இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சினிமா என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்பவர்கள் உண்டு. ஒரு முறை அதன் உள்ளே வந்தவர்கள் மீண்டும் வெளியில் போவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த தயாரிப்பாளர்கள் கூட ஒரு சில தோல்விகளால் சினிமாவே வேண்டாமென ஒதுங்கிய வரலாறும் இங்குண்டு.
பழம் பெரும் நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் கூட சினிமா தயாரிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டது. தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சுத்தமாக படங்களைத் தயாரிப்பதே இல்லை. கவிதாலயா, சூப்பர்குட் போன்ற நிறுவனங்களும் பரபரப்பில் இருந்து ஒதுங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.
நேற்று வெளியான தயாரிப்பாளர் விஏ துரையின் வீடியோ திரையுலகத்தில் மட்டுமல்ல சினிமா ரசிகர்களிடமும் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சத்யராஜுக்குப் பெரும் திருப்புமுனையாகவும், மறுவாழ்வாகவும் அமைந்த 'என்னம்மா கண்ணு' படம்தான் தயாரிப்பாளர் விஏ துரை தயாரித்த முதல் படம். தொடர்ந்து சத்யராஜ் நடித்த 'லூட்டி, விவரமான ஆளு' ஆகிய படங்களையும், கார்த்தி நடித்த 'லவ்லி' படங்களையும் தயாரித்தார். அந்தப் படங்கள் கூட அவருக்கு நஷ்டத்தைத் தரவில்லை.
ஆனால், அதன்பிறகு தயாரித்த 'பிதாமகன்', 'கஜேந்திரா' ஆகிய படங்கள் பெரும் நஷ்டத்தைத் தந்துள்ளன. பாலா இயக்கத்தில், விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா மற்றும் பலர் நடித்த 'பிதாமகன்' படம் தயாரிப்பாளர் துரைக்கு பட்ஜெட்டை மீறிய செலவைக் கொடுத்துள்ளது. அந்தப் படத்திற்காக பல பஞ்சாயத்துகளை அவர் சந்திக்க வேண்டி வந்தது.
அப்படி ஒரு முறை பஞ்சாயத்திற்காக அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை சந்தித்த போது அவர் சொல்லி துரை தயாரித்த படம்தான் 'கஜேந்திரா'. தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடித்து வெளிவந்த 'சிம்மாத்ரி' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'கஜேந்திரா'. தமிழில் பெரும் தோல்வியைத் தழுவியது.
அந்த இரண்டு படங்களின் நஷ்டங்களிலிருந்து துரை மீள முடியவில்லையாம். 'பிதாமகன்' படத்தின் போதே இயக்குனர் பாலாவிடம் அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். சில மாதங்களுக்கு முன்பு அந்த அட்வான்ஸ் பணத்தைக் கேட்டு அவரை பாலா வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். சினிமாவில் வாங்கிய அட்வான்ஸ்களை திருப்பித் தரும் பழக்கமெல்லாம் பலருக்கும் இல்லை என்கிறார்கள்.
தனது குடும்பத்தினராலும் ஒதுக்கப்பட்ட விஏ துரை தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். அவருடைய ஒரு காலையும் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என்கிறார்கள். தற்போது மருத்துவ செலவுகளுக்குக் கூடப் பணம் இல்லாததால் தான் அவர் பேசிய வீடியோவை அவரது நண்பர்கள் பகிர்ந்துள்ளார்கள்.
'பிதாமகன்' படத்தில் நடித்த சூர்யா, துரையின் மருத்துவமனை செலவுக்கான பில் தொகையை செட்டில் செய்து கொடுத்துள்ளாராம். மேலும் சில தயாரிப்பாளர்கள், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட சிலரும் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். திரையுலகத்திலிருந்து இன்னும் பலரும் உதவி செய்யத் தயாராக உள்ளார்களாம்.
தங்களது எதிர்காலத்திற்காக ஒரு சிறு தொகையைக் கூட சேர்த்து வைக்காத நிலையில் சில தயாரிப்பாளர்கள் இருப்பது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சினிமா பல பணக்காரர்களை உருவாக்குகிறது. அதே சமயம் பணக்காரர்களை ஏழைகளாகவும் ஆக்கிவிடுகிறது.