'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராகிவிட்டார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தையும் பிரம்மாண்டமாகவே உருவாக்கச் சொல்கிறார். அனைத்துப் படங்களும் ஹிந்தியிலும் வெளியாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.
தற்போது 'ராதே ஷ்யாம், சலார்' படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்க உள்ள 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. மும்பையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் ஒன்றில் அதற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.
ராமாயணக் கதையாக உருவாகும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதையாக கிரித்தி சனோன், ராவணன் ஆக சைப் அலிகான் நடிக்கிறார்கள். பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்ய உள்ளார்கள்.