23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
1940ல் “சத்தியவாணி” என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்த எம் ஆர் ராதா, அதன் பின்பு சினிமாவை விட்டு விலகி, மேடை நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, நாடக உலகில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு தனித்துவமிக்க நடிகராக கோலோச்சியிருந்தார். “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமி காந்தன்” போன்ற நாடகங்கள் இவரது புகழ் பெற்ற நாடகங்களில் குறிப்பிடும்படியானவை.
“பராசக்தி” படத்தின் தயாரிப்பாளரான 'நேஷனல் பிக்சர்ஸ்' பெருமாள், 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தை திரைப்படமாக எடுக்க முன்வந்து, அந்நாடகத்தை எழுதியிருந்த திருவாரூர் தங்கராசுவையே படத்திற்கு திரைக்கதை வசனத்தையும் எழுத வைத்து படமாக்கினார். நாடகத்தில் ஏற்று நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெள்ளித்திரையில் 'நடிகவேள்' எம் ஆர் ராதாவை நாயகனாக்கி அழகு பார்த்தனர் படத்தின் இயக்குனர்களான இரட்டையர் கிருஷ்ணன்-பஞ்சு.
குடிகாரன், பெண் பித்தன் இறுதியில் தொழு நோயாளி… இந்த அறுவறுக்கத்தக்க கதாபாத்திரத்தில் 'நடிகவேள்' எம் ஆர் ராதா, தனக்கே உரிய தனித்துவமிக்க உடல் மொழியோடும், நக்கல், நய்யாண்டியுடன் கூடிய கரகரத்த குரலில், ஏற்ற இறக்கத்துடன் வசனம் பேசும் தனது குரல் வளத்தாலும், இன்று வரை அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து சிறப்பித்திருப்பார்.
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்று பின்னணிப் பாடகர் சிதம்பரம் எஸ் ஜெயராமன் குரலில் பாடல் ஒலிக்க, பாடலின் இடையே, ஆம்! குற்றம் புரிந்தேன்! கொண்டவளைத் துறந்தேன்! கண்டவள் பின் சென்றேன்! என் வாழ்க்கையில் நிம்மதி ஏது? என்று 'நடிகவேள்' எம் ஆர் ராதா குரல் கொடுத்திருப்பது அந்தப் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தையே வழங்கியிருக்கும். எஸ் எஸ் ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, எம் என் ராஜம், ஜே பி சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம், 1954ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு, 'நடிகவேள்' எம் ஆர் ராதாவின் கலைப்பயணம் என்ற மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாய் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.