ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
மிக நீண்ட இடைவெளிக்குப் பின், ஏ வி எம் சகோதரர்கள் 1980ம் ஆண்டு “முரட்டுக்காளை” என்ற ஒரு மிக பிரமாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு, அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோதே, ஆந்திராவில் ஒரு தெலுங்குத் திரைப்படம் வசூலை அள்ளிக் கொண்டிருப்பதாக செய்தி ஒன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், ஏ வி எம் சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்து, குறைந்த செலவில் தயாரித்து விடக் கூடிய 'ப்ரூவ்டு சப்ஜெக்ட்' என்பதை நன்கு உணர்ந்து, அந்த திரைப்படத்தை தமிழில் எடுக்க முற்பட்டனர்.
ஆந்திர மாநில கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய “எர்ரா மல்லேலு” என்ற அந்த தெலுங்குத் திரைப்படத்தின் உரிமையை வாங்கி, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுத வைத்து, “சிவப்பு மல்லி” ஆக்கித் தந்தனர் ஏ வி எம் சகோதரர்கள். படத்திற்கு வசனம் எழுதி, இயக்கியிருந்தவர் இயக்குநர் இராம நாராயணன். தேசமெங்கும் பொருளாதார நெருக்கடியினால் அமைதியின்மையும், போராட்டமான வாழ்க்கைச் சூழலும் இருக்க, அதனை எதிர்த்து விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மத்தியத் தர வர்க்கத்தினர் என அனைவரும் போராடிக் கொண்டிருந்த ஒரு புறச் சூழலில், அதன் எதிரொலியாக அப்போது இந்தி மசாலா திரைப்படங்களில் அமிதாப்பச்சனும், தமிழில் 'காளி' போன்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கையில் செங்கொடி ஏந்திப் போராடும் இளைஞர்களாக நடித்துப் படங்கள் வரத் தொடங்கிய நேரம் அது.
நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடும் கோபம் கொண்ட இரு இளைஞர்களின் கதையாக சித்தரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில், முக்கிய நாயகர்களாக நடிகர் விஜயகாந்தும், வாகை சந்திரசேகரும் நடித்திருந்தனர். சங்கர்-கணேஷ் இசையமைப்பில் படத்தில் இடம் பெற்றிருந்த “எரிமலை எப்படி பொறுக்கும்”, “ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்” என்ற இரண்டு பாடல்களும் மிகப் பெரிய ஹிட் அடித்து, இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கக் கூடிய பாடல்களாகவும் இருந்து வருகின்றன. கம்யூனிஸ்டு கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டுப் பார்த்தால் இந்த “சிவப்பு மல்லி” திரைப்படம் ஒரு எம் ஜி ஆர் பாணிப் படம் என்றே சொல்லலாம்.
ஏ வி எம் என்ற பதாகையின் கீழ் தயாரிக்காமல் அதன் துணை நிறுவனமான பாலசுப்ரமணியம் அன் கம்பெனி என்ற பெயரில் தயாரித்து வெளியிட்ட இத்திரைப்படம், 1981ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்து, ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது அந்நிறுவனத்திற்கு.