இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நடிகர் திலகம், சிம்மக்குரலோன் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நடிப்புக்கே சக்கரவர்த்தியாக, நடிப்புக்கே இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். இவரின் ஒவ்வொரு அங்கமும் இவரது நடிப்பை வெளிப்படுத்தும். அதனால் தான் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். சிவாஜி வேறு நடிப்பு வேறு கிடையாது. ஈருடல் ஓர் உயிர் என்பார்கள் அதுபோல் சிவாஜியும், நடிப்பும் ஒன்றே... அப்பேற்பட்ட மாபெரும் கலைஞனான சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினமான இன்று அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
சிறுவயதிலேயே நடிப்பு ஆர்வம்
விழுப்புரம் மாவட்டத்தில் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தார் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி எனும் சிவாஜி கணேசன். சிறு வயது முதலே நடிப்பு தான் இவரது மூச்சாக திகழ்ந்தது. 9 வயது சிறுவனாக இருந்த போதே "கம்பளத்தான் கூத்து" எனப்படும் கட்டபொம்மன் கதையை அடிப்படையாகக் கொண்ட அந்த மேடை நாடகத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். நாடகத்தில் இவருக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக இருந்தவர் சின்ன பொன்னுசாமி என்பவர் ஆவார்.
கணேசன் - சிவாஜி ஆன கதை
ஆரம்ப காலங்களில் "ஸ்திரீ பார்ட்" எனப்படும் பெண்வேடமேற்றும,; சீதையாகவும், சூர்ப்பனையாகவும் நடித்திருக்கின்றார் சிவாஜி. இவர் நடிப்புலக மேதை என்பதற்கு ஆரூடம் சொல்வது போல் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகங்களில், ஒருவரே சீதையாகவும், சூர்பனையாகவும், பரதனாகவும், இந்திரஜித்தாகவும் நடித்து, அன்றே நடிப்புக் கலையின் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பின்னாளில் இவர் திரைப்படத்துறைக்கு வந்த பிறகு, "சம்பூர்ண இராமாயணம்" திரைப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் "நான் பரதனைக் கண்டேன்" என்று மனதார நடிகர் திலகத்தைப் பாராட்டிய வரலாறும் உண்டு.
அண்ணாத்துரையின் நாடகமான சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் வீர சிவாஜியாக நடித்த சிவாஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டிய ஈ.வெ.ரா, கணேசன் என்ற இவரது இயற்பெயரோடு, இவர் ஏற்று நடித்திருந்த சிவாஜி என்ற கதாபாத்திரத்தின் பெயரை முன்னிறுத்தி சிவாஜி கணேசன் என்று பெருமையுடன் அழைத்தார். அன்றிலிருந்து வி.சி.கணேசனாக இருந்த நடிகர் திலகம், சிவாஜி கணேசன் ஆனார்.
முதல் படமே சக்சஸ்
1952ல் வெளிவந்த "பராசக்தி" திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கான காட்சி சக்சஸ். அந்த சென்டிமென்ட் தானோ என்னவோ படமும் பட்டி தொட்டியெங்கும் சக்சஸ் ஆனது. இத்திரைப்படம் வருவதற்கு முன்னர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் ராஜா ராணி கதைகள், மத ரீதியான கதைகள், புராண இதிகாச கதைகளை அடிப்படையாகக் கொண்ட, பாடல்கள் நிறைந்த படங்களாக வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், பாடல்கள் குறைவாகவும், சமூக சீர்திருத்த தாக்கத்தை உணர்த்தும் வகையில் வசனங்களும் நிறைந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.
ஒரு நூறு படங்களை கடந்த ஒரு கலைஞனின் அனுபவங்களை தனது முதல் படத்திலேயே காட்டியிருப்பார் சிவாஜி. குறிப்பாக படத்தில் நீதிமன்ற காட்சி ஒன்றுபோதும். இத்தலைமுறை கலைஞர்களும், ரசிகர்களும் இத்திரைப்படத்தின் வசனங்களை படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி நடித்து வருவதை நம்மால் காணமுடியும்.
1954 ஆம் ஆண்டு வெளிவந்த "அந்தநாள்" என்ற திரைப்படம் தமிழ் திரையுலக போக்கிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கதையம்சத்துடன் வந்ததோடு, படத்தில் பாடல்களே இல்லாமலும் படத்தின் நாயகனான நடிகர் திலகம் சிவாஜி ஒரு எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்து, நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை காட்டியிருப்பார். இத்திரைப்படம் அந்த ஆண்டு; ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.
கட்டபொம்மனை கண்முன் நிறுத்தியவர்
1959ல் பத்மினி பிக்சர்ஸ் சார்பில், பி ஆர் பந்துலு தயாரித்து, இயக்கி வெளிவந்த திரைப்படம் "வீரபாண்டிய கட்டபொம்மன்". கட்டபொம்மன் வரலாற்றை மையப்படுத்தி எடுத்திருந்த இத்திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்பு, தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, கடல் கடந்து அயலாரும் கண்டு உறைந்தனர். 1960 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக சிவாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாக்சன் துரையுடன் கட்டபொம்மன் பேசும் வசனம் இன்றைய தலைமுறை பிள்ளைகள் கூட பேசி மகிழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல. அந்தளவு இத்திரைப்படம் அனைவரின் உள்ளங்களையும் வென்றெடுத்திருக்கிறது என்பது உண்மை.
கடவுள்களையும், சுதந்திர போராட்ட தலைவர்களையும் கண்முன் நிறுத்தியவர்
இவ்வாறு நாம் அவருடைய நடிப்பாற்றலை, நாம் ரசித்தவற்றை கூற முற்பட்டால் அவருடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் கூறிக் கோண்டே போகலாம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களிலும் வெள்ளித்திரையில் மின்னி வாழ்ந்து காட்டியவர். வ.உ.சிதம்பரம் பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் என விடுதலைப் போராட்ட வீரனாகவும், கர்ணன், பரதன், அரிச்சந்திரன், அப்பர், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என புராண இதிகாச நாயகர்கள் வேடம் தரித்து நம் கண்முன் கொண்டு வந்து காட்டியவர் நடிகர் திலகம் ஒருவரே.
பானுமதி ராமகிருஷ்ணா, பண்டரிபாய் வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா, கே ஆர் விஜயா, வாணிஸ்ரீ மற்றும் ஜெயலலிதா என அன்றைய அனைத்து முன்னணி நாயகிகளும் இவருடன் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
கிருஷ்ணன்-பஞ்சு, டி ஆர் சுந்தரம், எல் வி பிரசாத், ஏ பி நாகராஜன், பி ஆர் பந்துலு, டி பிரகாஷ்ராவ், ஏ பீம்சிங், கே சங்கர், சி வி ஸ்ரீதர், ஏ சி திருலோகசந்தர், கே எஸ் கோபாலகிருஷ்ணன், பி மாதவன், சி வி ராஜேந்திரன் மற்றும் கே விஜயன் என்று அன்றைய அனைத்து முன்னணி இயக்குநர்களுடனும் பணிபுரிந்திருக்கின்றார் நடிகர் திலகம்.
தமிழில் மட்டும் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தெலுங்கில் ஒன்பது திரைப்படங்களும், ஹிந்தியில்
இரண்டு திரைப்படங்களும் மற்றும் மலையாளத்தில் ஒன்றும் நடித்திருக்கின்றார். ரஜினி, கமல், விஜய் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பத்மபூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, பிலிம்பேர், கவுரவ டாக்டர் பட்டம், பிறமாநில விருதுகள், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே விருது" என சிவாஜியின் நடிப்பை கவுரவித்து பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நடிப்புக்கே சக்ரவர்த்தியாக திகழ்ந்த இவருக்கு தேசிய விருது மட்டும் கிடைக்காதது மிகப்பெரிய வருத்தமாக இன்றும் பேசப்படுகிறது.
எந்த வேடத்தில் சிவாஜி நடிக்கவில்லை என சொல்லும் அளவுக்கு தன் திரைப்பயணத்தில் ஏராளமான வேடங்களில் நடித்துவிட்டு சென்றுவிட்டார் சிவாஜி. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இந்த மண்ணுலகம் உள்ளவரை அவரது நடிப்பு என்றும் பேசப்படும்.