'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'லியோ'. ஒரு வாரத்தில் இப்படம் 461 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு பல தியேட்டர்கள் படத்தை வெளியிட முன்வரவில்லை. வினியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து 80 சதவீதத் தொகை கேட்பதாகவும் அது தங்களுக்குக் கட்டுப்படி ஆகாது என்றும் தியேட்டர்காரர்கள் மறுத்தார்கள். இந்நிலையில் கடைசி நேரத்தில் பல தியேட்டர்கள் 75 சதவீதத்திற்கு படத்தைத் திரையிட்டார்கள்.
தியேட்டர்களில் வசூலிக்கும் தொகையை வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பிரித்துக் கொள்வதுதான் டிஸ்ட்ரிபியூஷன் முறை. உதாரணத்திற்கு ஒரு தியேட்டரில் ஒரு லட்ச ரூபாய் வசூலித்துள்ளது என்றால் வினியோகஸ்தர்கள் 75 ஆயிரம் ரூபாயும், தியேட்டர்காரர்கள் 25 ஆயிரம் ரூபாயும் பிரித்துக் கொள்வார்கள்.
கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை அதிகபட்சமாக 60 சதவீதம், 40 சதவீதம் என்றுதான் இருந்தது. 'மாஸ்டர்' படம் 2021ல் வந்த போது கொரோனா காலம் என்பதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது அப்படத்திற்காக 75 சதவீதம் வரத் தருகிறோம் என தியேட்டர்காரர்கள் சம்மதித்திருக்கிறார்கள். அந்த ஒரு படத்திற்கு மட்டுமே இந்த முறை என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இப்படியான முறையை பின்பற்றியிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.
'லியோ' படத்திற்கு 75 சதவீதம், 80 சதவீதம் என வினியோகஸ்தர்கள் பங்குத் தொகை போய்விட்டதால் தியேட்டர்காரர்களுக்கு இதனால் லாபமில்லை என தமிழ்நாடு தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர்காரர்கள் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர் சங்கம் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளது. இதனால், தியேட்டர்கள் சங்கத்தினர் விரைவில் கூடிப் பேசி இது குறித்து முடிவு எடுக்க உள்ளார்களாம். தீபாவளிக்குப் பிறகு இத்தனை சதவீதம்தான் தங்களால் தர முடியும் என்ற உறுதியான முடிவை எடுக்கப் போவதாக திருப்பூர் சுப்பிரமணியன் பேசியிருக்கிறார்.
மேலும், கேரளாவில் 60 சதவீதம் அடிப்படையில் கொடுத்தவர்கள், தமிழகத்தில் மட்டும் 75, 80 சதவீதம் எனக் கொடுத்தது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'லியோ' படம் ஒரு வாரத்தில் 150 கோடி வசூலித்திருந்தால் அதில் 75 சதவீதம் என்ற கணக்கில் வினியோகஸ்தர் பங்காக சுமார் 110 கோடி வரை போயிருக்கும். தியேட்டர்காரர்களுக்கு வெறும் 40 கோடி மட்டுமே வந்திருக்கும். செலவினங்கள் போக அதில் லாபம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் திரையுலகில் சொல்கிறார்கள்.
படத்தை ஓடிடிக்கு விற்ற விதத்திலும், சாட்டிலைட் டிவிக்கு விற்ற விதத்திலும், சில ஏரியாக்களை தயாரிப்பாளரே சொந்தமாக வினியோகம் செய்த விதத்திலும் அவருக்கு நிறைய லாபம் கிடைத்திருக்கும். படத்தை வெளியிட்ட தியேட்டர்காரர்கள் பலரும் லாபத்தை எடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கிறார்கள்.
ஒரு படம் பெரும் வசூலைக் குவித்து வெற்றி பெற்றால் அது தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் என அனைவருக்கும் லாபம் தந்தால் மட்டுமே வெற்றிப் படம் என்பதுதான் திரையுலகில் ஒரு கணக்கு இருக்கிறது. அந்த விதத்தில் 'லியோ' படம் தியேட்டர்காரர்களுக்கு லாபத்தைத் தருவதை விட நஷ்டத்தைத் தந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.