவாரா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா மற்றும் பலர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'சந்திரமுகி'. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்தார்கள். முதல் பாகத்தில் நடித்தவர்களில் வடிவேலு மட்டுமே இரண்டாம் பாகத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் ஏன் நடிக்கவில்லை என்பது படத்தைப் பார்த்த பலருக்கும் புரிந்தது. முதல் பாகத்தின் பெருமையை இந்தப் படம் கொஞ்சம் குலைத்தது என்று சொன்னால் அது மிகையில்லை.
இறைவன்
தமிழ் சினிமாவில் சரியான படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஒரு நடிகர் என்ற பெயர் ஜெயம் ரவிக்கு உண்டு. அவருடைய படங்களை நம்பிப் போய் பார்க்கலாம் என பலரும் நினைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நினைப்பில் ஜெயம் ரவி மண்ணை அள்ளிப் போட்ட ஆண்டாக இந்த ஆண்டு அமைந்தது. மார்ச் மாதத்தில் வெளிவந்த 'அகிலன்' என்ற மிகச் சுமாரான படத்தைக் கொடுத்த ஜெயம் ரவி, இந்த 'இறைவன்' படத்தை 'இப்படி பண்ணிட்டீங்களே' என சொல்லுமளவிற்கு அவருக்கு அமைந்த படம் இது. படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்ததாலும் கூட ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. என்னதான் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் சிறந்த கதை இல்லையென்றால் அந்தப் படத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.
800 த மூவி
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி தனிப் பெரும் சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர். அவரது பயோகிராபியில் பல தரப்பட்ட விஷயங்களை, உண்மைகளை படத்தில் சொல்லியிருந்தார்கள். இருந்தாலும், இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் போனது ஆச்சரியமாகவே இருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'எம்எஸ் தோனி' படத்தில் இருந்த உணர்வுபூர்வ திரைக்கதை அமைப்பு இந்தப் படத்தில் இருந்திருந்தால் இப்படமும் மக்களை அதிகமாக சென்றடைந்திருக்கும்.
ஜப்பான்
'ஜோக்கர்' என்ற படத்தைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் ராஜு முருகன், முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியுடன் சேர்கிறார் என்ற அறிவிப்பும், அதைத் தொடர்ந்து வந்த இந்தப் படத்தின் போஸ்டரும் ஒரு எதிர்பார்ப்பை ஆரம்பக் கட்டத்திலேயே ஏற்படுத்தியது. வித்தியாசமான பெயர், வித்தியாசமான கதாபாத்திரம் என வெளியீட்டிற்கு முன்பாக பலரும் பேசினார்கள். படம் வந்தபின் பலத்த அதிர்ச்சியைக் கொடுத்த படமாக இந்தப் படம் அமைந்தது. மாற்று சினிமாவை எடுக்க நினைக்கும் இயக்குனர்கள் கமர்ஷியல் சினிமாவை எடுக்க முன் வரக் கூடாது, கமர்ஷியல் சினிமாவில் நடிக்க நினைக்கும் நடிகர்கள் அதற்கான இயக்குனர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதை திரையுலகினர் பலருக்கும் புரிய வைத்த படம் இது.
ஒவ்வொரு வருடமும் சில படங்கள், சில இயக்குனர்கள் சில நடிகர்கள், சில நடிகைகள் நமக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார்கள். அந்தப் படங்களைப் பற்றிய அறிவிப்பு வரும் போதே அது அதிகமாக இருக்கும். அப்படியான எதிர்பார்ப்புகள்தான் இந்த மாதிரியான ஏமாற்றத்தைத் தருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுதான் சம்பந்தப்பட்டவர்களின் உழைப்பாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு சில விதத்தில் இந்தப் படங்கள் அவர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். அவை என்னவென்பதைப் புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு அவற்றைச் சரி செய்து மீண்டு வரட்டும் என வாழ்த்துவோம்.