ஒரு வாரத்திற்கு இரண்டு சர்ச்சைகளாவது தமிழ் சினிமாவில் வந்துவிடுகிறது. இந்த வார சர்ச்சையில் தலைப்பு சர்ச்சை ஒன்று உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா நடிக்க 'எல்ஐசி' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். அந்தத் தலைப்பு தனக்கு சொந்தம் என இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்எஸ் குமரன் தெரிவித்துள்ளார். மீறி அத்தலைப்பை வைத்தால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
'எல்ஐசி' என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தின் பெயரை அவர்களின் அனுமதி இல்லாமல் ஒரு படத்திற்குத் தலைப்பாக வைக்க முடியாது. இன்றைய 'காப்பிரைட்' யுகத்தில் பல விஷயங்களுக்கு முறையாக அனுமதி வாங்கித்தான் அவற்றைப் பயன்படுத்த முடியும். எல்ஐசி நிறுவனம் இத்தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதை யாருமே பயன்படுத்த முடியாத நிலையே ஏற்படும்.
'லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்' என்று பெயர் வைத்துள்ளோம், அதைத்தான் 'எல்ஐசி' எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம் என படக்குழுவினர் சொல்லலாம். ஆனால், படத்தின் பெயரை 'எல்ஐசி' எனக் குறிப்பிடக் கூடாது என 'எல்ஐசி' நிறுவனம் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது புகார் கூறவும் தேவைப்பட்டால் வழக்கு தொடுக்கவும் கூட முடியும். படக்குழுவினர் இனியாவது சுருக்கமாகக் குறிப்பிடாமல் முழுமையாகக் குறிப்பிடுவார்களா ?.