அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
மறைந்த நடிகர் விவேக்கிற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடு, சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி இரங்கல்
டுவிட்டரில் ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தி : சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என் நெருங்கிய இனிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாதது. அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
கமல்
டுவிட்டரில் கமல், ‛‛நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் இவர் கூறுகையில், ‛‛எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது. ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம், அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில், ‛‛தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு. நீங்கள் கொடுத்த லட்சக்கணக்கான சிரிப்புகளும், நீங்கள் நட்ட மரங்களும் என்றும் உங்களை எங்களுக்கு நினைவுக்கூறும். அமைதியாக ஓய்வெடுங்கள் என தெரிவித்துள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத்
காலையில் எழுந்ததும் அதிர்ச்சியான செய்தி. விவேக் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மிகச்சிறந்த காமெடி நடிகர், அதிலும் சமூக கருத்துக்களை விதைத்தவர். அவரின் மிக தீவிரமான ரசிகன் நான். நீங்கள் என்றும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என டுவிட்டரில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆத்மிகா
விவேக் அவர்களின் மறைவை வார்த்தைககளால் சொல்ல முடியவில்லை. கண்ணீரை நிறுத்த முடியவில்லை. கடவுள் உங்களை விரைவில் அழைத்து சென்றுவிட்டார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த பல காமெடிகள் நம் நினைவில் இருக்கும். சினிமாவுக்கு இருண்டா நாள் இன்று.
விக்ரம் பிரபு
பலரின் சிரப்பிற்கு பின்னால் நீங்கள் உள்ளீர்கள். சிறந்த காமெடி நடிகர், அற்புதமான நடிகர், சமூக உணர்வுள்ள குடிமகன். நீங்கள் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. ஒரு ரசிகனாக உங்களை இழந்துவிட்டேன். ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
சத்யராஜ்
சத்யராஜ் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சின்னகலைவாணர் என் அன்பு தம்பி விவேக் மறைந்தார் என்று சொல்லவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது. வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ, கலை உலகத்திற்கோ, எனக்கோ ஆறுதல் சொல்ல முடியாது. உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் தம்பி என தெரிவித்துள்ளார்.
இந்துஜா
நடிகை இந்துஜா கூறுகையில், மறைந்த நடிகர் விவேக் அவர்கள் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் நான் நடிப்பதாக இருந்தது. அதற்கான மீட்டிங் இந்த வாரம் இருந்தது. ஆனால் தற்போது விவேக் சார் மறைந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.
விக்ரம்
நடிகர் விக்ரம் கூறுகையில், ‛‛என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.
கவுதம் கார்த்திக்
டுவிட்டரில் கவுதம் கார்த்திக் கூறுகையில், ‛‛விவேக் அவர்கள் மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தன் காமெடியால் சிரிக்க வைத்தார், சிந்திக்க வைத்தார். இந்த உலகத்தை கவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதை கற்பித்தார். உங்கள் போல் இன்னொருவர் வரமாட்டார். உங்களை மிஸ் செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து
நீங்கள் இல்லை என்றதும் என் மனது நொறுங்கி போனது. நம் காலத்தில் இருந்த மிகப்பெரிய நிகைச்சுவை நடிகர் விவேக். உங்கள் மிஸ் செய்கிறோம் என இயக்குனர் அஜய் ஞானமுத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர்
டுவிட்டரில் இவர் கூறுகையில், ‛‛சிரிப்புக்கடலில் ஆழ்த்திய ரசிகர்களை இன்று உன்(விவேக்) மறைவால் கண்ணீர்க் கடலில் மூழ்கச் செய்து விட்டாயே. பிரிந்து போன மகனை தேடி சென்று விட்டாயோ. திரையுலகம் உள்ள வரை நீ வாழ்ந்து கொண்டிருப்பாய். ஓம் ஷாந்தி என எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.
பிசி.ஸ்ரீராம்
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில், ‛‛உங்கள் நகைச்சுவை எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது. நீங்கள் நட்ட மரங்கள் எங்களுக்கு சுவாசத்தை சிறப்பாக செய்தன. நீங்கள் அர்ப்பணிப்புடன் வாழ்ந்தீர்கள், இப்போது நீங்கள் இல்லை, நீங்கள் செய்த வேலை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். உங்கள் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரி
நடிகை கஸ்தூரி டுவிட்டரில், ‛‛எப்படி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டிங்களே ! எங்களை விட்டுட்டு போயிட்டிங்களே !! சிரிக்க சிரிக்க சிந்திக்க வச்சவரு இப்போ சிந்திக்கவே முடியாத சோகத்துல தள்ளிட்டீங்களே! நீங்க இல்லைங்கறதை ஜீரணிக்கவே முடியலை. அந்த பளிச் சிரிப்பும், கஸ் என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை. நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சிந்தனையாளர் விவேக்கின் எண்ணங்கள் இனி நமக்கு கிட்டா. ஆனால் சமூக இயற்கை ஆர்வலர் விவேக்கின் கனவை நாம் மெய்ப்பட செய்ய முடியும்.
மரம் நடுவோம்.
ஒன்றே ஒன்றாவது
ஒரு மரக்கன்றாவது
சென்றுவிட்டவர் பெயர் நிலைக்க
இன்றோடில்லாமல் என்றும் நினைக்க
நன்றே செய்வோம். நன்மரம் நடுவோம்.
மரம் நடுவோம் என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ராஜேஷ் கண்ணா
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் திரு.ராஜேஷ்கண்ணாவின் இரங்கல் செய்தி, ‛‛பத்மஸ்ரீ விவேக் சிறந்த மனிதர், பண்பாளர், சமூக பற்றாளர்,எல்லோரிடமும் நட்பு பாராட்டியவர்,அய்யா அபதுல் கலாம் வரை கருத்துரைத்தவர் , இந்நாள் மட்டுமல்ல எந்நாளிலும் மிகச்சிறந்த நகைச்சுவை, சீர்திருத்த, குணசித்திர கருத்துக்கள் கொண்ட மிகச்சிறந்த நடிகர் நம் பாசமிகு சகோதரர் மறைவு நம் நெஞ்சுறைய வைக்கிறது! பத்மஸ்ரீ விவேக் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அட்லி
அட்லி டுவிட்டரில், ‛‛உங்களை மிஸ் செய்கிறோம். உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. உங்களின் ஆன்மா சாந்தியடைட்டும் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ்
பேரதிர்ச்சி. அமைதியாக ஓய்வெடுங்கள் விவேக் சார்.
சந்தோஷ் நாராயணன்
டுவிட்டரில் இவர் கூறுகையில், மிகப்பெரிய இழப்பு. பூமி தாயால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நபர் விவேக் என தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி
தூக்கத்தில் இருந்து எழுந்ததும் இதுபோன்ற அதிர்ச்சியான செய்திகளை கேட்பதை வெறுக்கிறேன். நிறைய சிரிப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள். ஆனால் நீங்கள் இல்லை என்று கேட்கும்போது இதயம் நொறுங்குகிறது. சினிமாவுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கும் பேரிழப்பு. இந்த சமூகத்தில் மிகவும் பொறுப்புள்ள மனிதராக நீங்கள் இருந்தீர்கள். விவேக் சார் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
வெங்கட்பிரபு
வெங்கட்பிரபு டுவிட்டரில், ‛‛விரைவில் சென்றுவிட்டீர்கள். இது நியாயமற்றது. விவேக் சாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
சமந்தா
மிகப்பெரிய இழப்பு. விவேக் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
பிரபு
நடிகர் பிரபு வெளியிட்ட இரங்கல் ஆடியோவில், ‛‛தம்பி விவேக் நம்மளை விட்டு போய்விட்டார். மிகவும் கஷ்டமாக உள்ளது. அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. நல்ல மனிதர், அருமையான கலைஞர். பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் என எத்தனையோ படங்கள் அவருடன் நடித்துள்ளேன். சமூக பிரச்னைகளை நகைச்சுவையுடன் கொண்டு சேர்த்தவர். நல்ல நண்பர், நல்ல தம்பியை இழந்துவிட்டேன். மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. திரையுலகம் இருக்கும் வரை தம்பி விவேக் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றார்.
மோகன்
நடிகர் மோன் வெளியிட்ட இரங்கல் ஆடியோவில், ‛‛விவேக் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சமூக ஆர்வலர், பொதுநலத்தில் அதிக ஆர்வம் உடையவர். எனது சக ஜிம் உடற்பயிற்சியாளர். மிகவும் ஒழுக்கமான மனிதர். எவ்வளவு விஷயங்கள் பேசி உள்ளோம். இனி அவை அனைத்தும் எனது நினைவகளாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மாதவன்
என் இதயம் நொறுங்கிவிட்டது. சொர்க்கத்திற்கான உங்களின் பயணம் இவ்வளவு சீக்கிரம் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. உங்களின் சிரிப்பு, ஞானத்தை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். சொர்க்கத்திற்கு அதிர்ஷ்டம் என நடிகர் மாதவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த்ராஜ்
நடிகர் ஆனந்த்ராஜ் கூறுகையில் விவேக் எனது நீண்டகால நண்பர். மிகவும் நல்லவர்களாக இருந்தால் கடவுள் சீக்கிரம் அழைத்து கொள்வார் போல் இருக்கிறது. அவரது மறைவு எனக்கு பேரிடி. கலைக்குடும்பத்திற்கும் பேரிழப்பு. சமீபத்தில் தான் அவரது வீட்டிற்கு சென்றேன். மிகவும் அன்பான குடும்பம். விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கட்டும் என்றார்.
சூர்யா
விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா டுவிட்டரில், ‛‛மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்... மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்... என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில், "அதிர்ச்சியாகவும், சோகமாகவும் உள்ளது. உங்களைப் போன்ற ஒரு சகாப்தத்துடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. உங்களைப் போன்ற ஆளுமையிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் தவறவிட்டு விட்டேன். உங்களை என்றென்றும் மிஸ் செய்வேன். குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணி டுவிட்டரில், ‛‛விவேக் சார் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் நேர்மறையான சிந்தனை உடையவர். உங்களை மிஸ் செய்கிறோம். என் ஆழ்ந்த இரங்கல் சார் என பதிவிட்டுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி
ஆதி டுவிட்டரில், எப்பவுமே நீங்க எனக்கு ஹீரோ தான். R.I.P லெஜண்ட் என பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில், ‛‛எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் இல்லை என்பது நம்ப முடியவில்லை. அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது எனக்கு துரதிர்ஷ்டமானது. ஆனால் அவருடனான எனது உரையாடல்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன். அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே தன் முழு வாழ்க்கையையும் ஈடுபடுத்தி கொண்டவர். அவரைப்போன்று காமெடியில் வேறு ஒருவரை பார்க்க முடியாது. தனது சமூக சேவைகளால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். நிச்சயம் அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு. அமைதியாக ஓய்வெடுங்கள் விவேகானந்தன் சார் என பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் டுவிட்டரில், ‛‛விவேக் சாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புலகில் இன்று மிகப்பெரிய வெற்றிடம் என பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து
விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து டுவிட்டரில், ‛‛அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ காமெடிக் கதாநாயகன் என பதிவிட்டுள்ளார்.
சிபிராஜ்
நடிகர் சிபிராஜ் டுவிட்டரில், ‛‛ஒரு நடிகராக அவர் விட்டு சென்ற இடத்தை யாரும் நிரப்ப முடியாவிட்டாலும் அவருடைய கனவுகளை நாம் அவைரும் நிறைவேற்ற மடியும். அவரின் 1 கோடி மரங்கள் நடும் இலக்கில் 33 லட்சம் மரங்களை அவர் நட்டுவிட்டார். நாம் அனைவரும் மனது வைத்தால் அந்த 1 கோடி இலக்கை வெகு சில நாட்களிலேயே அடைந்து விட மடியும். அதுவே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதை என பதிவிட்டு, மரக்கன்று ஒன்றையும் நட்டுள்ளார்.
போனிகபூர்
தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில், ‛‛என் மனைவி ஸ்ரீதேவி, நடிகர் விவேக்கின் மிகப்பெரிய ரசிகை. உங்களின் நகைச்சுவையை நாங்கள் மிஸ் செய்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு பலம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் முத்துராமன்
உடல்நலக்குறைவால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கார்த்திக் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், ‛‛சகோதரர் விவேக் இறந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அற்புதமான மனிதர், நல்ல கலைஞர். யாரையும் மனது நோகாதபடி நடந்து கொள்பவர். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சங்கர் மகாதேவன்
பாடகர் சங்கர் மகாதேவன் டுவிட்டரில், ‛‛விவேக் அவர்கள் நம்மோடு இல்லை. இது மிகப்பெரிய இழப்பு. என்ன ஒரு அற்புதமான கலைஞர், நகைச்சுவையான மனிதர். உங்களின் நகைச்சுவை தலைமுறை கடந்து நிற்கும். உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
செந்தில்
நடிகர் செந்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛அன்பு தம்பி சின்னக்கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர். எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். சினிமா இருக்கும் வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில், ‛‛சமூக சீர்திருத்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. விஐபி பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள் நட்ட மரங்களை போல் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம், ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்னக் கலைவாணரே என தெரிவித்துள்ளார்.
விஷால்
நடிகர் விஷால் டுவிட்டரில், ‛‛தமிழ் சினிமாவில், தனது முதல் காட்சியே நடிகர் விவேக் உடன் தான். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என தெரிவித்துள்ளார்.
நயன்தாரா இரங்கல்
நயன்தாரா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பல ஆண்டுகளாக அவருடன் பணிபுரிந்த அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். குறிப்பாக விஸ்வாசம் படத்தில். மிக விரைவாக நம்மை விட்டுச் சென்று விட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.