வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'வாரிசு' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி…' பாடல் நேற்று யு டியூபில் வெளியானது. விவேக் எழுதிய இந்தப் பாடலை சிலம்பரசன் பாடியுள்ளார்.
கடந்த மாதம் வெளியான முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் 85 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நேற்று வெளியான இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி..' பாடல் ஒரே நாளில் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பாடல் தீப் பொறி பறக்கும் விதத்தில் அதிரடியாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். விஜய் படத்தின் பாடல்கள் என்றாலே எப்போதுமே ஹிட் தான் என ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் இதுவரை வெளியான இரண்டு பாடல்களிலும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.
விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அது போல சினிமாவில் பல பாடல்களைப் பாடியுள்ள சிலம்பரசன், விஜய் நடிக்கும் ஒரு படத்தில் பாடியிருப்பதும் இதுவே முதல் முறை. அதனால், விஜய் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் இணைந்து அந்தப் பாடலைக் கொண்டாடி வருகிறார்கள்.