நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்ததும் சொந்தமாக ஒரு படக் கம்பெனியைத் துவக்கினார் எம் கே தியாகராஜ பாகவதர். பூனே சென்று, தனது நரேந்திரா பிக்சர்ஸ்க்காக ஒரு பங்களாவைப் பிடித்துத் தங்கி, அங்கே பிரபாத் ஸ்டூடியோவில் இயக்குநர் ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் தனது “ராஜமுக்தி” படத்தின் படப்பிடிப்பைத் துவக்கினார் பாகவதர்.
அதே நேரத்தில் “முருகன் டாக்கீஸார்” என்ற பட நிறுவனம் பி யு சின்னப்பாவின் நடிப்பில் “ரத்னகுமார்” என்ற படத்தை தயாரித்து வந்தனர். அதில் பி யு சின்னப்பாவின் காதலியாக அன்றைய புதுமுக நடிகையாக இருந்த நடிகை பானுமதி நடித்து வந்தார். பானுமதி நடித்த “ஸ்வர்கசீமா” என்ற தெலுங்கு திரைப்படம் தமிழகத்தில் நன்றாக ஓடி, நடிகை பானுமதிக்கென்று ஒரு தனி ரசிகர் வட்டமே உருவாகியிருந்ததை நன்கு அறிந்திருந்த எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பாவின் “ரத்னகுமார்” வெளிவரும் முன்பே, நடிகை பானுமதியை தனது “ராஜமுக்தி” படத்தில் நடிக்க வைத்து வெளியிட்டுவிட வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதற்கிடையே நடிகை பானுமதியின் கலையுலக செல்வாக்கை மேலும் சிறப்பிக்க எண்ணி, அவரது கணவர் ராமகிருஷ்ணா “பரணி பிக்சர்ஸ்” என்ற சொந்தப் படக் கம்பெனியைத் துவக்கி, பானுமதியின் தமிழ் திரையுலக பிரவேசத்திற்கு வழிவகுத்ததோடு, அன்றைய தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகனாக அறியப்பட்ட நடிகர் டி ஆர் மகாலிங்கத்தை பானுமதியுடன் நடிக்க வைத்து “புலந்திரன்” என்ற திரைப்படத்தை தனது “பரணி பிக்சர்ஸ்” தயாரித்து வருவதாக செய்தி ஒன்றையும் வெளியிட, “புலந்திரன்” திரைப்படம் வெளிவருவதற்குள் பி யு சின்னப்பாவுடன் பானுமதியை நடிக்க வைத்து வெளியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை “ரத்னகுமார்” படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு புறமும், “ரத்னகுமார்” படம் வெளிவரும் முன்பே “ராஜமுக்தி” வெளிவந்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எம் கே தியாகராஜ பாகவதரின் அவசரம் மறுபுறமும் இருக்க, பானுமதியை ஒப்பந்தமும் செய்து பிரதான வேடத்தில் “ராஜமுக்தி”யில் நடிக்கவும் வைத்தார் பாகவதர்.
படத்தில் பானுமதிக்கு இரண்டு நடனங்கள், புதுமைப்பித்தன், டி என் ராஜப்பா வசனம் எழுத, பாபநாசம் சிவன் பாடல்கள் புனைய, சி ஆர் சுப்பராமனின் இசையில் எம் எல் வசந்தகுமாரியின் இனிய கானம், பண்டரீபுரம் பாண்டுரங்கனின் பாதாரவிந்தத்தில் பக்தி பரவசம் பொங்க பாகவதர் பாடிய பாடல் என இத்தனை அம்சங்களோடு, 1948 செப்டம்பரில் வெளிவந்த “ராஜமுக்தி” திரைப்படம் வெற்றி என்ற முக்தி நிலையை எட்டாமல் போனது. பாகவதர் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்பு வெளிவந்த இந்தப் படம் மட்டுமல்ல, அவருடைய எந்தப் படமும் வெற்றி பெறவே இல்லை என்பதுதான் உண்மை. “மூன்று தீபாவளிகளை சந்தித்த 'ஹரிதாஸ்'” என்ற பெருமையோடு எம் கே டி என்ற அந்த மூன்றெழுத்து சரித்திரமும் முடிவுற்றது.