சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? |
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் நிறைய இளம் இயக்குனர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான கதைகளைக் கொடுக்க முயற்சித்தாலும் விதவிதமான கதைகளைக் கொடுக்க அதிகம் முயற்சிக்கவில்லை. அதனால்தான் கடந்த பத்து வருடங்களில் குறும்படங்களை இயக்கி விட்டு சினிமாவுக்கு வந்த பல இயக்குனர்கள் ஒரே படத்தில் காணாமல் போய்விட்டார்கள்.
அவர்களில் எஞ்சியிருக்கும் சில இயக்குனர்களும் ஒரே டைப்பான கதைகளை வைத்தே படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது படங்களின் கதைகளை அலசி ஆராய்ந்து பார்த்தால் அவை அனைத்தும் 'கடத்தல்' என்ற மையப் புள்ளியைச் சுற்றி எழுதப்பட்ட கதைகளாகத்தான் இருக்கும். குழந்தை கடத்தல், சிறுவர், சிறுமியர் கடத்தல், ஆள் கடத்தல், பெண்கள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் என கடத்தல் நம்மைக் காப்பாற்றிவிடும் என இன்றைய இளம் இயக்குனர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்' ஆகிய மூன்று படங்களிலுமே கடத்தலை மையமாக வைத்தே படங்களை இயக்கினார். 'கோலமாவு கோகிலா' படத்தில் போதைப் பொருள் கடத்தல், 'டாக்டர்' படத்தில் சிறுமிகள் கடத்தல், 'பீஸ்ட்' படத்தில் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் ஆட்கள் கடத்தல் என கடத்தல்தான் அவரது படத்தில் மையமாக இருந்தது.
கமல்ஹாசன் நடித்து ஜூன் 3ல் வெளியான 'விக்ரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்போதைய இளம் இயக்குனர்களில் டாப் இடத்திற்கு வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய காலத்திலேயே விஜய், கமல்ஹாசன் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கிவிட்டார். அவரது இயக்கத்தில் வெளிவந்த 'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்' படங்களிலும் கடத்தல்தான் கதையின் மையம். 'மாநகரம்' படத்தில் ஒரு சிறுவனின் கடத்தல், 'கைதி, மாஸ்டர், விக்ரம்' படங்களில் போதைப் பொருள் கடத்தல்தான் கதையின் மையமாக இருந்தது.
வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'வலிமை' படத்தின் கதையும் போதைப் பொருள் கடத்தல் பற்றிய கதைதான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்து ஓடிடியில் வெளிவந்த 'மகான்' படத்தின் கதை சாராயக் கடத்தலை சுற்றி எழுதப்பட்ட ஒரு கதைதான்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடைசியாக ஓடிடியில் வெளிவந்த 'மாறன்' படம் பெண் கடத்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதையாக இருந்தது. இவை இந்த ஆண்டில் வெளிவந்த சில முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்த கதையம்சம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே 'போதைப் பொருள்' என்பதைச் சுற்றி பல படங்கள் வந்திருக்கிறது. அதில் பல சிறிய பட்ஜெட் படங்கள் கூட அடக்கம். உண்மையாகவே இப்படி ஒரு போதைப் பொருள் கடத்தல் இங்கு இருக்கிறதா என்பது பெரும் கேள்வி.
ஹாலிவுட் படங்களில்தான் இப்படியான கதைகள் காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது. பல வெளிநாடுகளில் போதைப் பொருள் கடத்தல், வியாபாரம் என்பது பல கோடி மதிப்புள்ள கடத்தல் தொழிலாக இருக்கிறது. இந்தியாவில் மற்ற வெளிநாடுகளில் இருப்பதைப் போல இந்த போதைப் பொருள் கடத்தல் தொழில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் அது பற்றிய செய்திகளைப் படிக்கிறோம்.
கஞ்சா கடத்தல் என்பது அடிக்கடி நடப்பதாகத்தான் செய்திகளைப் படிக்கிறோம். ஆனால், கஞ்சா கடத்தல் என படங்களில் வைத்தால் அது 'லோக்கல்' படமாக இருக்கும் என நினைத்து 'போதைப் பொருள்' கடத்தலாக வைத்தால் ஹை-பை படமாக இருக்கும் என நினைக்கிறார்களோ என்னவோ?.
இப்படி போதைப் பொருளை கடத்தலாக படங்களில் வைப்பதை சுலபத்தில் கடந்து போய் விட முடியாது. சில படங்களில் அது என்னவெல்லாம் தாக்கத்தைக் கொடுக்கும், எப்படிப்பட்ட போதையைக் கொடுக்கும் என்பதை டீடெய்லாகவே படங்களில் காட்டுகிறார்கள். ஏற்கெனவே தமிழகத்தில் குடிப்பழக்கத்திற்கு அதிக இளைஞர்கள் அடிமையாகி இருக்கிறார்கள். படங்களில் போதைப் பொருளின் போதை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் அதைத் தேடிப் போக ஆரம்பித்து விடுவார்கள்.
ஒரு காலத்தில் திரைப்படங்களில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் அவர்களது படங்களில் அதிகமான புகை பிடிக்கும் ஸ்டைலான காட்சிகளை வைத்திருந்தார்கள். அதைப் பார்த்து புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளான பலரை உதாரணமாகக் காட்ட முடியும். இப்போது புகை பிடிக்கும் காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகத்தை படங்களில் காட்டுகிறார்கள்.
ஆனால், அது மட்டும் போதாது. இது போன்று தொடர்ச்சியாக போதைப் பொருள் கடத்தல் பற்றிய படங்களை எடுக்கும் இளம் இயக்குனர்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அல்லது போதைப் பொருள் பற்றி அதிக விவரத்துடன் காட்சிகளை அமைக்கக் கூடாது என சென்சார் அதிகாரிகள் கண்டிப்பு காட்ட வேண்டும்.
இதை முயற்சித்துப் பார்த்தால் என்ன என்பதுதான் போதைப் பழக்கத்தின் முதல் படியாக இருக்கிறது. இளம் தலைமுறையினரைக் காப்பாற்ற சினிமாவிலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.