''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நல்ல கல்வி ஞானம் கொண்ட அறிஞர்கள், செல்வ சீமான்கள் மட்டுமே தயாரிப்பாளர்களாகவும், இயக்குனர்களாகவும் இருந்து வந்த தமிழ் திரையுலகின் ஆரம்ப காலங்களில், பெரிதாக படிப்பும், பண வசதியுமின்றி ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்து பின் வெள்ளித்திரையில் நுழைந்து, இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஏராளமான படங்களை தயாரித்து, மாபெரும் தயாரிப்பாளராக உயர்ந்த, கொங்கு மண்டலம் தந்த தங்க தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் அவர்களின் 108வது பிறந்த தினம் இன்று…
கொங்கு மண்டலமான கோயம்புத்தூரிலுள்ள ராமநாதபுரத்தில், 1915ம் ஆண்டு ஜுன் 28 அன்று, அய்யாவு தேவர் மற்றும் ராமாக்காள் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர்தான் மருதமலை மருதாச்சலமூர்த்தி அய்யாவு சின்னப்ப தேவர் என்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.
மில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததோடு, தனது சகோதரரோடு தெருகூத்து நாடகங்களிலும் நடித்து வந்த சின்னப்ப தேவருக்கு சினிமாவிலும் நடிக்கும் ஆசை வந்தது.
தேகப் பயிற்சியிலும் அதீத ஆர்வம் கொண்ட சின்னப்ப தேவர், பல சினிமா கம்பெனிகளுக்கு கடிதம் வாயிலாக வாய்ப்பு தேடி வந்த போது, நடிகர் சாரங்கபாணியின் அறிமுகம் கிடைத்து, அதன் மூலம் “திலோத்தமை” என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றார்.
தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் தோன்றி நடித்து வந்த சின்னப்ப தேவருக்கு, அன்று வளர்ந்து வரும் நடிகராக இருந்த எம் ஜி ஆரின் அறிமுகம் கிடைத்தது. தான் நடிக்கும் படங்களில் சின்னப்ப தேவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கச் செய்தார் எம் ஜி ஆர்.
ஒரு படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்ததன் அனுபவம், சின்னப்ப தேவரை சொந்தமாக படம் தயாரிக்க உத்வேகப்படுத்தியது.
“தேவர் பிலிம்ஸ்” என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, 1956ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நாயகனாக நடிக்க “தாய்க்குப் பின் தாரம்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார் சின்னப்ப தேவர். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது தேவருக்கு.
தொடர்ந்து “நீலமலைத் திருடன்”, “செங்கோட்டை சிங்கம்”, “வாழவைத்த தெய்வம்”, “யானைப்பாகன்”, “கொங்கு நாட்டுத் தங்கம்”, என இவரது தயாரிப்பில் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன.
திரைப்படங்களில் யானை, குதிரை, சிங்கம், ஆடு, மாடு, பாம்பு என ஏராளமான விலங்குகளையும், பிராணிகளையும் பயன்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என்ற உத்தியை கையாண்டு பெரும் வெற்றி பெற்ற தயாரிப்பாளராக அறியப்பட்டார்.
ஏ வி மெய்யப்ப செட்டியார், எஸ் எஸ் வாசன், பி நாகிரெட்டி போன்ற ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் எம் ஜி ஆரை நாயகனாக வைத்து “தாய் சொல்லைத் தட்டாதே” தொடங்கி “நல்ல நேரம்” வரை 16 படங்கள் தயாரித்த பெருமைக்குரிய தயாரிப்பாளராகவும் உயர்ந்திருந்தார் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.
தனது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு படத்தின் பூஜை அன்றே அவர்களின் ஊதியத்தின் முழுத் தொகையையும் கொடுத்து மொத்த கால்ஷீட்டையும் வாங்கி குறித்த நேரத்தில் படத்தை எடுத்து வெளியிடுவதில் திறமை வாய்ந்தவர் சின்னப்ப தேவர். அதற்கு காரணம் அவரது நேரம் தவறாமை.
1967ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் தேவரின் “தண்டாயுதபாணி பிலிம்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த “மகராசி” என்ற திரைப்படத்தின் மூலம் சங்கர்-கணேஷ் என்ற இரட்டையர்களை இசையமைப்பாளர்களாக அறிமுகம் செய்து வைத்தார் சின்னப்ப தேவர்.
தமிழில் படங்களை தயாரித்து வெற்றி கண்ட சின்னப்ப தேவர், ஹிந்தியிலும் படங்களை தயாரிக்க முற்பட்டார்.
1970ஆம் ஆண்டு நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் தனுஜா நடிப்பில் “ஹாத்தி மேரே சாத்தி” என்ற படத்தை தயாரித்து பாலிவுட் திரையிலும் தனது வெற்றிக் கணக்கை துவக்கினார் சின்னப்ப தேவர்.
தொடர்ந்து “ஜான்வர் அவுர் இன்ஸான்”, “காய் அவுர் கோரி”, “சுப் தின்”, “ராஜா”, “மா”, “மேரா ரக்ஷக்” என்று ஹிந்தியிலும் இவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.
“ஹாத்தி மேரே சாத்தி” ஹிந்தி படத்தை தமிழில் “நல்ல நேரம்” என்ற பெயரில் எம் ஜி ஆரை வைத்து எடுத்து மிகப் பெரிய வெற்றிப்படமாக்கினார். தேவரின் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த ஒரே வண்ணப்படமும், கடைசிப் படமுமாக அமைந்தது இத்திரைப்படம்.
1977க்குப் பிறகு எம் ஜி ஆர் தமிழக முதல்வர் ஆனபின் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க முற்பட்டார் தேவர். 1978ல் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடிப்பில் “தாய் மீது சத்தியம்” என்ற திரைப்படத்தை முழுவீச்சாக எடுத்து முடித்தார்.
தேவர் தயாரித்த கடைசி திரைப்படமான “தாய் மீது சத்தியம்” திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, அவருடைய இஷ்ட தெய்வமான முருகனின் திருவடி நிழலை சென்றடைந்தது அவரது ஆன்மா. முருகனுக்குரிய சஷ்டி திருநாளன்று அவரது உயிர் பிரிந்தது.
சாமானியனாய் பிறந்து ஒரு சாதனை படைப்பாளியாய் உயர்ந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவரின் பிறந்த தினமான இன்று அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்வோம்.