வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது என ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த சி.வி.குமார் 2017ல் மாயவன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். மாநகரம் புகழ் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாக நடித்திருந்தார். சயின்ஸ் பிக்சன் திரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தின் கதைக்கரு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதிலும் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, சி.வி குமாரே இந்த படத்தையும் இயக்குகிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. வரும் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது,
தெலுங்கில் தற்போது இந்த படத்திற்கு 'ப்ராஜெக்ட் Z' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான போலா சங்கர் திரைப்படத்தை தயாரித்த அனில் சுங்கரா இந்த படத்தை இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜையில் கலந்து கொண்ட சி.வி குமார் மீண்டும் சந்தீப் கிஷனுடன் இணைந்துள்ளது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.