''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2022ம் ஆண்டு இனிதே முடிந்து இன்று 2023ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி, முக்கிய ஹீரோக்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளிவருதே அதற்குக் காரணம். அதனால், சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ரசிகர்கள் கொண்டாடக் கூடிய, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படிப்பட்ட சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம். இளம் இயக்குனரான நெல்சனுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக வெளியான போஸ்டர்கள் அதை இன்னும் அதிகமாக்கியது. கடந்த வருடம் ரஜினிகாந்த் நடித்த படம் எதுவும் வராததால் ஏமாற்றத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு 'ஜெயிலர்' எப்போது வரும் என ஏக்கத்தில் உள்ளனர்.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம். சுமார் இரண்டு வருட காலம் படப்பிடிப்பு தடைபட்டு, அதன்பின் ஆரம்பமாகி படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் 400 கோடி வசூலித்து பெரிய சாதனை படைத்தது. 'இந்தியன் 2' படத்தில் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணி என்பதால் 'விக்ரம்' சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வாரிசு
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள படம். குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது உள்ளது. விஜய்யின் முந்தைய பட வசூல் சாதனைகளை இப்படம் முறியடிக்கும் என்று பாக்ஸ் ஆபீஸிலும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார் தயாரிப்பாளர்.
துணிவு
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளிவரும் படம். 'நேர்கொண்ட பார்வை, வலிமை' என இரண்டு படங்களுமே இந்தக் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. ஆனால், 'துணிவு' அதைத் தரும் என நம்புகிறார்கள். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்ஷன் படமாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடலாம்.
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்ள படம். இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்து 500 கோடி வசூலைக் கடந்தது. இந்த இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அதிகமான வசூல் சாதனை படைக்கும் என இப்போதே சொல்லிவிடலாம்.
தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம். கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவுக்கு அருகில் உள்ள கோலால் தங்க வயலில் அந்தக் காலத்தில் தமிழர்கள் எப்படியெல்லாம் உழைத்தார்கள், கஷ்டப்பட்டார்கள் என்பதைச் சொல்லும் படமாக ஒரு பீரியட் படமாக உருவாகி வருகிறது. பா ரஞ்சித், விக்ரம் கூட்டணி முதல் முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யா 42
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இருவரும் சில வருடங்களுக்கு முன்பே இணைந்திருக்க வேண்டியது. தற்போது இந்தக் கூட்டணியில் உருவாகி வரும் படம் சரித்திரப் படமாகவும் படமாகி வருகிறது. பத்து மொழிகளில் படத்தை வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இந்த வருடத்தின் பிரம்மாண்டப் படங்களில் இதுவும் ஒன்றாக அமையலாம்.
ஜப்பான்
இயக்குனர் ராஜு முருகன், கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் படம். வழக்கமான இயக்குனராக இல்லாமல் மாறுபட்ட படங்களைக் கொடுத்துள்ள ராஜு முருகன், கார்த்தி இப்படத்தில் இணைந்திருப்பது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கார்த்தி நடித்து வெளிவந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.
வாத்தி
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் தனுஷ் நடித்து மூன்று படங்கள் வெளிவந்து ஒன்று மட்டுமே வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் தனுஷின் முதல் படமாக வெளிவர உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
கேப்டன் மில்லர்
“ராக்கி, சாணி காயிதம்” படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம். தனது முதல் இரண்டு படங்களை வன்முறை கலந்த ஆக்ஷன் படமாகக் கொடுத்தவர் அருண். முதல் முறையாக ஒரு முன்னணி நடிகருடன் இணைந்துள்ளார். பீரியட் படமாக உருவாகி வரும் இப்படம் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பத்து தல
கன்னடத்தில் வெளியான 'முப்தி' படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் படம். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சில பல சிக்கல்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. மார்ச் 30ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
மாவீரன்
'மண்டேலோ' படத்தை இயக்கிய மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படங்களில் 'டான்' வெற்றிப் படமாகவும், 'ப்ரின்ஸ்' தோல்விப் படமாகவும் அமைந்தது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த மடோனா அஷ்வின் - சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் புதிய கூட்டணி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வெளிவந்த பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்து வரும் படம். இருவருமே இப்படத்தில் இரு வேடங்களில் நடிப்பதாகத் தகவல். கடந்த சில படங்களாகவே வெற்றிக்காகத் தடுமாறி வரும் விஷாலுக்கு இப்படம் நிச்சயம் நல்ல வெற்றியைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ளவை சில முக்கிய படங்கள். இந்தப் படங்களுடன் இன்னும் பல படங்கள் 2023 வெளியீட்டிற்காகத் தயாராகி வருகிறது. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் 1500 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்தது. இந்த 2023ம் ஆண்டில் பல பிரம்மாண்டமான படங்கள், முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவர உள்ளதால் அந்த வசூல் 2000 கோடியை நிச்சயம் தாண்ட வாய்ப்புள்ளது. வசூல் மட்டுமே சினிமா அல்ல, நல்ல வரவேற்பைத் தரக் கூடிய படங்களும் வர வேண்டும் என்பதுதான் சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.