பேமிலி படம்
விமர்சனம்
தயாரிப்பு - யுகே கிரியேஷன்ஸ்
இயக்கம் - செல்வகுமார் திருமாறன்
இசை - அனிவி
நடிப்பு - உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயரோகணம்
வெளியான தேதி - 6 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 3/5
சினிமாவை கதைக்களமாக வைத்தோ, சினிமாவைச் சார்ந்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்தோ தமிழ் சினிமாவில் எப்போதோ ஒரு முறைதான் படங்கள் வரும். சினிமாவை வைத்தே சினிமா என்பது பெரிய வரவேற்பைப் பெறாமல்தான் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. சில படங்கள் நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கான வரவேற்பு கிடைக்காமல் போவது சினிமாவில் இருப்பவர்களுக்கே புரியாத புதிராகவே உள்ளது.
இந்த 'பேமிலி படம்' கூட சினிமாவை வைத்தே ஒரு சினிமாதான். அதுவும் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவருக்கு அவருடைய குடும்பமே உதவி செய்து படம் எடுக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படத்தின் இயக்குனர் செல்வகுமார் திருமாறன் இந்தப் படத்தில் உள்ளது போன்று அவருடைய கதையை சினிமாவில் பறி கொடுத்தவர்தான். அதையே இந்தப் படத்தின் கதையாக எழுதிவிட்டார் போலிருக்கிறது.
விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், உதய் கார்த்திக் அண்ணன் தம்பிகள். மூத்த அண்ணன் விவேக் பிரசன்னா வக்கீல், அடுத்தவர் பார்த்திபன் கால் சென்டரில் வேலை பார்ப்பவர், கடைக்குட்டி உதய் கார்த்திக் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருப்பவர். ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் உதய். தயாரிப்பாளருக்குக் கதை பிடித்து அட்வான்சும் கொடுத்து விடுகிறார். ஆனால், அதன்பின் அந்தக் கதையைத் தானே இயக்குகிறேன், ஒப்பந்தப்படி கதை தனக்கே சொந்தம் என உதய்யை ஏமாற்றுகிறார் அந்தத் தயாரிப்பாளர். விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் உதய். அவருக்காக அவரது இரண்டு அண்ணன்களும் சொந்தமாக படத்தைத் தயாரிக்க முடிவு செய்கிறார்கள். அவர்களது பெற்றோரும் அதில் இறங்க படத்தைத் தயாரித்தார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று படத்தில் இருக்கும் அந்த யதார்த்தம். அதற்கடுத்து கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான நடிகர்கள் தேர்வு. சிறிய வேடங்களில் நடித்தவர்கள் கூட நிஜ கதாபாத்திரம் போன்றே நடித்துவிட்டுச் செல்கிறார்கள். நாயகனின் வீடு, அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் பாசம், சண்டை அனைத்துமே அவ்வளவு இயல்பாக அமைந்துள்ளது. உண்மையிலேயே 'பேமிலி படம்' என்ற தலைப்புக்குப் பொருத்தமான குடும்பமாக இருக்கிறார்கள்.
அண்ணன் தம்பிகள் மூவருமே படத்தில் கதாநாயகர்கள்தான். விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், உதய் கார்த்திக் ஆகிய மூவருக்குமே படத்தில் முக்கியத்துவம் உண்டு. மூவருக்கும் தனித்தனியான குணாதிசயங்கள். ஆனால், சினிமா என்றால் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சிறு வயதிலிருந்தே ஒன்றாகவே படம் பார்த்து வளர்ந்தவர்கள். கதையைப் பறிகொடுத்து தவிக்கும் தம்பிக்காக தங்கள் சக்தியை மீறி படம் தயாரிக்க இறங்குகிறார்கள் விவேக், பார்த்திபன். மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். இப்படியான அண்ணன் தம்பிகள் ஒவ்வொருவருக்கம் அமைந்தால் வாழ்க்கையில் எந்தத் தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்லலாம்.
படத்தில் கதாநாயகிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் கதாநாயகி சுபிக்ஷா காயரோகணம் வரும் அந்த சில காட்சிகளிலும் நிறைவாய் நடித்திருக்கிறார். காதலும், காதலியும் ஒரு இளைஞனுக்கு உந்துசக்திதான். யாரோ ஒருவர் நம் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் போதும் வாழ்க்கையில் உயரப் பறக்கலாம்.
கதாநாயகியை விடவும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீஜா ரவிக்கு அதிகக் காட்சிகள் உண்டு. அன்பான அம்மாவாக அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார். அப்பா அரவிந்த் ஜானகிராமன், தாத்தா மோகனசுந்தரம் சில காட்சிகள் என்றாலும் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். அதிலும் அவர்கள் பணம் தரும் காட்சிகள் கண்ணீர் வரவைக்கும் காட்சிகள்.
கதையுடன் சேர்ந்து பயணிக்கும் ஒளிப்பதிவைத் தந்துள்ளார் மெய்யேந்திரன். சுதர்ஷன் படத்தொகுப்பும் கதையைக் கச்சிதமாய் தொகுத்துள்ளது. அனிவி பின்னணி இசை கதாபாத்திரங்களின் நடிப்பை இன்னும் அழுத்தமாய் கொடுத்துள்ளது.
ஹீரோக்கள் பின்னால் சுற்றித் திரியும் சினிமாக்களுக்கு மத்தியில், கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்றபடியான நட்சத்திரங்களுடன் வந்துள்ள இந்த மாதிரியான படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இன்றைய முக்கியத் தேவை. படத்தில் சில இடங்களில் கொஞ்சம் நாடகத்தனம் எட்டிப் பார்த்தாலும் அதுவும் கடந்து போய்விடுகிறது.
பேமிலி படம் - பேமிலியுடன் பார்க்க வேண்டிய படம்…
பேமிலி படம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பேமிலி படம்
- இயக்குனர்