தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலர் அவர்களது ஆரம்ப காலத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதில்லை. அவர்களுக்காக வேறு சில நடிகர்கள்தான் குரல் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் சுரேஷ், விக்ரம் உள்ளிட்டோர் அப்படி சில முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்கள்.
இப்போதைய முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையைத் தந்த படம் 1995ல் வெளிவந்த 'ஆசை'. வசந்த் இயக்கத்தில் தேவா இசையமைப்பில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், வடிவேலு மற்றும் பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். அப்படத்தில் அஜித்துக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்.
அஜித் தமிழில் அறிமுகமான 'அமராவதி' படத்திலும், அடுத்து நடித்த 'பாசமலர்கள்' படத்திலும் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் விக்ரம். அஜித்தின் அடுத்த படமான 'பவித்ரா' படத்தில் அவருக்கு சேகர் என்பவர் டப்பிங் பேசியிருந்தார். தற்போது 'புஷ்பா 2' உள்ளிட்ட படங்களில் அல்லு அர்ஜுனுக்கு டப்பிங் பேசியவர்தான் சேகர்.
இன்று அஜித்தின் குரலுக்கென்றே ஒரு தனி மவுசு உண்டு. ஆனால், ஆரம்ப காலங்களில் அவருக்கு டப்பிங் குரல்தான் பயன்படுத்தப்பட்டது.