''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஒவ்வொரு ஆண்டும் வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள். ஆனால் அந்தப் படங்களைப் பற்றி அடுத்த சில வருடங்களில் மறந்து போய்விடுவார்கள். அதே சமயம், வசூல் பெறவில்லை என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதிக்கும் படங்களாக சில படங்கள் இருக்கும். இந்த ஆண்டிலும் அப்படி சில படங்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றியும் கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும்.
1. கடைசி விவசாயி
தயாரிப்பு - டிரைபல் ஆர்ட்ஸ்
இயக்கம் - மணிகண்டன்
இசை - சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி
நடிப்பு - நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு
வெளியான தேதி - 11 பிப்ரவரி 2022
விவசாயம்தான் தனது வாழ்க்கை, உயிர் மூச்சு என நினைத்து வாழும் ஒரு வயதான ஏழை விவசாயி சந்திக்கும் சில கஷ்டங்களைச் சொன்ன படம். 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம். நல்லாண்டி என்ற முதியவர் கதையின் நாயகனாக யதார்த்தமாக நடித்திருந்தார். மனநிலை தடுமாறி ஊர் ஊராகச் சுற்றும் ஒரு நாடோடியாக விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விவசாயத்தைப் பற்றி வந்த விதவிதமான படங்களில் ஒரு விவசாயியின் வாழ்க்கையை அழுத்தமாய்ப் பதிவு செய்த படம் இந்த 'கடைசி விவசாயி'.
2. நெஞ்சுக்கு நீதி
தயாரிப்பு - ஜி ஸ்டுடியோஸ், பே வியு புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இயக்கம் - அருண்ராஜா காமராஜ்
இசை - திபு நினன் தாமஸ்
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், தன்யா, ஷிவானி
2019ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். தலித் மக்களின் பிரச்சினை, அவர்கள் சார்ந்த அரசியல் ஆகியவற்றைப் பேசிய படம். தனது இமேஜை இந்தப் படம் உயர்த்தும் என்று தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் உதயநிதி. ஒரு த்ரில்லர் கதைக்குள் சாதிய பிரச்சினைகளைச் சேர்த்துக் கொடுத்து கவனிக்க வைத்தார்கள். தமிழுக்காக சில பல மாற்றங்களைச் செய்யாமல் ஒரிஜனலை அப்படியே கொடுத்திருந்திருந்தால் இன்னும் அதிகம் பேசப்பட்டிருக்கும்.
3. ராக்கெட்ரி
தயாரிப்பு - டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - மாதவன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - மாதவன், சிம்ரன்
வெளியான தேதி - 1 ஜுலை 2022
வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வெற்றிப் படம்தான் என படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்த மாதவன் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றி திரவ எரிபொருள் விண்வெளி எஞ்சினைக் கண்டுபிடித்த நம்பி நாராயணன் பற்றிய பயோபிக் படமாக வெளிவந்த படம். ராக்கெட் ரகசியங்களை விற்றதாகக் கூறி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகே அவர் குற்றமற்றவர்கள் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. 90களில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்காக இருந்தது. இயக்குனராகவும் தனது திறமையை நிரூபித்து தனி கவனம் பெற்றார் மாதவன்.
4. கார்கி
தயாரிப்பு - பிளாக்கி, ஜெனி, மை லெப்ட் பூட் புரொடக்ஷன்
இயக்கம் - கௌதம் ராமச்சந்திரன்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - சாய் பல்லவி, காளி வெங்கட்
வெளியான தேதி - 15 ஜுலை 2022
சினிமா மீது கனவு கொண்ட தங்களது நண்பனுக்காக சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து தயாரித்த படம் 'கார்கி'. அந்த தயாரிப்பு நண்பர்களில் 'பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி' படங்களில் நடித்த ஐஸ்வர்ய லெட்சுமியும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கதையை இந்தப் படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்சை வைத்து ரசிக்க வைத்தார்கள். சாய் பல்லவியின் நடிப்பிற்காக இந்த ஆண்டிற்கான சில விருதுகள் அவருக்குக் கிடைத்தே ஆக வேண்டும்.
5. இரவின் நிழல்
தயாரிப்பு - பயாஸ்கோப் யுஎஸ்ஏ, அகிரா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பார்த்திபன்
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - பார்த்திபன், பிரிகிடா சகா
வெளியான தேதி - 15 ஜுலை 2022
வித்தியாசமான படங்களை எடுப்பதையே வழக்கமாகக் கொண்ட பார்த்திபன் இயக்கம் நடிப்பில் வந்த படம். ஏஆர் ரகுமான் இசை என்பது படத்தின் கூடுதல் பலம். ஆசியாவின் முதல் “நான் லீனியர் சிங்கிள் ஷாட்'' திரைப்படமாக உருவான படம். இப்படத்திற்காக 50 அரங்குகள் அமைக்கப்பட்டது. 22 முறை முழு படத்தையும் ஒரே ஷாட்டில் படமாக்க முயற்சித்து ஏதோ ஒரு தவறால் நடக்காமல் போய் 23வது முறையில் வெற்றிகரமாக எடுத்து முடித்தார்கள். இப்படி ஒரு முயற்சியை எடுத்ததற்காகவே இயக்குனர் பார்த்திபனை பாராட்டியே ஆக வேண்டும்.
6. கட்டா குஸ்தி
தயாரிப்பு - விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ஆர்டி டீம் ஒர்க்ஸ்
இயக்கம் - செல்லா அய்யாவு
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ்
வெளியான தேதி - 2 டிசம்பர் 2022
சினிமா என்பதே கதாநாயகர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறை. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனை விடவும் கதாநாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஒரு கலகலப்பான படம் என்று சொன்னாலும் சாதிப்பதற்குத் திருமணம் ஒரு தடையல்ல என பெண்களை முன்னிறுத்தி முத்தாய்ப்பாய் சொன்ன ஒரு படம். இப்படத்திற்கு இன்னும் அதிகமான வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்திருக்க வேண்டும். தயாரித்து நடித்த விஷ்ணு விஷால், குஸ்தி வீராங்கனையாக நடித்த ஐஸ்வர்ய லெட்சுமி இந்தப் படத்திற்காக எப்போதும் பேசப்படுவார்கள்.
7. முதல் நீ முடிவும் நீ
தயாரிப்பு - சூப்பர் டாக்கீஸ்
இயக்கம் - தர்புகா சிவா
இசை - தர்புகா சிவா
நடிப்பு - ஹரிஷ், கிஷன் தாஸ், மீதா ரகுநாத்
வெளியான தேதி - 21 ஜனவரி 2022 (ஓடிடி)
பள்ளி வாழ்க்கையில் டீன் ஏஜ் வயதில் வரும் காதலைப் பற்றிச் சொன்ன எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வந்ததுண்டு. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே கவனத்தை ஈர்த்த படங்களாக அமைந்தது. அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரு படம் இது. இயக்குனர் தர்புகா சிவா கதைக்குப் பொருத்தமான நட்சத்திரங்களைத் தேர்வு செய்து ஒரு யதார்த்தமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார். தியேட்டர்களில் வெளியாகி இருக்க வேண்டிய படம், ஓடிடி தளத்தில் வெளியானதால் அதிகப் பேரிடம் சென்று சேராமல் போய்விட்டது.
8. டாணாக்காரன்
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - தமிழ்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - விக்ரம் பிரபு, லால், அஞ்சலி நாயர்
வெளியான தேதி - 8 ஏப்ரல் 2022 (ஓடிடி)
தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன. ஆனால், போலீஸ் பயிற்சி பற்றிய படங்கள் வந்ததில்லை. காவலர் பயிற்சிப் பள்ளியில் எந்த விதமான பயிற்சிகள் நடக்கும், அங்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் இருக்கும் என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சொன்ன படம். இவ்வளவு சிக்கல்களை மீறி ஒருவர் போலீஸ் வேலைக்குத் தேர்வாகி பணிக்கு வர வேண்டும் என்பதைப் பார்த்த போது பலரும் மிரண்டு போனார்கள். இந்தப் படமும் தியேட்டர்களில் வெளியாகி இருக்க வேண்டிய ஒரு படம்.
இந்த 2022ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் மட்டும் 200 படங்கள் வரை வெளிவந்தன. ஓடிடி தளங்களில் 27 படங்கள் வரை வெளிவந்தன. தியேட்டர்களில் வெளியான படங்களில் வசூல் ரீதியாக பத்துப் பதினைந்து படங்கள்தான் லாபத்தைக் கொடுத்திருக்கும். ஓடிடி தளங்களில் நான்கைந்து படங்கள்தான் பலராலும் ரசித்துப் பார்க்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட படங்கள் ஒரு வகை என்றால், மேலே நாம் குறிப்பிட்ட சில படங்கள் விமர்சன ரீதியாக அதிக வரவேற்பைப் பெற்ற படங்கள். இந்தப் படங்கள் இப்போது அதிகம் பேசப்படாமல் போனாலும், சில வருடங்களுக்குப் பிறகு பெரிதும் பாராட்டப்படும் படமாக அமையும்.