நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்த் திரையுலகில் இன்றைய முன்னணி வசூல் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக குட்டீஸ்களின் மனம் கவர்ந்த நடிகராக இருக்கிறார் விஜய்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்து 2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படம்தான் அவருடைய முதல் 100 கோடி வசூல் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2012ம் ஆண்டு தீபாவளி நாளான நவம்பர் 13ல் வெளிவந்த படம்.
ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றும் விஜய், மும்பையில் 'ஸ்லீப்பர் செல்' தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட மிகப் பெரிய தாக்குதலை தனது ராணுவ நண்பர்கள் துணையுடன் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. புதிய கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, விஜய், காஜல் அகர்வால் காதல், ஆங்காங்கே இயல்பான நகைச்சுவை என கமர்ஷியல் படமாகவும் அமைந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அழகான ஒளிப்பதிவு, அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியவற்றுடன் அற்புதமான 'ஐ யாம் வெயிட்டிங்' என்ற இடைவேளை என படத்தில் பல விஷயங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
'துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஆர் முருகதாஸ் கூட்டணி 'கத்தி, சர்க்கார்' ஆகியவற்றிலும் இணைந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது. 'துப்பாக்கி' போன்ற மற்றுமொரு மாறுபட்ட படத்தை அக்கூட்டணி மீண்டும் தருமா என ரசிகர்கள் இப்போதும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
'துப்பாக்கி'யில் ஆரம்பமான விஜய்யின் 100 கோடி பயணம் தொடர்ந்து பல 100 கோடிகளையும், அதற்கு மேலும் தந்து அவரை வசூல் நாயகனாக உயர்த்தியுள்ளது.