அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'சீக்ரெட்' படத்தில் இடம் பெற்றுள்ள 'மயாஜாலக்காரா...' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து கொண்டுள்ளது. தன்னுடைய இந்த முதல் திரைப்பாடல் மூலம் கலை உலகில் பேசப்படுபவராக மாறியிருக்கிறார் கர்நாடகா இசைக்கலைஞரான கார்த்திகா ஆர்.குமார்.
கோட்டயத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் மதுரையில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். பல பக்தி பாடல்கள், தனி பாடல் ஆல்பம் வெளியிட்டுள்ள இவரது கர்நாடக இசைக்கச்சேரி இடம் பெறாத கோயில் விழாக்களே கேரளாவில் இல்லை. ஆறு வயதில் கர்நாடகா இசையை கற்க துவங்கியவர் 26 ஆண்டுகளாக கர்நாடக இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
கார்த்திகாவின் தந்தை ரவிக்குமார் வருமானவரித்துறை தமிழ்நாடு, கேரளா மாநில முதன்மை கமிஷனராக பணிபுரிந்தவர். தாயார் ராஜலட்சுமி. இவரது பெரியப்பா கோட்டயம் மருத்துவக்கல்லுாரி பேராசிரியரான கோபாலகிருஷ்ணநாயர். சிறந்த கர்நாடக இசைகலைஞர். இவர் கர்நாடகா சங்கீதத்தில் பல ராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியவர்.
சிறுமியான கார்த்திகா பெரியப்பாவின் இசைக்கச்சேரிகளை கேட்டு அதில் ஆர்வம் கொண்டார். தந்தை மதுரையில் பணிபுரிந்ததால் கேந்திரா வித்யாலயா, திருப்பாலை ஜெயின் பள்ளியில் படித்த போது சத்குரு சங்கீத சமாஜம் இசை பேராசிரியை பாரதிமகாதேவனிடம் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்க துவங்கினார். பின் பேராசிரியைகள் வித்யா, ரெங்கநாயகி ஆகியோரிடமும் இசை பயின்றார். ரெங்கநாயகியின் கணவர் சச்சிதானந்தம் அகில இந்திய வானொலியில் வயலின் வித்வான். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக இசைக்கச்சேரியை அரங்கேற்றிய கார்த்திகாவின் கச்சேரியில் வயலின் வாசித்து உற்சாகமூட்டினார்.
வலையப்பட்டி இசைக் கலைஞர் ஏ.ஆர்.சுப்பிரமணியம் கும்பகோணம் குடவாசல் செங்காலிபுரத்தில் நடந்த கச்சேரியில், கார்த்திகாவின் திறமையை கவுரவிக்கும் வகையில் இணைந்து பாடி பாராட்டினார். ஆகமதாபாத், சூரத் உள்ளிட்ட இடங்களில் உயர்கல்விக்காக சென்ற போதும் அங்கும் கார்த்திகாவின் கச்சேரிகள் தொடர்ந்தன. தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி திறமையை வெளிப்படுத்தினார்.
கோட்டயம் பனச்சிக்காடு தட்சிணமூகாம்பிகா கோயிலில் 12 மணி நேர சங்கீத ஆராதனையை செய்து பாராட்டையும் பெற்றார். செம்பை சங்கீத உற்ஸவம், சதாசிவபிரமேந்திராள் ஆராதனை, குஜராத் திருவிழாக்களில் இவர் இசை கச்சேரிகளை நடத்தி கவனம் பெற்றார். இவரது திறமையை பாராட்டும் வகையில் தமிழ் இசை சங்கத்தின் வளரும் இசை கலைஞர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது 10 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதத்தை கற்று கொடுத்து வரும் கார்த்திகா சிறப்பு குழந்தைகளுக்காக மியூசிக் தெரபியும் அளித்து வருகிறார். பீலி திருமுடி.. நிஷா சலபம் உள்ளிட்ட தனி பாடல்கள் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
டிவி இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இவரது திறமையை கண்ட இயக்குனர் எஸ்.என்.சாமி தான் இயக்கிய சீக்ரெட் படத்தில் மாயாஜாலக்காரா என்ற பாடலை பாட வைத்துள்ளார். இதையடுத்து பெரியிடப்படாத மற்றொரு படத்தின் டைட்டில் பாடலையும் கார்த்திகா பாடி முடித்திருக்கிறார்.
அடுத்த பாடல் தொகுப்பு வெளியிடும் பணியில் பிஸியாக இருந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
சிறு வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. பாடகிகள் ஜானகி, சித்ரா, ஷ்ரேயா பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. மியூசிக் தெரபி மூலம் சிறப்பு குழந்தைகளை திறன்மிக்கவர்களாக்க வேண்டும். தெய்வீக இசையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. கர்நாடக சங்கீதம் மூலம் மக்களை மகிழ்விக்கவும் வேண்டும். மக்கள் கவலைகளை மறந்து ரசிக்க சிறப்பு பாடல் ஆல்பங்களை வெளியிடவும் உள்ளேன்.
ஜீவனானது இசை நாதமென்பது... முடிவில்லாதது... வாழும் நாளெல்லாம் எனை வாழ வைப்பது... இசை என்றானது... எண்ணத்தின் ராகத்தின் மின்சாரம்... என் உள்ளே மவுனத்தின் சங்கமம்... இணைந்தோடுது... இசை பாடுது!
இவ்வாறு இசையாகவே பேசினார்.