‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
உணர்வு பூர்வமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் சிவாஜி கணேசனின் வெள்ளித்திரைப் பயணத்தில் ஒரு உற்சாகமிகு கதை பின்னணியோடு ஒப்பற்ற நகைச்சுவைத் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “ஊட்டி வரை உறவு”.
இயக்குநர் ஸ்ரீதரின் கதை, திரைக்கதை, வசனத்திலும், அவரது இயக்கத்திலும் பல உணர்வுபூர்வமான படங்களில் நடித்திருந்த நடிகர் சிவாஜி கணேசன், ஸ்ரீதரின் “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் போல் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய ஒரு மென்மையான காதல் கதைக்கான ஸ்கிரிப்டை தனக்காக தயார் செய்யுமாறு கூறினார்.
அப்படி இயக்குநர் ஸ்ரீதரும், 'சித்ராலயா' கோபுவும் மெரினா கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் காந்தி சிலை அருகே அமர்ந்து, படத்திற்கான ஸ்கிரிப்டை விவாதித்து இரண்டே மணி நேரத்தில் முடிவு செய்யப்பட்டது தான் “ஊட்டி வரை உறவு” படக்கதை. “காதலிக்க நேரமில்லை” போல் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை எடுக்க விரும்பிய கோவை செழியன் படத்தின் தயாரிப்பாளரானார். நடிகர் முத்துராமன், நாகேஷ், டிஎஸ் பாலையா, சச்சு என “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் நடித்திருந்த சில முக்கிய நடிகர்களை இத்திரைப்படத்திலும் பயன்படுத்தியிருந்தார் இயக்குநர் ஸ்ரீதர்.
இந்தப் படத்திற்கு இவர்கள் முதலில் வைத்த பெயர் “வயசு 16 ஜாக்கிரதை” பின்னர் “வயசு 18 ஜாக்கிரதை” என மாறி, அதன்பின் “ஊட்டி வரை உறவு” என்று பெயர் வைக்கப்பட்டது. “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக வரும் நடிகர் ரவிச்சந்திரன், தன் காதலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஒரு போலியான அடையாளத்தைக் காட்டி, நடிகர் டிஎஸ் பாலையாவை ஏமாற்றுவது போல், இத்திரைப்படத்திலும் ஒரு போலியான அடையாளத்தைக் காண்பித்து நடிகர் டிஎஸ் பாலையாவை ஏமாற்றும் நாயகியாக நடிகை கேஆர் விஜயாவை நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.
“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது”, “அங்கே மாலை மயக்கம் யாருக்காக”, “பூமாலையில் ஓர் மல்லிகை”, “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி”, “ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்” என மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனின் மெல்லிசையில் இளமை ததும்பும் இனிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றன.
1967ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்த இத்திரைப்படம், பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி, சிவாஜியின் வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் ஓர் தனி இடம் பிடித்தது.