2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
நடிப்பின் இலக்கணமாய் வாழ்ந்து மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனே வியந்து ரசித்த ஒரு விஸ்வரூப நாயகிதான் 'நடிகையர் திலகம்' சாவித்திரி. நூற்றுக் கணக்கான திரைப்படங்களில் நடித்து, உடம்பு சற்று கனத்து போய்விட்ட காரணத்தால் அதிக பட வாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த நடிகை சாவித்திரியை இயக்குநராக்கி, ஒரு படத்தை தயாரித்தால் பரபரப்பாக இருக்குமே? என்று யோசித்த தெலுங்கு படத் தயாரிப்பாளர் மதுசூதனராவ், சாவித்திரியைத் தேடிவந்து எங்களது கம்பெனி தயாரிக்கும் அடுத்த படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உடனே தனது சம்மதத்தை தெரிவிக்காமல் இருந்த நடிகை சாவித்திரியை, சில நாட்களுக்குப் பின் தயாரிப்பாளர் மதுசூதனராவின் மனைவி வீரமஞ்சனேனி, சரோஜினியை சந்தித்துப் பேச, அதன்பின் தனது கணவரும், நடிகருமான ஜெமினிகணேசனிடம் விபரத்தைக் கூறி, அவரது யோசனையையும் பெற்று சாவித்திரி இயக்குநர் அவதாரம் பெற்ற தெலுங்கு திரைப்படம்தான் “சின்னாரி பாப்பலு”. பழம்பெரும் பின்னணிப் பாடகி பி லீலா இசையமைத்திருந்த இந்த திரைப்படம்தான் நடிகை சாவித்திரியை இயக்குநர் சாவித்திரியாக்கி அழகு பார்த்தது.
முதல் படத்தின் அனுபவமே சாவித்திரிக்கு ஒரு தமிழ் படத்தையும் இயக்க வேண்டும் என்ற ஆசைக்கு வித்திட்டது. ஆனால் தமிழில் எந்த தயாரிப்பாளரிடமிருந்தும் சாவித்திரிக்கு அழைப்பு வரவில்லை. சொந்தமாக படத்தை தயாரித்து, இயக்கி அதில் நடித்தால் என்ன? என்ற யோசனை சாவித்திரியின் மனதில் உதிக்க, “ஸ்ரீ சாவித்திரி புரொடக்ஷன்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் உதயமானது. தெலுங்கில் இவர் இயக்கியிருந்த “சின்னாரி பாப்பலு” என்ற திரைப்படத்தையே தமிழில் “குழந்தை உள்ளம்” என்ற பெயரில் சொந்தமாக தயாரித்து இயக்கியிருந்தார். ஜெமினிகணேசன், சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ நடித்திருந்த இத்திரைப்படம் சாவித்திரிக்கு ஒரு தோல்விப் படமாக அமைந்தது.
அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை நடிக்க வைத்து படத்தை தயாரித்து இயக்கினால் இழந்ததை மீட்டு விடலாம் என்று எண்ணிய நடிகை சாவித்திரி, நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நாயகனாக்கி, தயாரித்து இயக்கிய திரைப்படம்தான் “பிராப்தம்”. இவரே நாயகியாக நடித்து 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படமும் நடிகை சாவித்திரிக்கு தோல்வியையே பரிசாக தந்தது. வெள்ளித்திரையில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, திரையில் மின்னிய இந்தத் தங்கத் தாரகை பின்னாளில் வளமையை தொலைத்து, வறுமையை அழைத்து, வாழ்ந்தது போதும் என வாழ்க்கைக்கு முடிவுரையும் எழுதிக் கொண்டார்.