மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பதற்கு ஏற்ப வெள்ளித்திரை பிரபலங்களை போல சின்னத்திரை பிரபலமான இவர் செயல்படுவது யாருக்குமே தெரியாது. நடித்தால் தனக்கு மட்டுமே பலன்; மற்றவர்களும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கணவருடன் இணைந்து தொழில் நிறுவனத்தையும் துவக்கி பலருக்கு வாழ்க்கையை கொடுத்து வருகிறார். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் சீரியல் உலகில் தவிர்க்க முடியாத நடிகையான ரோஜாஸ்ரீ.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக ரோஜாஸ்ரீயுடன் பேசியதிலிருந்து...
ஐதராபாத் சொந்த ஊர். அப்பா மிமிக்ரி ஆர்டிஸ்ட். நடிகர்களை போல குரல் கொடுப்பார். இதனால் எனக்கும் நடிக்க ஆர்வம் சிறு வயதிலேயே இருந்தது. நகை தயாரிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர் அம்மா. இதனால் தொழில் விஷயமாக சென்னையில் குடியேற வேண்டியிருந்தது. இது சின்னத்திரையில் சிறுவயதிலேயே நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
பல சீரியல்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்தேன். பெரியவளான பிறகு நடித்த சித்தி, அண்ணி சீரியல்கள் எனக்கு 'பிரேக்' கொடுத்தன. 'இருக்காதோ காதல்' தெலுங்கு படத்திற்காக ராதிகாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளவயது காதலை சொல்லும் படம். இதில் என் நடிப்பை கவனித்த ராதிகா, அவரது நிறுவன சீரியல்களில் வாய்ப்பு தந்தார். இதன் மூலம் மறைந்த இயக்குனர் பாலசந்தர், ஏ.வி.எம்., நிறுவன சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். ஏ.வி.எம்., நிறுவனம் எனக்கு 'தாய் வீடு' மாதிரி.
தற்போது பவித்ரா சீரியலில் 'நெகட்டிவ்' ரோலில் நடித்து வருகிறேன். 'பாசிட்டிவ்' கேரக்டர்களை காட்டிலும் 'நெகட்டிவ்' கேரக்டர் தான் மக்களிடம் நம்மை எளிதில் கொண்டு செல்லும். இடையே சினிமா வாய்ப்புகளும் வந்தன. மறைந்த மயில்சாமி நடித்த 'ஜஸ்ட் நம்பர் 18 பில்ட்அப்' படத்தில் நடித்திருக்கிறேன். தற்போது 'கிளியோபட்ரா' படத்தில் நடித்து வருகிறேன்.
நம்மை நாம் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும். நாம் அழகாக இருக்கிறோம் என முதலில் நாமே நினைக்க வேண்டும். இதுவே நம்மை மற்றவர்களுக்கு அழகாக காட்டி விடும். இதனால் பியூட்டிக்கு நான் மெனக்கெடுவதில்லை.
சீரியல், சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் கூட அவற்றில் நடிப்பதன் மூலம் நமக்கு மட்டும் தான் பலன். மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்த போது கணவர் தொழில் செய்ய ஐடியா கொடுத்தார். அவர் ஈடுபட்டுள்ள கட்டுமானத்தொழிலில் நானும் இறங்கினேன். என் நிறுவனத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக நடிப்பு வாய்ப்புகளை குறைத்து கொண்டு மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்புகளுக்கு ஒத்து கொள்கிறேன்.
ஆதரவற்றோர்களுக்காக 'ஸ்மைல்' தொண்டு நிறுவனம் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் அரசுக்கு நிதி வழங்கியுள்ளேன். வெளியில் தெரியாதளவிற்கு சமூக சேவையில் ஈடுபடுகிறேன். பெண்கள் தங்கள் மீது தன்னம்பிக்கை வைத்து, பிடித்த துறைகளில் இறங்கினால் சாதிக்கலாம் என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.