மலையாள திரையுலகில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து, பின்னர் வில்லன் நடிகராக மாறி, கதாநாயகனாகவும் நடித்தவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த இவர் அந்த படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டார்கள் என்றும், விஜய்யின் நடிப்பு குறித்து விமர்சித்தும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான தசரா, சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிவிட்டார்.
இந்த நிலையில் தற்போது தனது நீண்ட நாள் தோழியும் மாடலிங் அழகியமான தனுஜா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.