ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் எம்.ஜீவன் இயக்கும் படம் கூட்டம். புதுமுகம் நவீன் சந்திரா ஹீரோ. பியா ஹீரோயின். இவர்கள் தவிர கிஷோர். நாசர், சாய்குமார் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழில் தயாராகி வரும் இந்தப் படத்தின் கதை திருந்தி வாழும் நக்சலைட்டுகள் பற்றியது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.ஜீவன் கூறியதாவது: இது நக்சலைட்டுகள் பற்றிய படம்தான். அவர்கள் செயல்களை நியாயப்படுத்தும் படம் அல்ல. பல்வேறு சூழ்நிலை காரணமாக நக்சலைட்டுகளாக மாறியவர்கள் மனம்மாறி வாழ துடித்து திருந்தி போலீசில் சரண்டராகி, ஆயுதங்களை ஒப்படைத்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். ஆனாலும் போலீசார் அவர்களை விடுவதில்லை. கடைசி வரை நக்சலைட்டுகள் என்ற கண்ணோட்டத்தோடுதான் பார்க்கிறார்கள். அவர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். அப்படி துன்புறுத்தப்படும் முன்னாள் நக்சலைட்டுகள் சிலர் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் கதை. ராம்கோபால் வர்மாவிடம் தொழில் கற்றாலும் அவரது பாணியிலிருந்து மாறுபட்டு இந்தப் படத்தை உருவாக்கி வருகிறேன் என்கிறார்.