''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
“தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே” என்ற தாலாட்டுப் பாடலின் மூலம் தமிழ் திரையிசை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த உற்சாகப் பின்னணிப் பாடகர் மனோவின் 58வது பிறந்த தினம் இன்று…
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் 1965ம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, ரசூல் மற்றும் ஷாகிதா தம்பதியரின் மகனாகப் பிறந்தார் மனோ. இவரது இயற்பெயர் நாகூர் பாபு.
தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர், தனது இளம் வயதிலேயே ஹார்மோனியம், பியானோ போன்ற இசைக்கருவிகளை தனது தந்தையின் மூலமாக வாசிக்கவும் கற்றுக் கொண்டார்.
இவரது தாயார் சிறந்த மேடை நாடக நடிகர் என்பதால், இவருக்குள்ளும் நடிக்கும் ஆர்வம் இருந்தது. ஆரம்ப காலங்களில் ஏனைய மேடை நாடகங்களிலும், 15க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மனோ.
பிரபல கர்நாடக இசைப் பாடகர் நேதனூரி கிருஷ்ண மூர்த்தயிடம் கர்நாடக இசையை கற்றறிந்த இவர், இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் முன் மெஹதி ஹசன், குலாம் அலி ஆகியோரின் கஸல் பாடல்களைப் பாடிக் காட்டி அவரிடம் உதவியாளராக இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தார்.
பின்னர் 1982ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் உதவியாளராக பணிபுரியத் தொடங்கினார். இந்தக் காலகட்டங்களில், ஒரு உதவியாளராக மட்டுமின்றி, அனைத்து முன்னணி பாடகர்களுக்கும் டிராக் பாடும் பாடகராகவும் இருந்து வந்தார் மனோ.
1984ம் ஆண்டு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியின் இசையில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான “கற்பூர தீபம்” என்ற படத்தில், எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் பி சுசிலாவுடன் இணைந்து மூன்றாவது குரலாக இவர் பாடியது, திரையிசைத் துறையில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்ததோடு மட்டுமின்றி, இவர் பாடிய முதல் திரைப்பட பாடலாகவும் அமைந்தது.
1985ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட படமொன்றிற்குப் பாடி, பின் 1986ல் இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த “பூவிழி வாசலிலே” திரைப்படத்தில் இடம்பெற்ற “அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே” என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கும் ஒரு பின்னணிப் பாடகராக அறிமுகமானார் மனோ.
இதனைத் தொடர்ந்து “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “வேலைக்காரன்”, “எங்க ஊரு காவல்காரன்”, “ராஜாதி ராஜா”, “நாயகன்”, “சின்னதம்பி” என ஏனைய படங்களில் ஏராளமான பாடல்கள் இளையராஜாவின் இசையில் பாடி தமிழ் திரையிசையில் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார்.
1990களில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வருகைக்குப் பின் தமிழ் திரையிசையில் ஒரு புதிய மாற்றம், மேற்கத்திய இசையின் தாக்கம் என்று வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், “காதலன்” திரைப்படத்திற்காக, சற்று வேறுவிதமாக குரல் மாற்றம் செய்து பாடும்படி ஏஆர் ரஹ்மான் கேட்டதிற்கிணங்க, பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் ஆர்டி பர்மன் குரலின் சாயலில் இவர் பாடிய “முக்காலா முக்காபுலா லைலா” என்ற பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு, ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்த பாடலாகவும் அமைந்தது.
தொடர்ந்து “உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படத்திற்காக “அழகிய லைலா அது இவளது ஸ்டைலா” என்ற பாடலை சிற்பியின் இசையிலும், “கர்ணா” திரைப்படத்திற்காக “ஏ ஷப்பா ஏ ஷப்பா நெனச்ச கனவு பலிக்காதா?” என்ற பாடலை வித்யாசாகர் இசையிலும் குரல் மாற்றம் செய்து பாடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார் மனோ.
“சிங்காரவேலன்”, “எனக்கு 20 உனக்கு 18”, “வெற்றிச்செல்வன்” போன்ற ஒரு சில தமிழ் படங்களில் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஓரிரு தெலுங்கு திரைப்படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து, தயாரித்து, வெளியிட்டு, தயாரிப்பாளராகவும் காட்டிக் கொண்ட மனோ, நடிகர் ரஜினிகாந்த் நடித்து, தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பல படங்களுக்கு ரஜினிக்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
“தமிழ்நாடு அரசு சினிமா விருது”, “கலைமாமணி விருது”, நந்தி விருது உட்பட பல மாநில விருதுகளையும் வென்ற பின்னணிப் பாடகர் மனோ, தனது நீண்ட நெடிய கலைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, ஹிந்தி என 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஏறத்தாழ 35,000 பாடல்கள் வரை பாடியிருக்கின்றார்.
பின்னணிப் பாடகர், டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், போட்டி இசை நிகழ்ச்சிகளின் நடுவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என அசாத்திய திறமை கொண்ட இந்த பண்முகத்தன்மை வாய்ந்த திரையிசைக் கலைஞனின் பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொண்டு அவரை வாழ்த்துவதில் நாம் மனம் நிறைவு கொள்வோம்.