பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் |
தமிழில் வெளிவந்த சில நல்ல திரைப்படங்களை பட்டியலிட்டால், அவற்றில் சில செழியன் ஒளிப்பதிவு செய்த படமாக இருக்கும். ஜோக்கர், பரதேசி, டுலெட் என்ற படங்களே அதற்கு சாட்சி. இவர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த 'டுலெட்' படம் 30 நாடுகளில் வெளியாகி 17 சர்வதேச விருதுகளை குவித்தது. இவர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய 'உலக சினிமா' என்ற நுால் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றது.
இருபது வருடங்களுக்கு முன் எழுதிய இந்த புத்தகத்தை மக்கள் பதிப்பாக அண்மையில் வெளியிட்ட போது புத்தகம் வாங்க அரங்கு கொள்ளாத அளவிற்கு இளைஞர்கள் கூட்டம். அந்த அபூர்வ எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் செழியனோடு பேசிய போது...
நான் எழுத்தாளன் என எப்போதுமே சொல்லிக் கொண்டது இல்லை. நான் எழுதுவதை நிறுத்தி நீண்ட காலமாகிவிட்டது. நான் முழுமையான சினிமாக்காரன். என் பேச்சு மூச்சு எல்லாமே ஒளிப்பதிவுதான். இருபது வருடங்களுக்கு முன் என்னை நான் சினிமாவிற்கு தயாராக்கிக் கொள்வதற்காக உலக சினிமாக்களை தேடித்தேடி பார்த்தேன். நான் பார்த்ததில் ரசித்த படங்களைப் பற்றிச் சொன்னால் மற்றவர்களும் அந்த படத்தைப் பார்த்து ரசிப்பார்களே என்பதற்காக எழுதியதுதான் அந்த நுால்.
கடந்த வருடம் புத்தக திருவிழாவிற்கு போயிருந்த போது சீர் வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தார் புதுமைப்பித்தன் கதைகளைத் தொகுத்து 100 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தனர். நாம் ஏன் நமது உலக சினிமாவை இது போல குறைந்த விலையில் கொடுக்கக்கூடாது என்ற யோசனையின் விளைவுதான் இந்த குறைந்த விலை உலக சினிமா புத்தகம்.
நான் கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன், ஒவியம் வரைவேன், இசை படித்திருக்கிறேன், புகைப்படம் எடுப்பேன். இது அத்தனையையும் திரைப்பட ஒளிப்பதிவு என்ற உயரத்திற்கு செல்ல உதவும் படிக்கட்டுகளாகவே பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு ராக்கெட் பல்வேறு உபகரணங்களின் உதவியோடு மேலே செல்லும்; அப்படி மேலே செல்லச் செல்ல உபகரணங்களை கழற்றிவிட்டுக் கொண்டே செல்லும். எல்லாவற்றையும் சுமந்து கொண்டே சென்றால் குறிப்பிட்ட இலக்கை அடைவது சிரமம்; எனது இலக்கு ஒளிப்பதிவு. அதில்தான் என் சாதனைகள் தொடரும்.
இயக்குனர் தான் தேர்ந்தெடுத்த கதையை படமாக்கும் முன் அதை ஒளிப்பதிவாளர் முழுமையாக உள்வாங்க வேண்டும் என்பதற்காக என்னிடம் கொடுப்பார். நான் அந்தக் கதையை படித்துவிட்டு இந்தக் காட்சிக்கு எப்படி சீன் அமைக்க வேண்டும் என்று சிந்திப்பேன். இப்படி நிறைய கதைகளை படித்ததால் வாசிப்பு எனக்கு பிடித்த விஷயமாகிப்போனது.
உலகப்படங்கள் பார்த்த பாதிப்பு
பாட்டும் டான்சும், எதார்த்தமின்மையும்தான் நமது படங்களை வெளிநாடுகளில் அன்னியப்படுத்தி வைத்திருக்கிறது. எதார்த்த வாழ்வியலை படமாக்கும் கலைதான் உலக சினிமா. அப்படிப்பட்ட படங்களின் பாதிப்புதான் நான் எடுத்த 'டுலெட்'. இது போன்ற பரிசோதனை முயற்சியில் யாருக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது என்பதற்காக ஒளிப்பதிவு செய்து சம்பாதித்த பணத்தைப் போட்டு நானே இந்தப் படத்தை தயாரித்து இயக்கினேன்.
ஆர்ட் பிலிம் ஒளிப்பதிவாளரா
அவ்வப்போது அப்டேட் ஆகிக்கொள்ள வேண்டும்; இல்லையேல் அவுட்டேட் ஆகிவிடுவோம். இது சினிமாவிற்கு ரொம்பவே பொருந்தும். அந்த வகையில் இப்போது பிரபலமாகியிருப்பதுதான் ஏஐ., தொழில்நுட்டம். இதனிடம் ஒரு காட்சியைச் சொன்னால் இப்படி வேண்டுமா? அப்படி வேண்டுமா? என்று பக்கம் பக்கமா கலர் பின்னணியுடன் நம்மை கேட்கிறது. ஆனாலும் அது ஒரு கருவிதான்; அந்த கருவியைக் கண்டு பயப்படக்கூடாது. அதை எப்படி வேலை வாங்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கிராமத்தில் பத்தாயிரம் ரூபாய் போட்டு பெட்டிக்கடை போடுபவர் கூட இரண்டாயிரம் ரூபாய் லாபம் பார்க்கத்தான் செய்வார். அப்படியிருக்கும் போது பல கோடிகள் போட்டு சினிமா எடுப்பவர்கள் லாபத்தை எதிர்பார்த்துதான் படமெடுக்கின்றனர். ஆகவே எடுக்கப்படும் எல்லாபடங்களுமே கமர்ஷியல் படங்களே. அப்படி எடுக்கும் படங்களில் கொஞ்சம் நேர்மையும், எதார்த்தமும் இருக்கும் படங்களும் வந்துள்ளன. அப்படிப்பட்ட படங்களில் நான் ஒளிப்பதிவாளராக இருந்ததால் ஆர்ட் பிலிம் ஒளிப்பதிவாளர் என்ற சாயம் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.
இதை மாற்றுவதற்காகவே இப்போது சில படங்கள் செய்கிறேன். நான் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளனாக சேர்ந்து கற்றுக் கொண்டதே கமர்ஷியல் படங்கள் எடுக்கும் வித்தையைத்தான். ஆனால் அந்த வித்தையை இன்னமும் நான் கையாளவில்லை; இனி அதிலும் உச்சம் தொடுவேன் என்றார்.