அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
உலக அளவில் பிரபலமான ரியாலிட்டி டிவி ஷோ பிக்பாஸ். நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் என்ற பெயரில் முதன் முதலில் இந்த நிகழ்ச்சியை கருவாக்கி உருவாக்கியவர் ஜான் டி மால் ஜுனியர். 1999ம் ஆண்டு முதல் தற்போது வரையில் உலகில் உள்ள பல்வேறு நாட்டு டிவிக்களில் பிக் பிரதர், பிக் பாஸ் என்ற பெயரில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தியாவில் மட்டும் தான் ஹிந்தி, கன்னடம், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் என ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இந்தியாவில், ஹிந்தியில் 2006ம் ஆண்டில் ஒளிபரப்பை ஆரம்பித்த இந்நிகழ்ச்சி, தமிழில் 2017ம் ஆண்டில் ஆரம்பமானது. தமிழ் சினிமாவின் சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தியே அப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நான்கு சீசன்களாக அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை முடிந்த நான்கு சீசன்களில் நான்கு வெற்றியார்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம், வெற்றி ஆகியவற்றால் சாதித்திருக்கிறார்களா என்பதுதான் மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
ஆரவ்
2017ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார். ஏற்கெனவே சினிமாவில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு பிக்பாஸ் வெற்றி பிரபலத்தைக் கொடுத்தது. போதாக்குறைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பாதியிலேயே வெளியேறி நடிகை ஓவியாவும், ஆரவ்வும் காதலிக்கிறார்கள் என்ற பரபரப்பு அந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.
முதல் சீசனில் மற்ற போட்டியாளர்களுக்குக் கிடைக்காத பேரும், புகழும் பாதியில் வெளியேறிய ஓவியாவிற்கே கிடைத்தது. அந்தப் பெயரை அவர் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார் என்பது ஒரு புறம் இருந்தாலும், முதல் சீசனின் முதல் வெற்றியாளர் ஆரவ்வும் தக்க வைத்துக் கொள்ளவில்லை.
பிக்பாஸ் வெற்றி, அவருக்கு சினிமாவில் நாயகனாக உயர ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தது. அவர் நாயகனகா நடித்து 2019ல் வெளிவந்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் வந்த சுவடு கூடத் தெரியாமல் ஓடிப் போனது. அடுத்து ராஜ பீமா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இனிமேல்தான் வெளியாக வேண்டும்.
2017ல் பிக் பாஸ் போட்டியின் முதல் வெற்றியாளர் என்ற பட்டத்தை அவர் வென்ற போது விரைவில் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அது நான்கு வருடங்களாக நடக்காமலேயே உள்ளது.
ரித்விகா
2018ம் ஆண்டு ஒளிபரப்பான இரண்டாவது சீசன் தான் இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களிலேயே ரசிகர்களிடம் மிகவும் குறைந்த வரவேற்பைப் பெற்ற ஒரு சீசன் என சொல்லலாம். இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற ரித்விகா அதற்கு முன்பே சில பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்தான். இறுதிப் போட்டியில் நுழைந்த ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரைத் தோற்கடித்து ரித்விகா வெற்றி பெறுவார் என யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற பின் கிடைத்த பிரபலம் ரித்விகாவுக்கு மேலும் அதிகமான சினிமா வாய்ப்புகளை அள்ளித் தரவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் அவருக்கான ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.
முகேன் ராவ்
2019ம் ஆண்டு ஒளிபரப்பான மூன்றாவது சீசன், முதலிரண்டு சீசன்களை விட அதிகமான பரபரப்புக்கு ஆளானது. வனிதா விஜயகுமார், மீரா மிதுன், சரவணன், அபிராமி, கவின், லாஸ்லியா ஆகியோரால் நிகழ்ச்சியில் அதிக பரபரப்பு ஏற்பட்டது. வனிதாவின் பேச்சு, மீராவின் குற்றச்சாட்டு, பாதியில் வெளியேற்றப்பட்ட சரவணன், அபிராமியின் காதல் ஏக்கம், கவின், லாஸ்லியா ஜோடியின் காதல் என பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்தது.
இரண்டாவது சீசனில் இலங்கைத் தமிழரான தர்ஷன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடைசி வாரத்தில் வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருந்தாலும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க படத்தைத் தயாரிக்கப் போவதாக நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசன் அறிவித்தார். அப்படி ஒரு அறிவிப்பை தான் வெளியிட்டது கமல்ஹாசனுக்கு ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அறிவிப்பு காற்றோடு காற்றாக அப்படியேதான் இருக்கிறது. தர்ஷன் நடிக்கும் படம் தயாராவதாகத் தெரியவில்லை. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பே தகிடுதத்தோம் போட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் படத்தைப் பற்றி கமல்ஹாசன் கவலைப்படுவாரா ?. பாவம் தர்ஷன்.
மூன்றாவது சீசனில் யாரும் எதிர்பாராத விதத்தில் மலேசியாவைச் சேர்ந்த பாடகரான முகேன் ராவ் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரும் எதிர்பார்த்திருப்பார். அப்படி எதுவும் பெரிதாக நடக்கவில்லை. முகேன் ராவ் மலேசியாவை விட்டு வந்து முயற்சிக்கிறாரா இல்லையா என்பதும் தெரியவில்லை.
ஆரி
2019ம் ஆண்டு ஜுன் மாதத்திலேயே ஆரம்பமாக வேண்டிய நான்காவது சீசன் கொரானோ தொற்று பரவல் காரணமாக நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் போட்டியாளர்களை முன்னமே தனிமைப்படுத்தி தக்க பாதுகாப்புகளுடன் அக்டோபர் 4ம் தேதி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். இரு தினங்களுக்கு முன்பு ஜனவரி 17ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் நடிகர் ஆரி வெற்றியாளராகத் தேர்வானார்.
ஆரி தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். அப்படியே அவரே தேர்வானார். அவர் வெற்றி பெறுவதை மற்ற போட்டியாளர்களே எளிமையாக்கிவிட்டனர். மற்ற போட்டியாளர்கள் அவர் மீது காட்டிய வெறுப்பே ஆரிக்கு அதிகப்படியான ஆதரவைக் கொடுத்தது.
இதற்கு முன்பும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் முன்னணி ஹீரோ என்ற பட்டியலில் ஆரி இணையாமல் தான் இருக்கிறார். இந்த பிக்பாஸ் பிரபலமும், வெற்றியும் தன்னை முன்னிலைப்படுத்திவிடும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அப்போது மட்டும் செய்திகளில் அதிகம் இடம் பெற்றார்கள். அதன்பிறகு அவர்களைக் கண்டு கொள்ளும் விதங்களில் அவர்களும் சாதிக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தால் இன்றும் பிரபலமாகவே செய்திகளில் அடிபட்டிருப்பார்கள்.
சமீபத்தில் முடிவடைந்த நான்காவது சீசனில் வெற்றி பெற்ற ஆரி, அடுத்து ஆஹா என சொல்லுமளவிற்கு முன்னேறுவாரா, அவருக்கு வாக்களித்தவர்கள் வொரி ஆகுமளவிற்கு நடந்து கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.