லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் |
“ராயல் டாக்கி டிஸ்டிரிபியுட்டர்ஸ்” என்ற பட நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் “சாந்த சக்குபாய்”. கொத்தமங்கலம் சீனு, கொத்தமங்கலம் சுப்பு, கணபதி பட் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில், கே அஸ்வத்தாமா நாயகியாக நடித்திருந்தார். எம் கே தியாகராஜ பாகவதரோடு இணைந்து “சிந்தாமணி” திரைப்படத்தில் சிந்தாமணியாக நடித்திருந்தவர்தான் இவர். “சாந்த சக்குபாய்” படம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், திடீரென நடிகை அஸ்வத்தாமா உடல் நலம் குன்றி, தொடர்ந்து படத்தில் நடிக்க முடியாத அளவிற்கு படுத்த படுக்கையானார். யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது படக்குழுவினருக்கு. படத்தை பாதியில் நிறுத்தினால் ஏராளமான நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும் என தயாரிப்பாளர்களும் பதறிப்போனார்கள்.
செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில், அதுவரை தமிழ் திரையுலகில் யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்யத் துணிந்து, களத்தில் இறங்கினர் படக்குழுவினர். படத்தின் நாயகி அஸ்வத்தாமாவைப் போலவே உயரம், பருமன் கொண்ட ஒரு பெண்ணைத் தேர்வு செய்து நடிக்க வைத்து, அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் தொலைதூரக் காட்சிகளாகவே படப்பிடிப்பை நடத்தி, மீதிப் படத்தை எடுத்து முடித்தார்கள். படத்தில் அஸ்வத்தாமா பாடவேண்டிய பாடலைக் கூட வி ஆர் தனம் என்ற பாடகியைக் கொண்டு பாடவைத்துப் படச்சுருளிலும் சேர்த்தார்கள். தமிழ் திரைப்படங்களில் ஒருவருக்காக இன்னொருவரின் குரலை இரவல் பெற்று 'டப்பிங்' என்ற முறையையும் அறிமுகம் செய்து வைத்த முதல் திரைப்படம் என்ற பெருமைக்கும் உரியதானது இந்த “சாந்த சக்குபாய்” திரைப்படம்.
பின்னணி பாடியவரின் பெயரை டைட்டிலில் கூட போடாமல் படத்தின் நாயகி அஸ்வத்தாமாவே பாடியதாக இருக்கட்டும் என படக்குழுவினர் விட்டுவிட, படத்தைக் கண்டுகளித்த ரசிகர்களாலும் அந்த வேற்றுமையை கண்டுபிடிக்க இயலவில்லை. பாடத் தெரிந்தவர்கள்தான் நடிகனாகவோ, நடிகையாகவோ வர முடியும் என்ற நிலைமையும் தகர்த்தெறிந்தது இந்த “சாந்த சக்குபாய்” திரைப்படம். படத்தின் இயக்குநரான சுந்தர்ராவ் நட்கர்னியின் சாதுர்யமிக்க இயக்கத்தில் 1939ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது.