இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
‛‛ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ.... பார்வையிலேயே குமரியம்மா, பழக்கத்திலேயே குழந்தையம்மா.... ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ....'' என்ற பாடலில் நடிகை சாவித்திரியை நினைத்து பாடுவார் நடிகர் சிவாஜி கணேசன். அந்த பாடல் வரிக்கு நிஜ வாழ்க்கையிலும் பொருத்தவமானவர் நடிகை சாவித்திரி என்றால் மிகையல்ல. திரை உலகில் உச்சம் தொட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் மகா (நடி) கையாக திகழ்ந்தார். அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மகாராணியாகவும் வாழ்ந்தார். கடைசி காலத்தில் கடும் துன்பங்களையும் சந்தித்தார். திரைவாழ்வில் மின்னி, நடிகையர் திலகமாக திகழ்ந்த சாவித்திரியின் 86-வது பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1935ம் ஆண்டு டிச., 6ல் பிறந்தவர் நடிகை சாவித்திரி. ஆறு வயது சிறுமியாக இருக்கும்போதே தனது தந்தையை இழந்த நடிகை சாவித்திரி தனது எட்டாவது வயதிலேயே இசை மற்றும் நடனம் கற்க ஆரம்பித்தார். பிறவியிலேயே சுறுசுறுப்பும், சுட்டித்தனமும் உள்ள இவர், தனது பன்னிரண்டு வயதுக்குள்ளேயே இசை, நடனம் என கற்றுத் தேர்ந்தார். 1950ல் நடந்த நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் இவர் ஆடிய நடனம் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாகவும், சினிமா வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்தது. இயக்குநர் எல்வி பிரசாத் இயக்கத்தில் "சம்சாரம்" என்ற தெலுங்குப் படம்தான் சாவித்திரி நடித்த முதல் திரைப்படம்.
சின்னப் பெண்ணான சாவித்திரியின் நடிப்பு திருப்தி அளிக்காததால் பாதியிலேயே நிறுத்தச் சொல்லிவிட்டார் இயக்குநர். இது சாவித்திரிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட சாவித்திரிக்கு வெற்றியும் கிட்டியது. அடுத்து வந்த "பாதாள பைரவி" திரைப்படத்தில் இவருடைய நடனம் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து "கல்யாணம் பண்ணிப்பார்" திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகி வேடமேற்று நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். இதுவே நாயகியாக இவர் நடித்து வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமுமாகும்.
1953ஆம் ஆண்டு வெளிவந்த "மனம்போல மாங்கல்யம்" திரைப்படம் தான் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படம். பின்னர் இந்த ஜோடி மிஸ்ஸியம்மா, "குணசுந்தரி", "மாமன் மகள்", "பிரேம பாசம்", "மாயா பஜார்", "கற்புக்கரசி", யார் பையன், "சௌபாக்கியவதி" என தொடர்ந்து 50 மற்றும் 60களில் பெரும்பாலான தமிழ்ப் படங்களில் இவ்விருவருமே நாயகன் நாயகியாக நடித்து வந்தனர்.
சாவித்திரியின் திரைப்பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "தேவதாஸ்". இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டிலும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்ததோடு மட்டுமல்லாமல் சாவித்திரியின் நடிப்பாற்றலை திரையுலகிற்கு பறைசாற்றியது. ஜெமினி கணேசன் சாவித்திரி ஜோடியின் இரண்டாவது திரைப்படம் "மிஸ்ஸியம்மா". 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு மட்டுமின்றி, திரையில் ஜோடியாக நடித்து வந்த இவ்விருவரையும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைய வைத்ததும் இத்திரைப்படம் தான்.
சாவித்திரியின் நடிப்பாற்றலுக்கு அவருடைய எண்ணற்ற படங்கள் நம் நினைவிற்கு வந்தாலும், சிவாஜி கணேசனின் தங்கையாக இவர் நடித்து 1961 ஆம் ஆண்டு ஏ பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான பாசமலர் திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க இயலாது. அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்றுவரை உதாரணம் சொல்லப்படும் படம் "பாசமலர்" என்றால் அது மிகையன்று. அந்தளவிற்கு இருவரும் அண்ணன் தங்கையாக நடிக்காமல் படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தனர். இத்திரைப்படத்தில் சிவாஜியோடு போட்டிப் போட்டு சாவித்திரி நடித்ததால் தான் அவரை "நடிகையர் திலகம்" என்றும் அழைத்தனர்.
1964 ஆம் ஆண்டு ஏ பி நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து வெளிவந்த வெற்றிப்படமான "நவராத்திரி" திரைப்படத்தில் சிவாஜிக்கு ஒவ்வொரு வேடத்திலும் ஒப்பனை வேறு, உடையலங்காரம் வேறு, சிகையலங்காரம் வேறு. ஆனால் ஒரே வேடமேற்று ஒன்பது சிவாஜிக்கும் ஈடு கொடுத்து நடிப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அதை அநாயசமாக ஊதித் தள்ளியிருப்பார் "நடிகையர் திலகம்" சாவித்திரி. இவருடைய நடிப்பைப் பார்த்து சிவாஜியே என்னை மிஞ்சி விட்டாய் என்று மனதார பாராட்டியிருந்தார்.
ஒரு நடிகையாக தனது காலத்தை கழித்து விடாமல் தயாரிப்பாளர், இயக்குநர் என்றும் அவதாரம் எடுத்த ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த அற்புத திரைக் கலைஞர் நடிகையர் திலகம் சாவித்திரி. "சின்னாரி பாப்புலு" என்ற தெலுங்குப் படத்தை தயாரித்து இயக்கியும் இருந்தார். இத்திரைப்படம் தமிழிலும் இவரே தயாரித்து, இயக்கி "குழந்தை உள்ளம்" என்ற பெயரில் வெளிவந்தது. தெலுங்கு நடிகர் ஏ.நாகேஸ்வரராவுடன் இவர் இணைந்து நடித்து மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் "மூகமனசுலு". இதனை தமிழில் "பிராப்தம்" என்ற பெயரில் சிவாஜியோடு இணைந்து நடித்ததோடு மட்டுமின்றி தயாரித்து, இயக்கியும் இருந்தார். இத்திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
திரைவாழ்விலும், தனிவாழ்விலும் பல சோதனைகளைக் கடந்து வந்த சாவித்திரி, இவற்றையெல்லாம் தனது நடிப்பு என்னும் ஆற்றலைக் கொண்டு வீழ்த்தி வந்தார் என்றால் அது மிகையன்று. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ் என அன்றைய அனைத்து முன்னணி நாயகர்களுடனும் ஜோடியாக நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.
சினிமாவில் ராணியாக வலம் வந்த இவர் ஒருக்கட்டத்தில் வாழ்க்கையின் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இவர், தொடர்ந்து 19 மாதங்கள் கோமா நிலையிலேயே இருந்து நினைவு திரும்பாமலேயே தனது 46வது வயதில் மரணமடைந்தார்.
திரைத்துறையில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி திரையில் மின்னிய இந்த வெள்ளித் தாரகைக்கு, இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு அவருடைய சிறப்புக்கு கவுரவம் சேர்த்து, மகுடம் சூட்டியது. 1960ல் சிறந்த நடிகைக்கான "ராஷ்டிரபதி விருது" "சிவராகு மிகிலேடி" என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது. 1968ல் சிறந்த திரைப்படத்திற்கான "நந்தி விருது" இவர் தயாரித்து இயக்கிய "சின்னாரி பாப்புலு" என்ற தெலுங்கு படத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி விருது" வழங்கி கௌரவித்துள்ளது.
நடிகை சாவித்திரி நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்
1. பாதாள பைரவி - டான்ஸர்
2. கல்யாணம் பண்ணிப்பார் - கதாநாயகி
3. மனம் போல மாங்கல்யம் - கதாநாயகி
4. தேவதாஸ் - கதாநாயகி
5. பரோபகாரம் - கதாநாயகி
6. வஞ்சம் - கதாநாயகி
7. சுகம் எங்கே - கதாநாயகி
8. சந்திரஹாரம் - கதாநாயகி
9. மிஸ்ஸியம்மா - கதாநாயகி
10. கோமதியின் காதலன் - கதாநாயகி
11. சந்தானம் - கதாநாயகி
12. குணசுந்தரி - கதாநாயகி
13. செல்லப் பிள்ளை - கதாநாயகி
14. மகேஸ்வரி - கதாநாயகி
15. மாமன் மகள் - கதாநாயகி
16. அமரதீபம் - கதாநாயகி
17. பெண்ணின் பெருமை - கதாநாயகி
18. மாதர்குல மாணிக்கம் - கதாநாயகி
19. பிரேம பாசம் - கதாநாயகி
20. மாயா பஜார் - கதாநாயகி
21. வணங்காமுடி - கதாநாயகி
22. குடும்ப கௌரவம் - கதாநாயகி
23. எங்க வீட்டு மகாலட்சுமி - கதாநாயகி
24. கற்புக்கரசி - கதாநாயகி
25. யார் பையன் - கதாநாயகி
26. சௌபாக்கியவதி - கதாநாயகி
27. மகாதேவி - கதாநாயகி
28. இரு சகோதரர்கள் - கதாநாயகி
29. பத்தினி தெய்வம் - கதாநாயகி
30. கடன் வாங்கி கல்யாணம் - கதாநாயகி
31. அன்னையின் ஆணை - கதாநாயகி
32. காத்தவராயன் - கதாநாயகி
33. பதிபக்தி - கதாநாயகி
34. அதிசயத் திருடன் - கதாநாயகி
35. திருமணம் - கதாநாயகி
36. மணமாலை - கதாநாயகி
37. மஞ்சள் மகிமை - கதாநாயகி
38. பானை பிடித்தவள் பாக்கியசாலி - கதாநாயகி
39. பாக்கிய தேவதை - கதாநாயகி
40. களத்தூர் கண்ணம்மா - கதாநாயகி
41. புதிய பாதை - கதாநாயகி
42. பாட்டாளியின் வெற்றி - கதாநாயகி
43. குறவஞ்சி - கதாநாயகி
44. பாசமலர் - கதாநாயகி
45. பாவமன்னிப்பு - கதாநாயகி
46. கப்பலோட்டிய தமிழன் - கதாநாயகி
47. அன்பு மகன் - கதாநாயகி
48. தூய உள்ளம் - கதாநாயகி
49. எல்லாம் உனக்காக - கதாநாயகி
50. மனிதன் மாறவில்லை - கதாநாயகி
51. காத்திருந்த கண்கள் - கதாநாயகி
52. கொஞ்சும் சலங்கை - கதாநாயகி
53. பந்தபாசம் - கதாநாயகி
54. பார்த்தால் பசி தீரும் - கதாநாயகி
55. வடிவுக்கு வளைகாப்பு - கதாநாயகி
56. பாதகாணிக்கை - கதாநாயகி
57. படித்தால் மட்டும் போதுமா - கதாநாயகி
58. இரத்தத் திலகம் - கதாநாயகி
59. பரிசு - கதாநாயகி
60. கற்பகம் - கதாநாயகி
61. கர்ணன் - துணை கதாபாத்திரம்
62. வேட்டைக்காரன் - கதாநாயகி
63. நவராத்திரி - கதாநாயகி
64. கை கொடுத்த தெய்வம் - கதாநாயகி
65. ஆயிரம் ரூபாய் - கதாநாயகி
66. திருவிளையாடல் - கதாநாயகி
67. ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் - கதாநாயகி
68. வல்லவனுக்கு வல்லவன் - துணை நடிகை
69. பூஜைக்கு வந்த மலர் - கதாநாயகி
70. தட்டுங்கள் திறக்கப்படும் - கதாநாயகி
71. சரஸ்வதி சபதம் - சரஸ்வதி தேவி கதாபாத்திரம்
72. அண்ணாவின் ஆசை - கதாநாயகி
73. கந்தன் கருணை - பார்வதி தேவி கதாபாத்திரம்
74. திருவருட் செல்வர் - அப்பூதி அடிகள் மனைவி கதாபாத்திரம்
75. சீதா - கதாநாயகி
76. மனசாட்சி - துணை கதாபாத்திரம்
77. பிராப்தம் - கதாநாயகி
78. தாய்க்கு ஒரு பிள்ளை - துணை கதாபாத்திரம்
79. புகுந்த வீடு - துணை கதாபாத்திரம்
80. சூரியகாந்தி - துணை கதாபாத்திரம்
81. வீட்டு மாப்பிள்ளை - துணை கதாபாத்திரம்
82. ஜக்கம்மா - துணை கதாபாத்திரம்
83. மஞ்சள் குங்குமம் - துணை கதாபாத்திரம்
84. பெத்தமனம் பித்து - துணை கதாபாத்திரம்
85. எங்கள் தாய் - துணை கதாபாத்திரம்
86. அக்கரைப் பச்சை - துணை கதாபாத்திரம்
87. பாக்தாத் பேரழகி - துணை கதாபாத்திரம்
88. அந்தரங்கம் - துணை கதாபாத்திரம்
89. புது வெள்ளம் - துணை கதாபாத்திரம்
90. புனித அந்தோணியார் - துணை கதாபாத்திரம்
91. உன்னைச் சுற்றும் உலகம் - துணை கதாபாத்திரம்
92. வட்டத்துக்குள் சதுரம் - துணை கதாபாத்திரம்
93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - துணை கதாபாத்திரம்
94. நட்சத்திரம் - துணை கதாபாத்திரம்
95. நிஜங்கள் - துணை கதாபாத்திரம்
96. அவள் ஒரு காவியம் - துணை கதாபாத்திரம்
97. அழகு - துணை கதாபாத்திரம்