லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
“பயணங்கள் முடிவதில்லை” என்ற வெற்றித் திரைப்படத்தின் மூலம் தனது வெள்ளித்திரைப் பயணத்தை ஆரம்பித்தவர்தான் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன், 1980களில் வளர்ந்து வரும் நாயகர் மற்றும் நாயகியரை வைத்து படம் எடுத்து, அவைகளை வெள்ளிவிழா படங்களாக்கி வெற்றி கண்டவர் இவர். அந்த வகையில் “தூங்காத கண்ணின்று ஒன்று”, “சரணாலயம்”, “நான் பாடும் பாடல்”, “குங்குமச்சிமிழ்” என நடிகர் மோகனை வைத்து, இவர் இயக்கிய சில வெற்றிப் படங்களில் ஒன்றுதான் “மெல்லத் திறந்தது கதவு”. ஏ வி எம் பேனரில் மோகன் நடித்த முதல் படமான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கும் ரகங்களாகவே இருந்து வருவது இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் குறிப்பிடும்படியான ஒன்று.
'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன், 'இசைஞானி' இளையராஜா என்ற இந்த இரண்டு இசை ஜாம்பவான்களின் இசை வார்ப்பில் உருவான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்களுக்கான மெட்டினை எம் எஸ் விஸ்வநாதன் அமைக்க, இசைக்குழு ஏற்பாடுகளை இளையராஜா அமைத்துத் தர, பாடல்கள் அனைத்தும் தேன்மதுர கீதங்களாய் இன்றுவரை நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் இடம்பெற்ற “வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே” என்ற பாடல், 1953ல் இசையமைப்பாளர் சி ஆர் சுப்பராமனுடன் எம் எஸ் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்த “சண்டிராணி” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “வான் மீதிலே இன்பத் தேன் மாரிப் பெய்யுதே” என்ற பாடலின் தாக்கத்தில் மெட்டமைக்கப்பட்டு அது இன்றளவும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற பாடலாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றது.
ராதா, அமலா என்ற இரண்டு முன்னணி நாயகியர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ராதா வரும் காட்சிகள் எல்லாம் முதல் பாகத்திலும், அமலா வரும் காட்சிகள் எல்லாம் இரண்டாம் பாகத்திலும் வருவதாக சில நாட்கள் இத்திரைப்படம் ஓடிய நிலையில், அது ஒரு சராசரி வரவேற்பினையே பெற்றுத் தந்தது ரசிகர்களின் மத்தியில். அதன்பின்பு நடிகை ராதா வரும் காட்சிகளெல்லாம் இரண்டாம் பாகமாகவும், அமலா வரும் காட்சிகள் எல்லாம் முதல் பாகமாகவும் மாற்றி வெளியிட, ரசிகர்கள் மத்தியில் அது ஒரு நேர்மறையான வரவேற்பினைப் பெற்று, படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
மோகன், ராதா, அமலா, விசு, ஜி கே வெங்கடேஷ், எம் என் நம்பியார், கமலா காமேஷ், செந்தில், சார்லி, குண்டு கல்யாணம் என நட்சத்திர திரள்களோடு 1986ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், நடிகர் மோகன் மற்றும் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் கூட்டணியில் வெளிவந்த வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் ஒரு தனித்துவமிக்க திரைப்படமாக பார்க்கப்பட்டு வருவதுதான் இந்த “மெல்லத் திறந்தது கதவு”.