சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள் | டிசம்பர் மாதத்தில் புறநானூறு பட படப்பிடிப்பு? | சுந்தர்.சி இயக்கத்தில் ரவி தேஜா? | தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு | 'விவாரியம்' ஹாலிவுட் படத்தின் ரீமேக் 'பிளாக்' ? | இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் நாற்காலியின் 4வது கால் | லிப்லாக் முத்த காட்சியில் நடிக்க ஒளிப்பதிவாளர் தான் காரணம் : இனியா | பிளாஷ்பேக் : நடிகராக தோற்று இயக்குனராக ஜெயித்த பி.ஆர்.பந்துலு | விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை : தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா? |
வரலாற்று புரிதல் ஏற்பட்டு தமிழில் பல்வேறு வரலாற்று திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. அந்த வகையில் சோழர்கள் படம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியான, அதே நேரத்தில் சத்தமில்லாமல் வெற்றி பெற்றுள்ளது பாண்டியர்கள் பற்றி பேசும் யாத்திசை.
இத்திரைப்படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் கூறியதாவது:
2012ல் பொறியியல் பட்டம் முடித்தேன். 2010 முதலே சினிமா அதிகம் பார்க்கும் பழக்கம் இருந்தது. எனது நண்பரும், இத்திரைப்படத்தின் எடிட்டருமான மகேந்திரனுடன் இணைந்து படம் பார்ப்பது வழக்கம். அப்போது சர்வதேச திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. பொழுது போக்கு பழக்கமாக மாறி, அந்த பழக்கம் பெரும் ஆர்வமாக மாறி திரைப்படம் இயக்கும் ஆசை வந்தது. பொறியியல் முடித்ததும் திரைப்படம் எடுக்க வேண்டும் என முடிவுக்கு வந்து விட்டேன்.
இருப்பினும் எந்த பின்புலமும் இல்லாததால் சிரமப்பட்டேன். அப்போது என் அம்மா சினிமா தான் வேண்டும் என்றால் அது தொடர்பாக படி. அப்போது புரிதல், தொடர்பு கிடைக்கும் என்றார். சென்னை பிலிம் இன்ஸ்டிட்டியுட்டில் ஒளிப்பதிவு கற்று கொண்டேன்.
உதவி இயக்குனராக இருக்க விருப்பமின்றி நானே குறும்படங்களை இயக்க முயற்சித்தேன். ஸ்மார்ட் போன், குட்டி கேமராக்கள் வைத்து குறும் படம் எடுத்தேன். ஓவியர், நடிகர் வீர சந்தானம் தொடர்பு கிடைத்தது.
அவரை வைத்து நான் உருவாக்கிய கதை தான் ஞானசெருக்கு திரைப்படம். 80 வயதில் ஒருவருக்கு இயக்குனராகும் ஆசை வந்தால் என்னவாகும் என்பதை வைத்து படம் எடுத்தேன். படப்பிடிப்பில் நிறைய அணுகுமுறைகளை கற்று தந்தார்.
ஞானசெருக்கு பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 2020ல் படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. இதனால் மீண்டும் நான் சிரமப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். நேரத்தை வீணாக்க கூடாது என புத்தகங்களை எழுத துவங்கினேன். 'நானும் என் பூனைக்குட்டிகளும்', 'லிபரேட்டுகள் 1, 2', 'கடவுளை தரிசித்த கதை', 'சாண்ட்விச்' என 5 புத்தகங்களை எழுதினேன்.
மீண்டும் புத்தக வாசிப்பு, ஆய்வு என இருந்தவன் வரலாற்று தொடர்பான படம் எடுக்க முடிவு செய்தேன். அப்போது உருவான கதை தான் 'யாத்திசை'. இப்படத்திற்காக பல புத்தகங்கள், பாண்டியர்கள், எயினர்களின் வாழ்வியலை ஆய்வு செய்தேன். சிறு சிறு விஷயங்களுக்கும் அதிகம் கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
அதிகாரத்தில் இருப்போர் தங்களை தக்க வைக்க நினைப்பது குறித்து கதை எழுத விரும்பினேன். 7ம் நுாற்றாண்டில் நடப்பது போல் கதை எழுதினேன்.
தற்போது பலரது பாராட்டை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து அடுத்த திரைப்படம் இயக்க உத்வேகத்துடன் தயராகி வருகிறேன், என்றார்.