புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அது குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனை ஒரு அழிவுகரமான பிரச்சினையாக உள்ளது. இந்தியாவில் உள்ள குழந்தைகள் 28.9 சதவீத பேர் ஏதாவது ஒரு வகையான பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ஆகியவற்றை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
நம்மைச் சுற்றி இருக்கும் கொடூரமான மனிதர்கள் இடத்திலிருந்து நம்முடைய குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியம். இன்றைக்கு புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்'' என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.