மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆதிக்கம் தமிழ் திரையுலகில் ஒரு அசுரத் தனமான வீச்சினைக் கண்டதற்கு அஸ்திவாரமிட்டவரும், ஆணிவேராக இருந்தவரும் என்றால், அது இயக்குநர் சி ருத்ரய்யா என அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும். சேலம் மாவட்டம் ஆத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு, பின் அடையாறு திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் பிரிவில் பட்டயப் படிப்பையும் பயின்றவர்.
ஆறுமுகம் என்ற தனது இயற்பெயரை ரவுத்திரத்தின் அடையாளமாக காட்டும் வண்ணம் ருத்ரய்யா என மாற்றி அமைத்துக் கொண்டவர். திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்த காலங்களிலேயே பயிற்சிக்காக ஜெயகாந்தனின் “சிலுவை” என்ற சிறுகதையைப் படமாக்கியவர். திரைப்படக் கல்லூரி மாணவனான இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம்தான் இந்த “அவள் அப்படித்தான்”.
பெண்களைப் பற்றி டாக்குமென்டரி படம் எடுக்கும் அருண் என்ற இளைஞனுக்கு, ஒரு விளம்பரக் கம்பெனியில் ஆர்ட் டைரக்டராக பணிபுரியும் மஞ்சு என்பவள் உதவி செய்கின்றாள். பணியின் போது நிகழும் உரையாடல்கள் மூலமாக மஞ்சு, தன் தாய் தந்தையரின் அன்பை, பரிவை பெற முடியாதவள் என்றும், ஆண்களால் ஏமாற்றப்பட்டவள் என்றும், காதல், கல்யாணம், மனித உறவுகள் என அனைத்திலும் நம்பிக்கையற்றுப் போனவள் என்றும் அருண் புரிந்து கொள்கின்றான்.
நாளடைவில் மஞ்சுவின் இந்த அசாதாரணமான அணுகுமுறையே அருணுக்கு பிடித்துப் போக, அவள் மீது கொண்ட தன் காதலை அருண் பலமுறை வெளிப்படுத்த, இனியும் எந்த ஒரு ஆணிடமும் மோசம் போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கை மனநிலையில் இருக்கும் மஞ்சுவிடமிருந்து அருண் எதிர்பார்த்திருந்த பதில் கிடைக்காததால், டாக்குமென்டரி படம் எடுத்து முடிந்தவுடன் ஊருக்குத் திரும்புகின்றான் அருண்.
அருண் சென்ற பின்பு, அவனது ஆழ்ந்த அன்பைப் புரிந்து கொண்ட மஞ்சு, அவனைத் தேடிப் போகின்றாள். ஆனால் அங்கு அவனது பெற்றோர் அருணுக்கு வேறொரு பெண்ணை மணமுடித்துவிடுகின்றனர். “அவள் அப்படித்தான்” என்ற தலைப்பிற்கேற்ப, மீண்டும் மஞ்சு அதே உளவியலோடு தனிப்படுத்தப்படுகின்றாள்.
அருணாக நடிகர் கமல்ஹாசனும், மஞ்சுவாக நடிகை ஸ்ரீப்ரியாவும், விளம்பரக் கம்பெனி அதிபராக நடிகர் ரஜினிகாந்தும் நடித்திருந்த இத்திரைப்படத்தின் இசையை இளையராஜாவும், பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுத, சோமசுந்தரரேஸ்வரர், வண்ணநிலவன் ஆகியோரின் திரைக்கதை வசனத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை நல்லுசாமி, ஞானசேகரன் கவனிக்க, படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் சி ருத்ரய்யா.
வழக்கமான சினிமா மரபுகளிலிருந்து விலகி, ஒரு தனித்துவமிக்க கலைப்படைப்பாக வெளிவந்த இத்திரைப்படத்தில் பங்கு பெற்றிருந்த கலைஞர்கள் தங்களது இயல்பான நடிப்பை மிக அற்புதமாக வெளிக்காட்டியிருந்ததோடு, சிறிதும் ஒப்பனை இல்லாமலேயே நடித்திருந்தனர் என்பது கூடுதல் சிறப்பாகவே இருந்தது. 1978ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம், சென்னையில் சபையர் மற்றும் காமதேனு ஆகிய இரு திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.
படம் வெளியானபோது பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறத் தவறிய இப்படம், இயக்குநர் பாரதிராஜா, மிருணாள் சென் ஆகியோரின் நேர்மறையான விமர்சனத்திற்குப் பின், மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு, பார்க்கப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அந்த ஆண்டின் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு சினிமா விருதினைப் பெற்றதோடு, படத்தின் ஒளிப்பதிவாளர்களான சோமசுந்தரேஸ்வரர் மற்றும் நல்லுசாமி சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கான பரிசினையும், சிறந்த நடிகைக்கான பரிசினை நடிகை ஸ்ரீப்ரியவிற்கும் பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்தது இந்த “அவள் அப்படித்தான்” திரைப்படம்.
தமிழில் சிறந்த 100 திரைப்படங்களைப் பட்டியலிடச் சொன்னால், அதில் நிச்சயமாக “அவள் அப்படித்தான்” திரைப்படத்திற்கு ஒரு தனி இடம் எப்போதும் உண்டு. தனது நீண்ட கலையுலகப் பயணத்தில் வெறும் இரண்டே திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் இயக்குநர் சி ருத்ரய்யா, இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், இந்த கலையுலகம் இருமாப்புடன் பேசும் அளவு ஓர் அற்புத கலைப்படைப்பாக படைத்துவிட்டுச் சென்ற ஒரு காவியத் திரைப்படம்தான் இந்த “அவள் அப்படித்தான்”.