2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தென்னிந்திய திரை உலகில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சீரான இடைவெளிகளில் படங்களில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நித்யா மேனன், தனுஷுடன் இணைந்து நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக மலையாளத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடித்த 19(1)ஏ என்கிற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் தொடர்பான பேட்டியின்போது தன்னை ஒரு சினிமா விமர்சகர் கடந்த ஆறு வருடமாக தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.
இதற்கு முன்னதாக இணையதள சினிமா விமர்சகர் ஒருவர், தான் நித்யா மேனனை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சோசியல் மீடியாவில் பேசி வந்தார். இதை தொடர்ந்து தான், நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற தகவலும் சோசியல் மீடியாவில் வெளியானது. அதை அவர் அப்போது மறுத்தும் இருந்தார்.
இந்த நிலையில் இந்த பேட்டியில் சம்பந்தப்பட்ட அந்த சினிமா விமர்சகர் தன்னை விமர்சனம் என்கிற பெயரிலும் காதலிக்கிறேன் என்கிற பெயரிலும் கடந்த ஆறு வருடங்களாக டார்ச்சர் செய்து வருகிறார் என்றும் இதுவரை 30 மொபைல் எண்களிலிருந்து மாறி மாறி தன்னை அழைத்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் என்றும் கூறியுள்ளார் நித்யா மேனன். அதுமட்டுமல்ல தனது பெற்றோர்களிடமும் அவர் தொலைபேசியில் பேசி அவர்களுக்கும் மன நிம்மதி இழக்கும் விதமாக நடந்து கொண்டார் என்றும் கூறியுள்ள நித்யா மேனன், பலரும் அவர் மீது போலீசில் புகார் கொடுக்கும்படி கூறினார்கள், ஆனாலும் நான் அவரை மன்னித்து விட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
நித்யா மேனனின் இந்த பேட்டியை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த விமர்சகர் கூறும்போது, “நான் நித்யா மேனனை காதலித்தேன்.. இந்த தகவலை அவரது பெற்றோரிடம் கூறியபோது அவரது தாய், நித்யா மேனனுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று கூறினார். ஆனால் அவரது தந்தையோ இன்னும் தன் பெண்ணுக்கு வரன் பார்க்கவில்லை என்று கூறினார். நான் தற்போது இதிலிருந்து ஒதுங்கி என்னுடைய வேலைகளை பார்த்து வருகிறேன். என் மீது நித்யா மேனன் பாலியல் புகார் அளிக்க இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
நித்யா மேனன் இப்படி கூறியதைத் தொடர்ந்து, எதற்காக ஆறு வருடங்களாக ஒரு நபரின் டார்சரை நித்யா மேனன் சகித்துக்கொண்டார்.. எதற்காக அவர் ஆரம்பத்திலேயே போலீஸில் புகார் செய்யவில்லை. இவ்வளவு தூரம் டார்ச்சர் செய்த அந்த நபரை மன்னித்து விட்டேன் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று நெட்டிசன்கள் பலவாறு கருத்து கூறி வருகின்றனர்.